ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தால், நீதி கிடைக்குமா....?
மத்திய பாஜக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு எந்த முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படவில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை பெரும் சிரமங்களுக்கு இடையே சென்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி, ”அச்சே தின்” அதாவது நல்ல நாட்கள் மக்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எந்தவித தீர்வையும் இதுவரை காணவில்லை. வெறும் வெற்று முழக்கங்களை சொல்வதையே பாஜக தலைவர்கள் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நாட்டு மக்களின் கவனங்களை திசை திருப்ப, அடிக்கடி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதை பாஜக தனது பாணியாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது.
மக்கள் மத்தியில் பிளவு:
நாட்டில் குவிந்த கிடக்கும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கண்டு, முற்றுப்புள்ளி வைக்க பாஜக அரசு கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை. மாறாக, மக்கள் மத்தியில் காழ்ப்புணர்வுகளை உருவாக்கி, ஒருவித பிளவை ஏற்படுத்தும் செயல்களில் தான் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன்மூலம் தங்களுக்கு அரசியல் ரீதியாக இலாபம் கிடைக்கும் என பாஜக கருதுகிறது. அந்த கருத்து ஒரளவுக்கு உண்மையே என்று கூறலாம். வட மாநிலங்களில் மக்கள் மத்தியில் இன்னும் சரியான புரிதல்கள் இல்லை என்பதால், அவர்கள் மத ரீதியாக தங்களை அடையாளம் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். இதனால் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களின் இந்த இயலாமையை தனது அரசியல் இலாபத்திற்காக பாஜக தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே வருகிறது. தனது பிரித்தாளும் பாணியை அந்த கட்சி இன்னும் கைவிடவில்லை. இந்த பிரித்தாளும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து, பல்வேறு மாநிலங்களில் பிரச்சினைகளை வேண்டும் என்றே இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். குறிப்பாக, அரியானா, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் பாஜகவின் செயல் திட்டத்தின் படி அரங்கேற்றப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே.
மறுக்கப்படும் நீதி:
பாஜக ஆட்சியில், ஊடகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. உண்மையான செய்திகளை வெளியிட ஊடகங்கள் அச்சம் கொள்ளும் வகையில் மிரட்டி வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வந்தாலும், அவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. என பல்வேறு துறைகள் மூலம் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். நீதி, நேர்மை, நியாயம் என்ற சொற்களுக்கு பாஜக ஆட்சியில் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறையை அணுகவே தற்போது அஞ்சுகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தை தொடர்ந்து வன்முறை நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அங்கு அமைதியை நிலைநாட்ட, மத்திய பாஜக அரசு உறுதியாக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அவர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. சாதி, மதம், மொழி ரீதியாக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது.
இந்திய ஒற்றுமை நீதி பயணம்:
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த முறை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள், திரைப்பட துறையைச் சேர்ந்த அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டு, ராகுல் காந்தியின் முயற்சியை பாராட்டி ஊக்குவித்தனர்.
அந்த வகையில், தற்போது ராகுல் காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி மணிப்பூரில் உள்ள தௌபாலில் இருந்து தொடங்கினார். இந்த பயணம், வடகிழக்கு மாநிலங்களான மேகலாயா, மிஜோரம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து, வரும் மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவு பெறுகிறது. மணிப்பூரில் தனது நீதி பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, அங்குள்ள மக்கள் மத்தியில் பேசும்போது, மணிப்பூர் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பாஜக அரசு, மிகப்பெரிய அநீதியை செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறாமல், மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அத்துடன், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள், தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள போராடிக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல பாஜக அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி, தனது பயணத்தின்போது குற்றம்சாட்டி வருகிறார்.
மக்களின் வரவேற்பு:
மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு, அம்மாநில மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அசாம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, அரசியல் நோக்கர்களை வியப்பு அடையச் செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜக கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இணைந்தபிறகு, மறுநாள் பீகாரில், இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி, நுழைந்தபோது, அவருக்கு மக்கள் அளித்த மிகப்பெரிய வரவேற்பு, பாஜக உள்ளிட்ட கட்சிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாம் பயணம் மேற்கொள்ளும் அனைத்து மாநிலங்களிலும், மக்கள் மத்தியில் பேசும், ராகுல் காந்தி ஒன்றை மட்டும் தவறாமல் கூறி வருகிறார். அது, மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும். இந்திய மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். மத ரீதியாக மக்களை பிளக்கும் முயற்சிகளை மக்கள் நன்கு உணர்ந்துகொண்டு, பாஜகவின் செயல்திட்டங்களை உடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உயர் பதவிகளில், அனைத்து தரப்பு மக்களும் அமர்த்தப்பட வேண்டும். அதுதான் உண்மையான நீதியாக இருக்க முடியும். தற்போது, மத்திய பாஜக ஆட்சியில் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களே உயர் பதவிகளில் இருந்துகொண்டு இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அநீதி என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற வேண்டுமானால், அனைத்து தரப்பு மக்களுக்கும், நீதி கிடைக்க வேண்டும். அப்போதுதான், அது உண்மையான வல்லரசு நாடாக இருக்க முடியும். இப்படி, ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருவது, மக்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம்.
நீதி கிடைக்குமா?
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தால், நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த பயணம், வட மாநிலங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பாஜகவின் தோல்விகள், பாஜகவின் வெற்று முழக்கங்கள், பாஜகவின் பிரித்தாளும் போக்கு, நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், ராகுல் காந்தியின் பயணத்தின் மூலம், மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பாஜகவின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவுக்கு எடுப்படவில்லை. எனவே, வட மாநிலங்களை குறிவைத்தே பாஜக தனது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக ராமர் கோவில் விவகாரம் ஆகியவற்றை கையில் எடுத்து பாஜக, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாஜகவின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம், நிச்சயம் நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக கூறலாம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், வட மாநிலங்களில் இந்த முறையை மிகப்பெரிய அளவுக்கு பயன் தராது என்றே கூறலாம். தென் மாநிலங்களைப் போன்று, வட மாநில மக்களும் தற்போது விழித்துக் கொண்டு, பாஜகவின் தோல்விகள் குறித்தும், வெற்று முழக்கங்கள் குறித்தும் கேள்விக்கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டு மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment