குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது...!
ஒன்றிய பாஜக அரசுக்கு,செய்யது சாதி அலி ஷிகாப் தங்ஙள் கண்டனம்
மும்பை, மார்ச்18- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மும்பையில் நிறைவு பெற்றது. இதையொட்டி, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று (17.03.2024) நடைபெற்றது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்கள் கலந்துகொண்டு, மணிப்பூர் முதல் மும்பை வரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து கூறி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். ஆனால், நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சி அனைவருக்குமான நீதி உள்ளிட்ட அம்சங்களுக்கான இந்த பயணம், இன்றோடு நிறைவு அடையவில்லை. நாம் இன்னும் வீரியத்துடனும், வேகத்துடனும், செயல்படவேண்டிய, பணியாற்ற வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது.
இத்தகைய உயர்ந்த நோக்கத்திற்காக நமது அர்ப்பணிப்புகள், பணிகள் இன்னும் வேகம் எடுக்க வேண்டும். அனைத்து சமுதாய மக்களுக்கும் மனித நேயத்துடன் ஆற்ற வேண்டிய பணிகள், அர்ப்பணிப்புகள் ஆகியவை மேலும் வலிமையுடன் நாம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
ராகுல் காந்தியின் பயணம்:
நமது மதிப்பிற்குரிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, மக்கனை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? ஆகியவை குறித்து நேரில் அறிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளுக்கு பல்வேறு வழிகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.
தனது பயணத்தின் மூலம் நாட்டில் உள்ள சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை அறியக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு ராகுல் காந்திக்கு கிடைத்து இருக்கிறது.
நாட்டு மக்களிடையே இன்று பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் லாபம் பெற பாசிச சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் மூலம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறார். அதை இனியும் ஏற்படுத்த முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சி.ஏ.ஏ. சட்டம் அமல்:
ஒன்றிய பாஜக அரசு, மக்களிடையே பிரிவினையையும், பிளவையும் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை தற்போது நாடு முழுவதும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதேபோன்று என்.ஆர்.சி. உள்ளிட்ட திட்டங்களையும் நடைமுறைத்த முயற்சி செய்து வருகிறது.
ஆனால் ஒன்றை மட்டும் நான் இங்கு உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். தனது பாசிச சட்டங்கள் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் தற்போது இருக்கும் ஒற்றுமைய பாஜக சீர்குலைக்க முடியாது. நாட்டு மக்களிடையே இருக்கும் பாசப் பிணைப்பை பறித்துவிட முடியாது. நமது பெருமை மிக்க இந்திய நாட்டின் தலைவர்கள், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றை நமக்கு மிகச் சிறப்பாக போதித்து இருக்கிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் நன்மைகள் குறித்தும், அமைதி குறித்தும் அந்த தலைவர்கள் மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
உறுதியுடன் பணியாற்ற வேண்டும்:
பெருமை மிக்க சிவாஜி பூங்காவில் கூடியுள்ள நாம் அனைவரும், தற்போது நாட்டில் உண்மையான சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் நிலையில், அதை தடுத்த நிறுத்த உறுதியாக பணியாற்ற வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் நமது பணிகளை நாம் அமைத்துக் கொண்டு செயல்புரிய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் உறுதியுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.
நாட்டு மக்கள் கட்சியை அடிப்படையாக கொண்டு, தங்களது வாக்குகளை அளிப்பதை விட்டுவிட்டு, கொள்கையை அடிப்படையாக கொண்டும், நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகள் எவை? என்பதை அறிந்துகொண்டும் வாக்களிக்க வேண்டும். நாட்டின் மீது உண்மையாக அக்கறை கொண்டவர்கள் யார்? நாட்டில் ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஒற்றுமை ஆகிய அம்சங்களை முன்வைத்து, நன்கு ஆராய்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள்:
நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மிகவும் அவசியம். ஒளிமயமான எதிர்காலத்தையும் இந்தியாவையும் உருவாக்க வேண்டுமானால், ஒருங்கிணைந்த பணிகள், செயல்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை நாம் உணர்ந்துகொண்டு, அதை ஒரு கடமையாக நாம் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஒளிமயமான, அமைதியான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க முடியும்.
இவ்வாறு செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் பேசினார்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment