Saturday, December 28, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (32)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள் 32



புத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.....!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்....!!

மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 28.12.2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், மதுக்கடைகளை மூட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கையின் விவரம் இதோ....

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ. 250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

தாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.


ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில்  அதிகரித்த பிறகு தான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் வழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.


இந்த தகவல்கள்  மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

அதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர்  உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மது போதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


அதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது.

இத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும்  ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும்.

மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும்,  மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


அவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல.

எனவே, மக்களின் நலன்கருதி  புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.

டாக்டர் ராமதாசின் வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: