நிதிஷ்குமார் விலகல், இந்தியா கூட்டணிக்கு நன்மையே....!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டிய முக்கியமானவர்களில் ஒருவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருந்தார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்தியவரும் அவர்தான். இதனை தொடர்ந்து நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டங்களிலும் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். எனினும், இந்தியா கூட்டணியை வலுவான அமைப்பாக மாற்ற தேவையான முக்கிய பணிகளில் அவர் ஆர்வம் காட்டவில்லை. கிட்டதட்ட ஒதுங்கியே இருந்து வந்தார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எதிர்மறையாகவே இருந்து வந்தன. எனவே, அவர் விரைவில் பாஜக அணியில் இணைந்து விடுவார் என்ற கருத்து ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தது. அது தற்போது உண்மையாகிவிட்டது.
நிச்சயமற்ற தன்மை:
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருக்கும் நிதிஷ்குமாரிடம் எப்போதும் ஒருவித நிச்சயமற்ற தன்மை குணம் இருந்து வருகிறது. கொள்கையில் உறுதியுள்ளவராக அவர் எப்போதும் இருந்ததில்லை. நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாத அவர், தனது சொந்த மாநிலமான பீகாரின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவுக்கு பணிகளை ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எப்போதும் பதவியை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்ட நிதிஷ்குமார், அதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார் என்பதை அவருடைய செயல்பாடுகள் மூலம் அவரே அதனை பலமுறை நிரூபித்துள்ளார். அரசியல் என்பது மக்களின் நலனுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் என்பதை மறந்துவிட்டு சுயநலத்துடன் செயல்படும் நபர் தான் நிதிஷ்குமார் என உறுதியாக கூறலாம். இப்படிப்பட்ட தலைவர் தான் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பதை அறிந்து பீகார் மாநில மக்கள் மட்டுமல்லாமல், நாட்டு நலனில் அக்கறை உள்ள பலரும் வேதனை அடைந்துள்ளனர்.
பாஜகவின் சதி திட்டம்:
இந்தியா கூட்டணியின் வலிமையை நன்கு உணர்ந்துகொண்ட பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அந்த கூட்டணியை சிதைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போதும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொள்கையில் பிடிப்பு இல்லாத நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டது. வழக்கமாகவே அவ்வவ்போது அணி மாறும் குணம் கொண்ட நிதிஷ்குமாரை வளைத்துபோட திட்டங்கள் திட்டப்பட்டன. பாஜக தீட்டிய திட்டத்தின்படி, நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
எல்லாம் நன்மைக்கே:
நிதிஷ்குமார், மீண்டும் பாஜக அணியில் இணைந்தது, தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், நிதிஷ்குமார் குறித்து நன்கு அறிந்து இருக்கும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ஆயா ராம், காயா ராம் என்ற நிலைப்பாட்டில் நிதிஷ்குமார் எப்போதும் இருந்து வருவதாக விமர்சனம் செய்துள்ளனர். இதன்மூலம் இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமை கிடைக்கும் என்றும் எல்லாம் நன்மைக்கே என்றே தாங்கள் கருதுவதாகவும் கூறியுள்ளனர். பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஒருபடி மேல் சென்று, இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும், நிதிஷ்குமாரின் முடிவுக்கும் அவரது செயல்பாட்டிற்கும் பீகார் மக்கள் தகுந்த பாடத்தை வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் நோக்கர்கள் கருத்து:
இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது குறித்து கருத்து கூறியுள்ள பல அரசியல் நோக்கர்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, நிதிஷ்குமார் விலகியது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த பலம் என்று கூறியுள்ளனர். அடிக்கடி நிறம் மாறும் நிதிஷ்குமார் போன்ற அரசியல்வாதிகளை வைத்துகொண்டு, இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதால், அந்த கூட்டணிக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகப்பெரிய குழப்பமே இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் சேர்ந்து இருப்பது, இந்தியா கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறியுள்ளனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர்கள் சிலர் கூறியுள்ள கருத்தின்படி, நிதிஷ்குமார், தன்னுடைய தவறான முடிவால், தன்னுடைய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார் என்றே கூறலாம். அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி நிறம் மாறும் நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் மட்டுமல்லாமல், அவரை மிரட்டிய பாஜகவிற்கும் நாட்டு மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பது நிச்சயம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment