Thursday, January 4, 2024

கேப்டன் பாத்திமா வாசிம்....!

வரலாறு படைத்த கேப்டன் பாத்திமா வாசிம்....! 

உலகம் முழுவதும் பொதுவாக இஸ்லாம் குறித்து கருத்து தெரிவிக்கும் பலர், இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள். நல்ல கல்வி பெறவும், அவர்களது திறமைகளை வெளிப்படுத்தவும், இஸ்லாமிய பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என பொதுவாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், உண்மையில் பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் வழங்கியுள்ள சுதந்திரம், சலுகைகள் போன்று வேறு எந்த மதங்களிலும் அளிக்கப்படவில்லை என உறுதியாக கூறலாம். 

கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, உயர் பதவிகளில் அமரும் உரிமை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்த உரிமை என அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாமிய மார்க்கம் குறித்து தவறான புரிதல் காரணமாகவும் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய குடும்பங்களில் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாகவும், முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களது தவறான சிந்தனைகளையும், எண்ணங்களையும் களைய அவர்கள் முறையாக இஸ்லாம் குறித்தும், பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்தும் அறிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. இதன் காரணமாக, இஸ்லாமிய பெண்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். 

கேப்டன் பாத்திமா வாசிம்:

இஸ்லாமிய பெண்கள் நல்ல உயர்கல்வி பெற்று வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் வகையில் சாதிக்கலாம் என்பதற்கு, இந்திய ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவர் பாத்திமா வாசிம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்து வருகிறார். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது வஸியுதீன் தாத்னியின் மகளான பாத்திமா வாசிம், அங்குள்ள சி.அப்துல் ஹக்கீம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தனது கல்வியை தொடங்கினார். பின்னர் பஷீர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த அவர், பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு  461 மதிப்பெண்கள் பெற்று மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1165 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்ற பாத்திமா வாசிம், மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை பூர்த்தி செய்யும் வகையில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, அங்கு படிப்பில் தனக்கு உள்ள ஆர்வத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, தேர்ச்சி பெற்று முஸ்லிம் பெண் மருத்துவராக வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தில் மருத்துவப் பணியில் பாத்திமா வாசிம் சேர்ந்தார். 

 சியாச்சின் பனிப்பாறை: 

இமயமலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சியாச்சின், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ள மிகப் உயரமான செங்குத்தான பனிமலைகளை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதி அதன் மூலோபாய முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாமல், மன்னிக்க முடியாத காலநிலை மற்றும் சவாலான நிலப்பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. இந்தியாவில் மிகப் பெரியதும், உலகளவில் இரண்டாவது மிக உயரமான பனிப்பாறையாக சியாச்சின் பனிப்பாறை இருந்து வருகிறது.  உலகின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் சவாலான போர்க்களமாக சியாச்சின் இருந்து வருகிறது. இங்கு  வருடாந்திர பனிப்பொழிவு ஆயிரம் சென்டி மீட்டராகும். அதாவது, ஆண்டுக்கு 35 அடி அளவுக்கு பனிப்பொழிவு இருந்து வருகிறது. வெப்பநிலை சில நேரங்களில் 86oF ஆக குறைகிறது. 

யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பாறையில் ஆண்டுதோறும் ஆயிரம் சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு பொழிவும் என்றால், அங்கு நிலைமை எப்படி இருக்கும் என்பதை நாம் நன்கு உணர்ந்துகொள்ளலாம். இந்த கடுமையான பனிப்பிரதேசத்தில் தான்,  சியாச்சின் போராளிகள் குழுவைச் சேர்ந்த சென்னை முஸ்லிம் பெண் மருத்துவர் பாத்திமா வாசிம், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டார். 

கடுமையான பயிற்சி:


கடுங்குளிருடன், மிக கடினமான வானிலையில் பணியாற்ற தேவையான தீவிர பயிற்சிகள் அனைத்தையும் சியாச்சின் போர்ப் பள்ளியில் சேர்ந்து அவர் பெற்றார். கடுமையான காலநிலை, மணிக்கு 300 கிலோ மீட்டர் பனிக்காற்றின் வேகம், மற்றும் சவாலான நிலப்பரப்பு என அனைத்தையும் எதிர்கொண்ட பாத்திமா வாசிம், கடுமையான பயிற்சியை மிகச் சிறப்பாக நிறைவு செய்தப்பிறகு 15 ஆயிரத்து 200 அடி உயரத்தில் ராணுவ மருத்துவமனையில்  மருத்துவர் பதவிக்கு சேர்க்கப்பட்டார். தனது பயிற்சியின்போது பல்வேறு நிலைகளையும் சவால்களையும் சந்தித்த பாத்திமா வாசிம், அவற்றில் மிகச் சிறப்பாக பயிற்சி பெற்றது ராணுவ அதிகாரிகளையும் வியப்பு அடையச் செய்தது. 

சியாச்சின் போர்ப் பள்ளியில் சேர்ந்த பாத்திமா வாசிம், தனது அடங்காத ஆர்வம் மற்றும் மகத்தான உத்வேகம், வல்லமைமிக்க திறமை, அசைக்க முடியாது துணிச்சல், உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம்,  மிகப்பெரிய அளவுக்கு வரலாறு படைத்துள்ளார். சாதனை நிகழ்த்திய கேப்டன் பாத்திமா வாசிமை தற்போது தேசமே பாராட்டுகிறது.  தனது சாதனை மூலம்,  உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் செயல்படும் ராணுவ மருத்துவமனையில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற பெருமையை  கேப்டன் பாத்திமா வாசிம் பெற்றுள்ளார். 

வரலாற்றில் இடம் பிடித்த பாத்திமா வாசிம்:


தனது அசாத்திய துணிச்சல், ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கேப்டன் பாத்திமா வாசிம் மிகப்பெரிய அளவுக்கு சாதனையை நிகழ்த்தி, இந்திய வரலாற்றில் மட்டுமல்லாமல், இந்திய முஸ்லிம் பெண்களின் வரலாற்றிலும் இடம் பிடித்துள்ளார். கேப்டன் பாத்திமா வாசிமின் இந்த சாதனையை அனைத்து பெண்களும், தங்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல உதாரணமாக எடுத்துகொண்டு, வாழ்க்கையில் சாதிக்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், கல்வியில் மட்டுமல்லாமல், தங்களது திறமைகளை வெளிப்படுத்த அனைத்து துறைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வத்துடன் உள்ள தங்கள் பெண் குழந்தைகளை முஸ்லிம் பெற்றோர்களும் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளிக்க வேண்டும். இதன்மூலம், முஸ்லிம் பெண்கள் நல்ல கல்வியை பெற்று, உயர் பதவிகளில் அமர்ந்து, தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் மிகச் சிறப்பான சேவையை ஆற்ற முடியும். 

அத்துடன், இஸ்லாமிய பெண்கள் குறித்து தவறான புரிதல்களை மாற்று மத தோழர்களிடம் இருந்து களைய முடியும். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள், சலுகைகள், சுதந்திரம் ஆகியவை குறித்து மிகச் சிறப்பான முறையில், உலகத்திற்கு எடுத்துக் கூற வாய்ப்பு உருவாகும். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா வாசிம், நல்ல கல்வி பெற்று, ராணுவத்தில் மருத்துவராக சேர்ந்தது மட்டுமல்லாமல், சியாசின் பனிப்பாறை பகுதியில் பணியில் அமர்ந்து நாட்டிற்கு சேவை ஆற்றி வருவது உண்மையில் பெருமை அளிக்கிறது. இஸ்லாத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த கேப்டன் பாத்திமா வாசிமை, மணிச்சுடர் நாளிதழ் சார்பில் வாழ்த்துவதில் நாமும் மகிழ்ச்சி அடைகிறோம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: