Monday, January 22, 2024

சமூகத்தின் அணுகுமுறை….!

 

வருத்தம் அளிக்கும்

இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறிமுறை. இஸ்லாமிய போதனைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகின்றன.  இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மற்றும் சமநிலை முறையை முன்வைத்துள்ளது. இஸ்லாத்தின் நோக்கம் வாழ்க்கையின் எந்தக் கோணத்திலும் அல்லது நேரத்திலும் மட்டுப்படுத்தப்படவில்லை. அது முழு மனித வாழ்க்கைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விலகிச் செல்லும் சமுதாயம்:

இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது உலகத்தையும் மறுமையையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், வேதனையான ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடித்து உன்னத வாழ்வு வாழ வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இஸ்லாமிய போதனைகளிலிருந்து விலகிச் செல்வது போல் தெரிகிறது. மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய சமூகத்தை தனது பிடியில் கொண்டு சென்றுள்ளது. சுயநலம், அற்பத்தனம், பழிவாங்குதல், பொய்கள் மற்றும் ஆபாசங்கள் ஆகியவை நம் சமூகத்தில் அனைத்து வகையான தீமைகளின் வீடாக மாறிவிட்டன.

வரதட்சணை எனும் தீமை:

பல்வேறு வகையான இந்தத் தீமைகளில் ஒன்றுதான் வரதட்சணை. வரதட்சணை எனும் தீமையால், ஏழ்மையின் காரணமாக பல பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.  வரதட்சணை என்ற சடங்கு நம் சமூகத்திற்கு ஒரு தீமையாகிவிட்டது என்றே கூறலாம். வரதட்சணை என்ற பெயரில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இந்த கொடுமையால் நூற்றுக்கணக்கான சிறுமிகள் ஏதோ ஒரு வகையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

வரதட்சணை கொடுக்காததால் மாமியார் கோபப்படுவார்கள். வரதட்சணை குறைவாகக் கொடுப்பதற்காக மகள்கள் வாழ்நாள் முழுவதும் கேலி செய்யப்படுவார்கள் என்ற நிலை முஸ்லிம் குடும்பங்களில் இருந்து வருகிறது. அதிக வரதட்சணை கொண்டு வரும் மருமகள்கள் மாமியார்களால் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். மற்ற மருமகள்களை விட அவர்கள் விரும்பப்படுகிறார்கள். இதனால் இஸ்லாமிய வீடுகளில் ஒற்றுமை, அமைதி சீர்குலைந்து தினமும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது.

கொடூர சம்பவங்கள்:

ஒவ்வொரு நாளும் நாளிதழ்களை படிக்கும்போது, வரதட்சணை குறைவாகக் கொண்டு வந்ததால், பெண்ணின் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக செய்திகளை காண முடிகிறது. நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்களை நாள்தோறும் காணலாம். பிற சமூகங்களில் வழக்கத்தில் உள்ள இந்த வரதட்சணை பிரச்சினையால், அப்பாவி பெண்கள் மரணங்களை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாளுக்கு நாள் இது போன்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்கள் நடந்து வருவதோடு, கொடூமைக்காரர்களின் இந்த இனப்படுகொலை தொடர் வலுவடைந்து வருகிறது.

இஸ்லாமிய பார்வையில் திருமணம்:

சமுதாயத்தில் வரதட்சணைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இதனால் திருமணம் மிகவும் கடினமாகி வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது. திருமணம் என்பது திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தூய உறவு முறையாக இருந்து வருகிறது. எனவே, நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர், திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும்அமைந்துள்ளது (புகாரி ஷரீஃப்).

இதேபோல், மற்றொரு இடத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  திருமணத்தின் முக்கியத்துவத்தையும் நல்லொழுக்கத்தையும் எடுத்துரைத்து, திருமணத்தை நம்பிக்கையின் பாதி என்று அழைத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போல், ஒரு நபர் திருமண உறவில் இணைந்தால், அவர் தனது நம்பிக்கையில் பாதியை நிறைவு செய்கிறார்.

ஏக இறைவன் தனது திருமறையில் இப்படி கூறுகிறான்: “மனிதர்களே, உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்(அஞ்சுங்கள்!). அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 4:1) இதன்மூலம் திருமணமத்தின் முக்கியத்துவம் மற்றும் அது எப்படி எளிமையாக அமைய வேண்டும் என்பது நமக்கு தெரிய வருகிறது.

பரிதாப நிலை:

நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்போது பணவீக்கம் உச்சத்தில் உள்ளது என்பதை ஒவ்வொரு மக்களின் வாழ்க்கையின் மூலம் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. வறுமை காரணமாக நடுத்தரப்பிரிவு வகுப்பினர் இரண்டு வேளை உணவுக்கே போராட வேண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலும், சகோதரிகள் மற்றும் மகள்கள் திருமணமாகாமல் வாழ்க்கையை வேதனையுடன் கடந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க போதுமான பணம் இல்லை என்பதே ஆகும்.

இதைத் தடுக்க, முஸ்லிம் சமூகத்தில் மதச் சூழலை உருவாக்கி, இஸ்லாமிய விதிகளின் முக்கியத்துவத்தை உள்ளத்திலும் மனதிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இறைநம்பிக்கையாளரின் மகிமையும் வெற்றியும் அவனது உலகம் செழிக்க மற்றும் மறுமையை நியாயமான, சிறந்த முறையில் அழகுபடுத்த ஏக இறைவன் வகுத்துள்ள எல்லைக்குள் வாழ்வதில் அடங்கியுள்ளது என்பதை முஸ்லிம்களின் இதயத்திலும் மனதிலும் நிலைநிறுத்த வேண்டும். திருமணம் என்பது மனித இனத்தின் பாதுகாப்பிற்காகவும் உயிர்வாழ்வதற்காகவும் மனிதனின் இயல்பான உணர்ச்சிகளை சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு தூய உறவு என்பதை மறந்துவிடக் கூடாது.

அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணை மார்க்கம் பார்த்து திருமணம் செய்ய உத்தரவிட்டார்கள், செல்வம், அழகு, குடும்பம் ஆகியவற்றைப் பார்த்து அல்ல. ஏனென்றால் செல்வம் மற்றும் அழகு பரம்பரை சோதனைக்கு வழிவகுக்கும், ஆனால் ஒரு பக்தியுள்ள பெண் எல்லா முனைகளிலும் கணவனுக்கு கீழ்ப்படிதலுடனும் விசுவாசத்துடனும் இருப்பாள். அதன்மூலம் ஒரு நல்ல சமூகம் உருவாகும்.

குரல் எழுப்ப வேண்டும்:

தற்போதைய நவீன நாகரிக உலகில், இப்போதெல்லாம் பல திருமணங்கள் தடல்புடலாக மிகப்பெரிய விழாவாக  நடக்கின்றன. எளிமையான திருமணம் நடப்பது மிகமிக குறைவாக இருந்து வருகிறது. திருமணம் எளிமையாக நடத்தப்படுவது ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே, இந்த பிரச்சினையில் சமுதாயம் விசேட கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. வரதட்சணைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும், உறவினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவரிடம் பேசி, வரதட்சணை வாங்குவதோ, கொடுப்பதோ தடை செய்ய வேண்டும். வரதட்சணை கொடுக்கப்படும் திருமணத்திற்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வரதட்சணை என்ற கொடூமையை சமூகத்தில் இருந்து களைய, ஒரு சிறிய அடியை ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். இதனால், தொடக்கத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால் படிப்படியாக உறவினர்கள் உட்பட எல்லோரும் உங்கள் கருத்தை புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை செய்ய வேண்டும்.

வரதட்சணையைத் தடுக்க, சமுதாயத்தில் மதச் சூழலை உருவாக்கி, இஸ்லாமிய விதிகளின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனதிலும் எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இறைநம்பிக்கையாளரின் மகிமையும் வெற்றியும் இறைவனால் நிறுவப்பட்ட வரம்புகளுக்குள் வாழ்வதிலும், அவனது உலகத்தையும் மறுமையை முறையான மற்றும் சிறந்த முறையில் அழகுபடுத்துவதிலும் உள்ளது என்பதை முஸ்லிம்கள் மத்தியில் உணர்த்த வேண்டும் என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இது அனைவரின் கடமையும், பொறுப்புமாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

-             நன்றி: இன்குலாப் உர்தூ நாளிதழ்

-             தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: