" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " நாள்: 16
சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் மது விற்பனைக்கு தடை....!
சிங்கப்பூர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.12.2013) அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு தமிழர் உயிரிழந்தார். இதையடுத்து அங்குள்ள சில ஆசிய தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறையில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கலவரத்தை தொடர்ந்து வார இறுதியில் லிட்டில் இந்தியா பகுதியில் மது அருந்துதல் மற்றும் மது விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது ஒழுங்கு ( பாதுகாப்பு ) சட்டத்தின் கீழ் வார இறுதியில் அறிவிக்கப்பட்ட பகுதியில் யாரும் மது அருந்தக் கூடாது என்றும் மது விற்பனை செய்யக் கூடாது என்றும் போலீஸ் துணை கமிஷனர் டி.ராஜாகுமார் தெரிவித்துள்ளார்.
சுமார் 1.1 சதுர கி.மீ. பகுதியில் மது விற்கவும் அல்லது மது அருந்தவும் அனுமதி இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட பகுதியில் மது குடித்துவிட்டு அல்லது ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி கைது செய்ய முடியும் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடை பற்றிய செய்தியை சிலர் தவறாக புரிந்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுவை தூக்கி போட்டுவிட்டு அமைதியாக நடந்து செல்வது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்றும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
மது அருந்தாமல் இருந்தால் லிட்டில் இந்தியா பகுதியில் எல்லாம் நன்றாக நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தடை இந்திய வம்சாவளி வணிகங்கள் உள்ள பகுதியில் அமலில் இருக்கும் என்றும், இதனை Serangoon சாலை பகுதியில் 374 நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. .
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிலைமையை சீர்செய்யவும், அமைதியை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் தேவை என்றும் சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.
மது விற்பனை மற்றும் அருந்துவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து நிலைமையை ஆய்வு செய்த பிறகு அரசு முடிவு எடுக்கும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா பகுதியில் குடியிருப்பவர்கள், வணிகர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அந்த கருத்துக் கேட்பிற்கு பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.
லிட்டில் இந்தியா பகுதியில் வாரத்தின் கடைசி நாட்களில் மக்கள் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது மதுவால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கு தனியார் வாகனங்களை சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். பல வாகனங்களை அனுமதிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
40 ஆண்டுகளில் மோசமான ஒரு கலவரம், வன்முறை லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்டது.
எல்லாம் மதுவால் என்பது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்...
அமைதியான பகுதியை கூட மதுவால், சாத்தானின் பகுதியாக மாறி விடுகிறது என்பதற்கு சிங்கப்பூர் கலவரம் ஓர் உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment