Monday, March 25, 2024

கே.எம்.சி.சி.க்கு பாராட்டு...!

அனைத்துத் தரப்பு மக்களுக்கு சேவை ஆற்றும் காயிதே மில்லத் மனிதநேய மையம்....!

கே.எம்.சி.சி. சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் திறப்பு நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பாராட்டு....!

சென்னை, மார்ச்25-சென்னையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் கே.எம்.சி.சி. தமிழக கிளையின் சார்பில், புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, எழும்பூர் பைஸ் மஹாலில் 24.03.24 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் ஆலிம் பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கே.எம்.கே.பேச்சு:

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், காயிதே மில்லத் மனிதநேய மையம் செய்து வரும் மனித நேயப்பணிகளை வெகுவாக பாராட்டினார். சாதி, மதம் பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும், காயிதே மில்லத் மனிதநேய மையம் செய்துவரும் பணிகள் மூலம் 700க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இதுபோன்ற பணிகள் இனியும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் பேசிய பேராசிரியர், சென்னையில் இயங்கி வரும் கே.எம்.சி.சி. கேரள மக்களின் நலனுக்காக மட்டுமே பணியாற்றவில்லை என்றும், அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தன்னுடைய பணிகளை செய்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

செல்வப் பெருந்தகை கேள்வி:

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, நாட்டின் விடுதலைக்காக எந்தவித பங்களிப்பையும் வழங்காத பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள், நாட்டின் உண்மையான பூர்வகுடி மக்களை பார்த்து, தற்போது நீங்கள் நாட்டிற்கு எந்த பணிகளையும் ஆற்றவில்லை என கூறி வருவதாக குற்றம்சாட்டினார். நாட்டின், விடுதலைக்காக இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்களிப்பை போன்ற பங்களிப்பை இதுவரை யாரும் செய்து இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்திய நாடு, இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சொந்தமான நாடு என்றும், விரைவில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. உள்ளிட்ட சட்டங்கள் ஒழிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முன்னாள் எம்.பி. அப்துர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகளிர் அமைப்பின் தேசிய தலைவர் பாத்திமா முசப்பர், இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமுத தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: