பல
இனம், கலாச்சாரம் கொண்ட இந்தியாவின்
தேசிய
மொழியாக இந்தி மாற வாய்ப்பே இல்லை….!
இந்தியாவில் நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், ஒரு நிஜமான உண்மை உங்கள் கண் முன் வந்து நிற்கும். அது, ஒவ்வொரு மைலுக்கும் இடையே தண்ணீரின் சுவை மட்டுமல்ல, பேசும் மொழியின் தன்மையும் மாறுப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இந்தி பெல்ட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் கூட, பிரஜ், காரி போலி, அவதி, போஜ்புரி, உர்தூ என பல்வேறு மொழிகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சட்டீஸ்கர், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாத வகையில் மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு இன மக்களிடையே கூட, மொழியின் தன்மை வேறுவேறு வகையில் இருந்து வருகிறது. பள்ளி வகுப்பறைகளில் பேசப்படும் மொழி, நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழி, மாறுப்பட்டே உள்ளது. நமது பழமொழிகள், நமது மொழி நடை, நமது மொழி எண்ணங்கள், நமது உணர்வுகள் இவை அனைத்தும் நாம் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறோம். அது, திரைப்படங்கள் மூலம் கற்ற மொழியாக இருக்கலாம். அல்லது ஒரு கவிதை மூலம் பெற்ற மொழி அறிவாக இருக்கலாம். இந்தக் குறியீடுகளுக்கு இடையில் நாம் சிரமமின்றி மாறிக் கொண்டே இருக்கிறோம். நமது வாக்கியங்கள், சாதாரணமாக பல மொழிகளைக் கலக்கிறது. இப்படி பல மொழிகளை கலந்துகொண்டு, பேசும் மக்களை இந்திய நாடு பெற்று இருக்கிறது.
நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 44 சதவீத மக்கள் இந்தி மொழி பேசும் மக்களாக இருந்து வருகிறார்கள். ஆனால், இந்தி மொழி, பேச்சு வழக்கில், 55 வகையில் பயன்படுத்தப்படும் மொழியாக உள்ளது. கடந்த 2011 ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 10 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தி மொழி 55 வகையில் பேச்சு வழக்கில் இருப்பதும், முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தி ஆதிக்கம்:
இந்தி மொழியை நவீன மேலாதிக்க மொழியாக மாற்ற
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும், பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் சந்திக்க
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. முதலில் உர்தூ மொழிக்கு எதிராகவும் பின்னர் ஆங்கிலத்திற்கு
எதிராகவும், இந்தி மொழி பல்வேறு நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அத்துடன் வடமொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய
சூழ்நிலை இந்தி மொழிக்கு ஏற்பட்டது. காலனித்துவ இந்தியாவில் இந்திக்கான தேவை இரட்டை
தூண்டுதல்களை கொண்டதாக இருந்தது. ஒன்று, ஆட்சி மொழியாகவும் மற்றொன்று, உயரடுக்கு மற்றும்
கருத்தியல் நாட்டம் கொண்டதாகவும் இருந்தன. இந்தி மொழியை மேலாதிக்க மொழியாக மாற்றும்
திட்டத்தின்படி, இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தி, உர்தூ இடையே பிரச்சினை:
அந்த வகையில் இந்தி மற்றும் உர்தூ மொழிகளுக்கு
மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி, மத ரீதியாகவும், சண்டைகளை உருவாக்க காலனித்துவ ஆட்சியில்
திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி மற்றும் உர்தூ மொழிகள் மத்தியில் பிரச்சினைகளை
மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும் இந்து, முஸ்லிம்கள் மத்தியில் புதிய பிரச்சினைகளை
உருவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த இரண்டு மொழிகளும் பல்வேறு நிலைகளில்
கடுமையான மத பிளவுகளையும் ஏற்படுத்தின. பேச்சு நடையும் இலக்கணமும் இரண்டு மொழிகளிலும்
ஒரே விதத்தில் இருந்தபோதும், எழுத்து நடையில் அவை மாறுபட்டு இருந்தன. இந்தி மொழி சமஸ்கிருதம்
பாணியில் எழுதப்பட்டது. உர்தூ மொழி அரபு மற்றும் பாரசீக பாணியில் எழுதப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திவாலா,
உர்தூவாலா என்ற பாணியில் பிளவுகளை ஏற்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பாரசீக
மொழிக்கு மாற்றாக உர்தூ மொழியை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்ததுடன், நாகரி எழுத்தில் இந்தியை
பயன்படுத்துவதை தவிர்த்தனர். இது மதன்மோகன் மால்வியா உள்ளிட்ட இந்து தலைவர்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியை தொடக்கப்பள்ளி மற்றும் நீதிமன்றங்களில்
பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டில் இந்தி,
உர்தூ ஆகிய இரண்டு மொழிகளையும் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தி,
உர்தூ மொழிகளுக்கு இடையேயான பிரச்சினை இந்து, முஸ்லிம்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு
ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.
1910 மற்றும் 1930க்கு இடையே இந்தி மற்றும்
உர்தூ மொழி குறித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் ஏற்பட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு என
தனி அமைப்புகளை உருவாக்கி, தங்கள் மொழிகளை காக்கவும், வளர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இரண்டு தரப்பிலும் பொதுவான உள்ளூர் வட்டார மொழி பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
உர்தூ மொழி பேசுபவர்கள், அரபி மற்றும் பாரசீக மொழி அறிவு உளளவர்களையும், இந்தி மொழி
பேசுபவர்கள், சமஸ்கிருதம் மொழி அறிவு கொண்டவர்களையும் தங்களுடையே, அறிவிப்பாளர்களாக
நியமித்தனர்.
நவீன இந்தி மொழி, சித்தாந்தவாதிகள் மற்றும்
இலக்கியவாதிகளால் உருவாக்கப்பட்டு 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டு, சமஸ்ருதத்தை நோக்கிச் சென்ற இந்தியை
சுத்தமாக காய்ச்சி வடிக்கட்டிய இந்தி மொழியாக மாற்றம் செய்யப்பட்டது.
ஆட்சி மொழி பிரச்சினை:
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, எந்த மொழியை
ஆட்சி மொழியாக வைக்க வேண்டும் என்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்காக நடத்தப்பட்ட
ஆலோசனைகள், விவாதங்கள், நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வர மேற்கொள்ளப்பட்டவிவாதங்களை
விட கடுமையாக இருந்தன.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் மக்கள்
பயன்படுத்தும் மொழி, இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும், அந்த மொழி
எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் கடினமான இலக்கிய நடை கொண்ட மொழியாக அது இருக்கக்
கூடாது என்றும் மகாத்மா காந்தி அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அத்துடன்
இந்துஸ்தானி மொழியாக அதாவது, தூய்மையான இந்தியாகவும், உர்தூவாகவும் இல்லாமல், பாரசீகம்
மற்றும் சமஸ்கிருதம் கலக்கப்படாத மொழியாக இந்துஸ்தானி மொழி இருக்க வேண்டும் என்றும்
அவர் ஆலோசனை தெரிவித்து இருந்தார். இந்த யோசனையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது.
ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்துஸ்தானி
நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும் என்றும்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட குழு, பரிந்துரை செய்தது.
இதற்கு மதவாத வலதுசாரி அமைப்புகள் கடுமையான
எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் இந்துஸ்தானி
இருக்கக் கூடாது என்றும் அவர்கள் குரல்களை எழுப்பினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில்,, காங்கிரஸ் அமைத்த குழுவில் இருந்து மவுலானா அபுல் கலாம் ஆசாத் விலகினார்.
சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்
வலதுசாரி அமைப்புகள் உறுதியாக இருந்தன.
பல்வேறு நிலைகளை தாண்டி, கடந்த 1949ஆம்
ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாட்டின் ஆட்சி மொழியாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலம்
இரண்டாவது மொழியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடு 15 ஆண்டுகளுக்கு
நீடிக்கும் என்றும் கூறப்பட்டது.
தமிழ் உட்பட 22 மொழிகள்
இணைப்பு:
பின்னர் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில்
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இணைக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மொழி ரீதியாக
மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி பிரச்சினைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்டன. தமிழகத்தில்
இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நாட்டின் தேசிய மொழியாக இந்தியை
ஏற்றுக் கொள்ள முடியாது என திமுக தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை
உறுதிப்பட கூறினார்.
இந்தி மொழியை ஆட்சி மொழியாக தேர்வு செய்தால்,
தென் மாநிலங்களின் வளர்ச்சி வீழ்ச்சி அடையும் என்றும், வட மாநிலங்களில் முன்னேற்றம்
அதிகளவு இருக்கும் என்றும் தென்மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். நாட்டில்
ஆட்சி மொழி குறித்து விவாதங்கள் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் கடந்த 1963ஆம் ஆண்டு,
மக்களவையில் மொழி குறித்து விவாதம் ஏற்பட்டு, இந்தியுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப்படும்
என முடிவு செய்யப்பட்டது.
இந்தி திணிப்புக்கு எதிராக
போராட்டங்கள்:
இந்தி மொழி தென்மாநில மக்கள் மத்தியில்
திணிக்கப்பட மாட்டாது என பண்டித ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, கடந்த
1964ஆம் ஆண்டு, இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனால், தமிழகத்தில்
இந்தி மொழிக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் காரணாக ஆங்கிலமும்
ஆட்சி மொழியாக இருக்கும் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தி மொழிக்கு
எதிர்ப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே, அந்த மொழி முழுமையான ஆட்சி மொழியாக இருக்கும்
என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் இந்தி மொழியின் வளர்ச்சிக்காக
திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தி கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட
திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி, இந்தி மொழிக்காக பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வந்தாலும், பேச்சு வழக்கில் இந்தி பல்வேறு நிலையில் இருந்து வருகிறது.
இந்தி திரைப்படங்களில், இந்தி, உர்தூ கலந்த மொழிதான் உரையாடல் மொழியாக பயன்படுத்தப்பட்டு
வருகிறது. விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் இந்தி மொழி கூட, தூய்மையான இலக்கிய நடை
கொண்டு மொழியாக இருப்பது இல்லை. மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் பேச்சு வழக்கு
மொழியே பயன்படுத்தப்படுகிறது.
ஒரே மொழி என்ற வாதம்:
இந்தி மற்றும் உர்தூ மொழிகள், இந்த துணைக்
கண்டத்தில் பிறந்த இரண்டு மொழிகள் என்றும், இந்த இரு மொழிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது
சாத்தியமற்றது என்றும் பிரபல திரைப்பட பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
பஞ்சாபி மூன்று மொழிகளில் எழுதப்படுவதாக கூறியுள்ள அவர், இருந்தும் பஞ்சாபி மொழி உயிருடன்
உள்ள மொழியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது உலகமயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள்,
மொழி குறித்த விவாதங்களை புதிய கோணத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இணையதளத்தில்
ஆங்கிலம் முதன்மை மொழியாக இருந்து வருகிறது. பிற மொழிகள் இரண்டாவது மொழியாக உள்ளன.
இதேபோன்று, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கில மொழி கற்பிற்கும் பள்ளிக்கூடங்களில்
சேர்ப்பதை மிகவும் விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் ஆங்கில மொழியின்
தேவை அதிகரித்து, வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதுதான்.
தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில் நம் அனைவரையும்
பிணைக்க, இணைக்க ஒரே மொழி இருந்தால் மட்டும் போதும் என்ற தேவை நடைமுறையில் வழக்கற்றுப்
போகிறது. அனைத்து மொழிகளிலும் தொடர்பு கொள்ளக் கூடிய செல்பேசிகள் நம்மிடம் இருக்கும்போது,
ஒரே மொழி என்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
கடைசியாக, இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை. அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன. அதேசமயத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்.
-
தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்