உயர்கல்வி
சேர்க்கை - மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள்....!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை பறிக்க பாஜக அரசு முயற்சித்து வரும் இந்த காலகட்டத்தில், உயர்கல்வி குறித்த சமீபத்திய அகில இந்திய கணக்கெடுப்பு ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு பட்டியல் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவது மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மாணவர்களை விட, உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது என்ற உண்மையை இந்த கணக்கெடுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள்:
கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ளதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் உயர்கல்வி பெற வேண்டும். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பல சிறப்பு திட்டங்களை சமுதாய நலன் கருதி முஸ்லிம் கல்வியாளர்கள் செய்து வருகிறார்கள். அதற்காக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, கல்வி குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை உயரவே இல்லை என்பதுதான் உண்மையாகும். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முஸ்லிம்களின் கல்வி பெறும் உரிமையை பறிக்க மறைமுகமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை யாரும் மறைக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் தான், தற்போது உயர்கல்வி குறித்து வெளியாகியுள்ள பட்டியலில், முஸ்லிம் மாணவர்கள், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை விட, மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2017-18 மற்றும் 2021-22 கல்வியாண்டுகளுக்கு இடையில்), உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 18 புள்ளி 1 சதவீதமாக பதிவாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், எஸ்.சி.பிரிவினருக்கான சேர்க்கை தேசிய சராசரியை விஞ்சி, 25 புள்ளி 43 சதவீதம் அளவுக்கு அதிக வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தியது. எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை 41 புள்ளி .6 சதவீதமாகவும், ஓபிசி மாணவர் சேர்க்கை 27 புள்ளி 3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
உயர்கல்வியில் முஸ்லிம்கள்:
எஸ்சி., எஸ்சி. ஓபிசி மாணவர்களின் எண்ணிக்கை உயர்கல்வியில் அதிகரித்து வரும் நிலையில், முஸ்லீம் சமூகத்திற்கான சேர்க்கை தரவு மிகவும் குறைந்துள்ளது. 2021-22 கல்வியாண்டில், முஸ்லீம் மாணவர் சேர்க்கை 21 லட்சத்து ஆயிரமாக பதிவாகியுள்ளது, இது ஐந்தாண்டு காலத்தில் 14 புள்ளி 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, 2017-18ல் 18 லட்சத்து 4 ஆயிரத்தில் இருந்து 2020-21ல் 19 லட்சத்து 22 ஆயிரமாக லட்சமாக உயர்ந்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முஸ்லீம் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் அதே அளவிலான முன்னேற்றத்தை எட்டவில்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
முஸ்லிம் மாணவிகள் நிலவரம்:
மற்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவிகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் மாணவியர்களுக்கான சேர்க்கை புள்ளிவிவரங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியைக் காட்டுகின்றன. 2021-22ல், 2017-18ல் 8 புள்ளி 98 லட்சமாக இருந்த முஸ்லிம் மாணவிகளின் சேர்க்கை 10 புள்ளி 4 லட்சமாக இருந்தது. இது ஒரு அதிகரிப்பைக் குறிக்கும் அதேவேளையில், 14 புள்ளி 7 சதவீத வளர்ச்சி விகிதம் முஸ்லிம் பெண்களின் கல்விப் பங்கேற்பைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
பல்வேறு சமூகங்களுக்கிடையில் உள்ள சேர்க்கை வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வு, உயர் கல்வியை அணுகுவதில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இலக்கு முயற்சிகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சவால்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வது மிகவும் உள்ளடக்கிய மற்றும் சமமான உயர்கல்வி நிலப்பரப்புக்கு பங்களிக்கும். அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியைத் தொடரவும் பயன்பெறவும் சம வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்யும். கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து பற்றிய விவாதங்கள் மையக் கட்டத்தை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதும், முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய உயர்கல்விச் சூழலை வளர்ப்பதில் பணியாற்றுவதும் இன்றியமையாததாகும்.
- நன்றி: முஸ்லிம் மிரர் ஆங்கில இதழ்.
- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment