அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை மதிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை....!
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்.....!
புதுடெல்லி,ஜன11-உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கி கடந்த 1967ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்நாள் விசாரணையில், அலிகர் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், பல்கலைக்கழகத்தில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும் வகுப்புவாத நிறுவனமாக அலிகர் பல்கலைக்கழகம் இல்லை என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சிறுபான்மை அந்தஸ்து பாதுகாப்பு தேவை என்றும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவான் கூறினார்.
கபில் சிபல் வாதம்:
இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது, அலிகர் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டம் குறித்து தனது வாதத்தில் குறிப்பிட்டார். இந்த சட்டத் திருத்ததை எதிர்க்க முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டத்தை சுட்டிக் காட்டிய கபில் சிபல், அதேபோன்று, அலிகர் பகல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்தை அளித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் கடமை:
மேலும் தொடர்ந்து வாதிட்ட அவர், எனவே, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை மதிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் தெரிவித்தார். ஆனால், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழத்தின் விவகாரத்தில் மோடி அரசின் செயல்பாடு மிகவும் அதிருப்தி அளிப்பதாகவும் கபில் சிபல் கண்டனம் தெரிவித்தார்.
அலிகர் பல்கலைக்கழகம் தொடர்பாக கடந்த 1981ஆம் ஆண்டு நாடாளுமன்றம் செய்த சட்டத் திருத்தங்களின்படி புதிய விதி ஒன்று இணைக்கப்பட்டது. அதன்படி, நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மத்தியில் கல்வி, மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிக்க வழி வகுக்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலைப்பாட்டை மாற்றுவது சரியல்ல:
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக் கொள்வதாக தறபோது முதல்முறையாக அரசு கூறியிருப்பதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக கூறியுள்ளது என்றும் அது உண்மை தான், என்றும் தெரிவித்தார். ஆனால், நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கும்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது சரியல்ல. இப்படி மாறுப்பட்ட நிலைப்பாட்டை அரசு எடுப்பது, ஒரு தீவிரமான பிரச்சினையாகவே கருத வேண்டி இருக்கிறது என்றும் சிபல் கூறினார்.
தீர்மானிக்க வேண்டும்:
தொடர்ந்து பேசிய கபில் சிபல், அலிகர் பல்கலைக்கழகம் சிறுபான்மை நிறுவனமா இல்லையா என்ற அடிப்படைக் கேள்வியைத் தீர்மானிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். மேலும், இந்த பிரச்சினை 1981 திருத்தங்கள் அல்லது வேறு எந்த சட்டத்தையும் சார்ந்து இருக்க முடியாது என்று அவர் வாதிட்டார்,
நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ரத்து செய்வதை மத்திய அரசு அங்கீகரிக்கிறது என்றால், அவசரகால நிலையின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அடிப்படை உரிமைகளை ரத்து செய்து 39வது அரசியலமைப்புத் திருத்தம் செய்தது உட்பட பல சட்டங்களை அங்கீகரிக்க மற்றும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்படும் என்றும் கபில் சிபல் கூறினார். இந்த வழக்கின் மூன்றாவது நாள் விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது,
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment