Wednesday, January 24, 2024

அழைப்பு...!

முஸ்லிம் பெண்கள் தீவிர அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, 

நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைப்பு...!

மகளிர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தமும் திட்டம்....!

மலப்புரம், ஜன25- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு அமைப்புகளில் மிக முக்கிய அமைப்பாக மகளிர் அணி இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா உட்பட நாடு முழுவதும் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களை இணைத்துகொண்டு, சேவை ஆற்றி வருகிறார்கள். இந்நிலையில், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக உள்ள மகளிர் அணியை மேலும் வலுப்படுத்த இ.யூ.முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கு அழைப்பு:

அந்த வகையில் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியில், அதிகளவு பெண்களை சேர்க்க தற்போது புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநிலம் மலப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாவட்ட துணைத் தலைவர் உம்மர் அரக்கல், பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள், அரசியலில் அதிகளவு ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக கூறினார். எனவே, பட்டப்படிப்பு முடித்த பெண்கள் அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, சமுதாயத்திற்கும் நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்கள், தங்களை ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள கட்சி அழைப்பு விடுப்பதாகவும் உம்மர் அரக்கல் வேண்டுகோள் விடுத்தார். 

புதிய செயல் திட்டம்:

பெண்களை அரசியலில் ஈடுபடுத்தி ஒரு புதிய நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த புதிய செயல் திட்டம் ஒன்றை செயல்படுத்த இ.யூ.முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு முஸ்லிம் குடும்பங்கள் மத்தியிலும், பொதுக்கூட்டங்கள் மூலமும், அரசியல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கூட்டங்களில், கட்சியின் சார்பில் தலைசிறந்த பேச்சாளர்கள், கலந்துகொண்டு, அரசியலின் முக்கியத்துவம் எடுத்துக் கூற இருக்கிறார்கள். 

மகளிர் அமைப்பு பணி:

இந்த புதிய செயல் திட்டத்தை அமல்படுத்த தற்போது உள்ள மகளிர் அணியை பயன்படுத்தி, ஒவ்வொரு வார்டுகளிலும் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள், முஸ்லிம் குடும்பங்களுக்கு சென்று, அந்த குடும்பங்களில் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் குறித்த விவரங்களை சேகரிப்பார்கள். அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் அரசியலின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவர்கள் என உம்மர் அரக்கல் கூறியுள்ளார். 

இதேபோன்று பேசிய மகளிர் அணியின் தேசிய பொதுச் செயலாளர் ரூபினா ரஷீத், பெண்களை அரசியலில் கொண்டு வர ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது இந்த முயற்சிகள் மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே கோழிக்கோடு மாவட்டத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

கட்சியின் முதுகெலும்பு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதுகெலும்பாக மகளிர் அணி இருந்து வருவதாகவும், பிற கட்சிகளை விட முஸ்லிம் லீகில் பெண்களின் அர்ப்பணிப்பு மிகச் சிறந்த முறையில் இருந்து வருவதாகவும் ரூபினா ரஷீத் தெரிவித்துள்ளார். இந்திய வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்கள் இருப்பதாகவும், எனவே பெண்கள் மத்தியில் அரசியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

10 ஆயிரம் குடும்ப கூட்டங்கள்:

அரசியல் குறித்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல புரிதலை ஏற்படுத்த கேரளா முழுவதும் 10 ஆயிரம் குடும்ப ஆலோசனை கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள முஸ்லிம் பெண்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினராக சேர்த்து, முஸ்லிம்கள் தற்போது சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்வது குறித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, தமிழகம் உட்பட நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்பட்டால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மிகப்பெரிய வலுவான அணியாக மாறும் என்பது உறுதி. அதன்மூலம் திறமையான முஸ்லிம் பெண்கள், அரசியலில் சாதித்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவை செய்ய முடியும். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: