குழந்தைகளின் வெற்றியில் பெற்றோர்களின் பங்கு என்ன....?
ஒவ்வொரு தாய்-தந்தையரும் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக கனவு காண்கிறார்கள். அதற்காக கஷ்டப்பட்டு சாம்பாதிக்கிறார்கள். குழந்தைகளுக்காக செலவு செய்கிறார்கள். ஆனால் எல்லா குழந்தைகளும் வெற்றி பெறுவதில்லை. எனவே, ஒரு தாய் தன் குழந்தையின் ஆளுமையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவரது ஆர்வத்திற்கு ஏற்ப முன்னேற அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். கல்வியுடன் மற்ற நடவடிக்கைகளிலும் பங்கேற்க குழந்தைகளை தாய்-தந்தையர் ஊக்குவிக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களை வெற்றிபெறச் செய்யும் செயல்பாட்டில், அடிக்கடி பல தவறுகளை செய்கிறார்கள். குழந்தைகளின் நலன்களை அறிந்து அவர்களின் திறனை வளர்க்க உதவுவது பெற்றோரின், குறிப்பாக தாய்மார்களின் பொறுப்பாகும். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு அற்புதமான கலையும் கூட என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இதனை புரிந்துகொண்டால், குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை, தாங்கள் விரும்பும் முன்னேற்றத்தை பெற்றோர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
திறமைகளை அங்கீகரிக்க வேண்டும்:
பெற்றோர்களில் பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ, பொறியாளர்களாகவோ அல்லது கணக்காளர்களாகவோ ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், ஏனெனில் இந்தத் துறைகள் மூலம் அவர்கள் நன்றாகச் சம்பாதிப்பார்கள். நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
மாறாக, சில குழந்தைகள் கலை, வானியல், கிராபிக்ஸ் போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். கணினி போன்ற துறைகளில் ஆர்வமாக இருப்பதால், குழந்தைகளின் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணரும் மற்றும் எதிர்காலத்தில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்கும் செயல்களை சிறுவயதிலேயே செய்ய ஊக்குவிப்பது அல்லது அனுமதிப்பது முக்கியம். குழந்தைகள் தாங்கள் விரும்பும் பாடங்களில் சிறந்து விளங்குவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. எனவே, தாய்மார்கள் தங்கள் குழந்தையின் செயல்திறனை மதிப்பீடு செய்வது முக்கியம். அவர்கள் எந்த துறையில் ஆர்வமாக உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அதை மேலும் மேம்படுத்த அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். குழந்தைகளின் திறமைகளை தந்தைமார்களும் ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்:
பெரும்பாலும் தாய்மார்கள் தங்கள் குழந்தை வெளியில் செல்லும்போது எந்த மாதிரியான சூழ்நிலையில் சிக்கி இருப்பார்கள் என்று கவலைப்படுகிறார்கள். எனவே அவர்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப பயப்படுகிறார்கள். இதனால் குழந்தைகள் தங்கள் பெரும்பாலான நேரத்தை இணையதளங்கள் மற்றும் செல்பேசிகளில் செலவிடுகிறார்கள். இது அவர்களுக்கு பெரும் அளவுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றெலும் கூட, அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளி விளையாட்டுகளில் ஊக்குவிக்க வேண்டும். படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால், அவர்களைக் கண்டிக்காமல் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவான வார்த்தைகளையும் நம்பிக்கை தரும் மொழிகளையும் கூற வேண்டும்.
குழந்தைகள் தோல்வியுற்றால், குறைந்தபட்சம் அவர்கள் முயற்சித்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்விகள் ஒரு நபரை கீழே விழுந்து தன்னைத்தானே எழும்பவும். தன்னைத் திருத்திக் கொண்டு முன்னேறவும் தோல்விகள் கற்றுக்கொடுக்கின்றன. ஐன்ஸ்டீனிலிருந்து ஸ்டீபன் ஹாக்கிங் வரை, ஆரம்பத்தில் தோல்விகளைச் சந்திக்காத பிரபல மேதைகள் யாரும் இல்லை. உங்கள் குழந்தை ஏதேனும் உடல் குறைபாடு அல்லது மன மற்றும் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், சரியான நேரத்தில் சிகிச்சையை அளித்து அவர்களின் பயத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பயப்படும் விஷயங்களை அறிந்து அவற்றை சரிச் செய்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.
குழந்தைகளின் தன்னம்பிக்கை:
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி புகார் கூறுவதை வழக்கமாகி கொண்டுள்ளார். குழந்தைகளை பிடிவாதமாகவும் சுயநலமாகவும் இருப்பதாகவும், தங்களை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் என்றும் பெற்றோர்கள் புகார் கூறுகிறார்கள். குழந்தைகள் பொதுவாக தங்கள் பெற்றோர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களின் நடத்தைகளைக் கவனிக்கிறார்கள் என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக, தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அவர்களைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் விரும்பினால், குழந்தைகள் தங்கள் நடத்தையில் தவிர்க்க முடியாமல் சுயநலமாக மாறுவார்கள்.
எனவே, குழந்தைகளிடம் மன உறுதியை வளர்க்க பெற்றோர்கள் அவர்களின் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஒரு பணியை முடிக்கத் தவறினால், அவர்களின் தவறைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பள்ளியில் அவர்களின் மோசமான செயல்திறனைக் கண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பயிற்சி மையங்களுக்கு அனுப்புகிறார்கள், இதனால் அவர்களுக்கு விளையாட்டுகளுக்கு நேரமில்லாததால் படிப்பில் ஆர்வம் குறைகிறது. தாய்மார்கள் தினமும் சில மணி நேரம் குழந்தைகளுடன் அமர்ந்திருப்பது ஒரு சிறந்த வழியாகும். குழந்தைகள் நன்கு படிக்க உதவ வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளிக்க வேண்டும்.. குழந்தைகள் சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும். அவர்களின் விருப்பங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் தங்கள் கவனமும் நேரமும் குழந்தைகளுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
கல்வி முறையில் மாற்றம்:
பொதுவாக நமது கல்வி முறை குழந்தைகளை, விசாரிப்பது, ஆராய்வது அல்லது ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் பதிலாக புத்தகங்களை மனப்பாடம் செய்ய ஊக்குவிக்கிறது. மேலும் பெற்றோர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பாடத்திட்டத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் தங்கள் குழந்தைகள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனையை நிராகரித்து குழந்தைகளை அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அறிவியல் தலைப்பைப் புரியவில்லை என்றால், அதை நன்றாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களை பரிசோதனை செய்யச் செய்து ஊக்குவிக்க வேண்டும். அதேபோல, ஒரு குழந்தை கணிதத்தில் பலவீனமாக இருந்தால், எளிய விதிகளை தினசரி எடுத்துக்காட்டுகள் மூலம் அவருக்கு விளக்கி, சிக்கலான விதிகளை படிப்படியாக விளக்கினால், குழந்தைகளும் கணிதத்தை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்குவார்கள்.
குழந்தைகளின் கல்விக்காக பள்ளிகளையே சார்ந்து இருக்காமல், தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கு கல்வி கற்று தர வேண்டும். குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசி அவர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவித்து, அவர்களின் சிறிய வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்கும். எனவே, குழந்தை வளர்ப்பு கலையில் பெற்றோர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி தனிக் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment