அனைத்து
சமூகங்களில் இருந்து மாணவர்களை சேர்ப்பதால், வகுப்புவாத நிறுவனமாக
அலிகர்
முஸ்லிம் பல்கலைக்கழகம் இல்லை…!
சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சிறுபான்மை அந்தஸ்து பாதுகாப்பு தேவை…..!
சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்த
அரசுக்கு உரிமை இல்லை….!
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை
அந்தஸ்து தொடர்பான வழக்கில் பல்கலைக்கழகம் வாதம்....!
புதுடெல்லி, ஜன10- உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கி கடந்த 1967ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு சரியானதா என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு:
கடந்த 1967ஆம் ஆண்டு எஸ்.அஜீஸ் பாஷா மற்றும் மத்திய அரசு இடையேயான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், முஸ்லிம் சிறுபான்மையினரால் நிறுவப்படவில்லை என்றும், நிர்வாகிக்கப்படவில்லை என்று தீர்ப்பு அளித்து, பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தந்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன்மூம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான பாதுகாப்பை அலிகர் பல்கலைக்கழகம் அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை:
பின்னர், 1981ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அஞ்சுமான்-இ-ரஹ்மானியா மற்றும் மாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் இடையேயான வழக்கில், 1967-ல் வழங்கப்பட்ட தீர்ப்பின் சரியான தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மேலும், வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்து அனுப்பியது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் பரிசீலனையில் இந்த விவகாரம் நிலுவையில் இருந்த நிலையில், முதுகலை படிப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அலிகர் பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று, அலிகர் பல்கலைக்கழகம் ஒரு சிறுபான்மை நிறுவனமாக இல்லை என்றும், முதுகலை படிப்புகளில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது. அத்துடன் அலிகர் பல்கலைக்கழகத்தின் திருத்தச் சட்டம் 1981 மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று முக்கிய திருத்தங்களையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை:
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதுடன் அலிகர் பல்கலைக்கழகம் ஒரு சிறுபான்மையின நிறுவனம் இல்லை என்றும் கருத்து தெரிவித்தது.
கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் சர்ச்சை எழுந்தது. அத்துடன் ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு முன்பு மறுபரிசீலனைக்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டாலும், பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சூர்யா காந்த், ஜே பி பர்திவாலா, திபங்கர் தத்தா, மனோஜ் மிஸ்ரா மற்றும் சதீஷ் சர்மா ஆகியோர் அடங்கிய ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அலிகர் பல்கலை.விளக்கம்:
இந்த வழக்கில் அலிகர் பல்கலைக்கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ ஆவணங்களில், முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை அலிகர் பல்கலைக்கழகமாக மாற்றியது, மற்றும் கட்டிடத்தின் கட்டிடக்கலை, ஆழமான பச்சை நிறம், குவிமாடங்கள், குரான் கல்வெட்டுகள், அதன் வாதத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட வரலாற்று உண்மைகளை மேற்கோள் காட்டப்பட்டு, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய தன்மை பற்றி எடுத்து கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அலிகர் பல்கலைக்கழக சின்னத்தில் ஒரு குர்ஆன் வசனம் உள்ளது என்றும் அது பல்கலைக்கழத்தின் அடையாள பொன்மொழியாகும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் மசூதி உள்ளது என்றும், அவற்றை பல்கலைக்கழக ஊழியர்கள் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. சன்னி, ஷியா இறையியல், இஸ்லாமிய ஆய்வுகள், அரபு மொழி மற்றும் இலக்கியம், பாரசீகம் மற்றும் உர்தூ, இஸ்லாமிய தத்துவம் மற்றும் குர்ஆனிய ஆய்வுகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டியுள்ள அலிகர் பல்கலைக்கழக வழக்கறிஞர், சிறுபான்மை அந்தஸ்தை திரும்பப் பெற மேற்கோள் காட்டிய பிற முக்கிய அம்சங்களாகும். அலிகர் பல்கலைக்கழகத்தின் மாணவிகளுக்கு ஹிஜாப் கடைப்பிடிப்பதற்காக தனி தங்குமிடங்களை உறுதி செய்து இருப்பதையும் பல்கலைக்கழகம் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது.
தலைமை நீதிபதி
கருத்து:
இந்நிலையில்,
செவ்வாய்க்கிழமை தொடங்கிய வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிறுவனம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றும், முஸ்லிம் சமூகத்தில் இருந்து மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்தவில்லை என்றும், எந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களையும் கட்டாயப்படுத்தாமல் சேர்க்கலாம் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட்
கருத்து கூறினார்.
சட்டப்பிரிவு 30ன்படி, சிறுபான்மையினரின் நிர்வாகம் முழுமையானதாக இருக்க வேண்டும் என்றும், ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தில் அவர்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் முன்வைக்க வேண்டியதில்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். எனவே, ஒரு சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுவது சிறுபான்மை அந்தஸ்தில் இருந்து திசைதிருப்பப்படாது, நிர்வாக உரிமை சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டால், சிறுபான்மை அந்தஸ்துக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் கூறினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அலிகர் பல்கலைக்கழகம்,
அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிட்டார்.
அலிகர் பல்கலை.வாதம்:
அலிகர் பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனித்து இருக்கக்கூடாது என்பதையும், அவை சிறந்த நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். அதேநேரத்தில்,
அனைத்து சமூகங்களில் இருந்தும் மாணவர்கள் மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும் வகுப்புவாத நிறுவனமாக மாற விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சிறுபான்மை அந்தஸ்து பாதுகாப்பு தேவை என்றும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவான் கூறினார். அரசியலமைப்பின் 30(1) வது பிரிவை மேற்கோள் காட்டிய தவான், இந்த சட்டப்பிரிவு மொழியியல் மற்றும் மத சிறுபான்மையினருக்கு அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவ மற்றும் நிர்வகிப்பதற்கான அடிப்படை உரிமையை வழங்குகிறது என்றும் சுட்டிக் காட்டினார்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment