Monday, January 29, 2024

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள்...!

ராமர் கோவில் திறப்பு விழாவும்,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளும்...!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை கடந்த 1992ஆம் ஆண்டு இடித்துவிட்டு, அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முழுவதும் கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை, அவசர அவசரமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் திறந்து வைத்துள்ளன. இந்த கோவில் திறப்பு விழாவில் நான்கு சங்கராச்சரியார்கள் கலந்துகொள்ளவில்லை. சங்கராச்சாரியார்களின் முக்கியத்துவம் இந்து மத நம்பிக்கைகளின்படி, சங்கராச்சாரியார் மிக உயர்ந்த குருக்களாகக் கருதப்படுகிறார். இந்து மதத்தில், சங்கராச்சாரியார் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் பார்க்கப்படுகிறார். ஆதி சங்கராச்சாரியார் இந்து மதத்தின் தத்துவ விளக்கத்திற்காகவும் அறியப்பட்டவர். இத்தகைய சூழ்நிலையில், முழுவதும் கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் திறப்பு விழாவில், முக்கிய சங்கராச்சரியார்கள் கலந்துகொள்ளாதது, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு கொஞ்சம் மன வருத்தத்தை அளித்தது என்றே கூறலாம். 

இதேபோன்று, மிக உயர்ந்து பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், தனது வழக்கமான பாணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கோவில் திறப்பு விழாவில் தீவிரம் காட்டி, கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோவிலை திறந்து வைத்தன. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில், இந்திய முஸ்லிம்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, ஜனநாயக நெறிமுறைப்படி, தங்களுடைய பணிகளை வழக்கம் போல் செய்து வந்தனர். ஆனால், கோவில் திறப்பு விழாவை வைத்துக் கொண்டு, இந்துத்துவ அமைப்பினர் ஆடிய வெறியாட்டங்கள் நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை:

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட அதே நாளில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்துத்துவ அமைப்பினர், கோலாகல கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள தேவலாயங்களின் மேல் ஏறி, அங்கு காவிக் கொடியை பாசிச அமைப்புச் சேர்ந்தவர்கள் ஏற்றி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதேபோன்று, பல பகுதிகளில் முஸ்லிம்கள் மிரட்டி ஜெய் ஸ்ரீராம் என சொல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தினர். ஏக இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டவர்கள், அப்படி சொல்ல முடியாது என சொல்லியபோது, அவர்களை இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக தாக்கினர். பள்ளிவாசல்கள், தேவலாயங்களின் முன்பு கூடிய இந்துத்துவ அமைப்பினர், அங்கு பல மணி நேரம் நின்றுக் கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பி, மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தினர். 

மும்பையில் வன்முறை:

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள நாயா நகர், மீரா ரோட் ஆகிய பகுதிகளில் ராமர் கோவில் திறப்பு நாளில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள், பேரணி ஒன்றை நடத்தினர். இந்த பேரணி முஸ்லிம் பகுதிகளில் நுழைந்தபோது, பேரணியில் கலந்துகொண்டவர்கள், அங்குள்ள பள்ளிவாசல், முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள், வாகனங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அவர்களின் வன்முறைகளை தடுத்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மும்பையில் ஒருவித பதற்றம் ஏற்பட்டது. தெலங்கானா மாநிலத்திலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. 

சிறுபான்மையின மக்களின் பொறுமை:

ராமர் கோவில் திறப்பு நாளில், இந்திய முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமையை நாம் பாராட்டியே தீர வேண்டும். இதேபோன்று, கிறிஸ்துவ மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களும், அவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்த நேரத்தில், மிக அழகிய பொறுமையை கடைப்பிடித்தனர். தேவலாயங்களில் காவிக் கொடி ஏற்றப்பட்டததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அப்படி எதிர்ப்பை வெளிப்படுத்தினால், அதன்மூலம், வன்முறைகளை அரங்கேற்றலாம் என திட்டம் போட்ட, இந்துத்துவ அமைப்புகளின் திட்டங்களை நன்கு உணர்ந்துகொண்ட கிறிஸ்துவ மக்கள், பொறுமை மூலம் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்றே கூறலாம். 

இதேபோன்று, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் முஸ்லிம்கள், ராமர் கோவில் திறப்பு நாளில் கடைப்பிடித்த பொறுமை, நாட்டு மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கோவில் திறப்பு நாளில் மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாசிச அமைப்புகளின் திட்டங்கள் அனைத்தையும், தங்களுடைய பொறுமையின் மூலம் முஸ்லிம்கள் தவிடுபொடியாக்கினர். மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ரீதியாக இலாபம் பெறலாம் என நினைக்கும் பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள், முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமையை கண்டு, தங்கள் திட்டங்கள் தகர்த்தப்பட்டதை உணர்ந்து வேதனை அடைந்தன என்றே கூறலாம். ஒருசில இடங்களில், முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை காட்டத் தவறவில்லை. ஆனால், அது மிகப்பெரிய அளவுக்கு பாசிச அமைப்புகளின் திட்டங்களுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் ராமர் கோவில் திறப்பு நாளில், நாடு மிக அமைதியாக இருந்தது. வன்முறைகள் மிகப்பெரிய அளவுக்கு நடைபெறவில்லை. 

அமைதியை விரும்பும் மக்கள்:


நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அமைதியை விரும்புகிறார்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதில் உறுதியாக உள்ள மக்கள், நாட்டில் உள்ள மக்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்துவதை விரும்புகிறார்கள். சாதி, மதம், மொழி, இனம், ஆகியவற்றை கடந்து நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சியில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச அமைப்புகளை தவிர பெரும்பாலான இந்து சகோதரர்கள், நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களை அரவணைத்துக் கொண்டு, செல்லவே விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து கூறலாம். அண்மையில் தமிழகத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா ஒன்றில், இந்து, கிறிஸ்துவ குடும்பங்கள் சீர்வரிசையுடன் வந்து கலந்துகொண்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம். தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல், தற்போது வட மாநிலங்களிலும் இதுபோன்ற நல்ல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பாசிச அமைப்புகள், ஒற்றுமையை சீர்குலைக்க தொடர்ந்து தங்களது திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள். 

அந்த வகையில் ராமர் கோவில் திறப்பு விழா நாளில், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவுக்கு வன்முறைகளை நடத்தலாம் என்றும், அதன்மூலம் அரசியல் இலாபம் பெறலாம் என்றும் பாசிச அமைப்புகள் போட்ட திட்டங்கள் அனைத்தும், அமைதி விரும்பும் மக்களால், தகர்த்தப்பட்டு, தோல்வியில் முடிந்தன. பாபர் மசூதியை இழந்த முஸ்லிம்கள், அதன் வேதனையில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினைகள் மூலம் அவர்களின் அமைதியை பறிக்க பாசிச அமைப்புகள் திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் காசியில் உள்ள ஞானவாபி மசூதி தற்போது மீண்டும் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளது. அண்மையில் தொல்லியியல் துறை அளித்த அறிக்கையில் கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி நாட்டில் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி, முஸ்லிம்களின் அமைதி சீர்குலைக்க பாசிச அமைப்புகள் தொடர்ந்து திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள். 

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, சுதந்திரத்தின்போது இருந்த வழிபாட்டுத் தலம், மதத் தன்மையைக் கொண்டிருக்கும் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் கூறுகிறது. அந்தச் சட்டம், 'வழிபாட்டுத் தலங்களை மாற்றுவது தொடர்பான சச்சரவுகளைத் தடுப்பதற்கும்', 'சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கும்' நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை மிதித்துவிட்டு, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை வேண்டும் என்றே பறிக்க பாசிச அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டு நலனில் அக்கறை கொண்டு அனைத்து மக்களும், பாசிச அமைப்புகளின் திட்டங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன்மூலம் நாட்டில் அமைதியை நிலைநாட்ட உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: