இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு கிடைத்த வைரம் நவாஸ் கனி....!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்-
நாடு விடுதலை அடைந்துபிறகு, நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டு, கடந்த 1954ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் நாடாளுமன்றம் செயல்பட தொடங்கியது. நாடாளுமன்றம் செயல்பட தொடங்கிய 1954ஆம் ஆண்டு முதல், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தொடர்ந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் கட்சிகள் இந்தியாவில் இரண்டு மட்டுமே இருந்து வருகின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே, நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து பிரதிநிதிகளை அனுப்பி வைத்து, நாட்டிற்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேவை ஆற்றி வருகின்றன.
மக்கள் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, அதற்கு நல்ல தீர்வு காணும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றி வருகிறார்கள். முஸ்லிம் பிரதிநிதியாக இருந்தாலும், இவர்கள் யாரும் முஸ்லிம்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பது இல்லை. மாறாக அனைத்து சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கும், நாட்டில் எழும் முக்கிய பிரச்சினைகளுக்கும் எதிராக குரல் எழுப்பி, அதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தாங்கள் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை தங்களது செயல்பாடுகள் மூலம் நிருபித்து வருகிறார்கள்.
கே.நவாஸ் கனி என்ற வைரம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இராமநாதபுரம் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் கே.நவாஸ் கனி, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த 17வது மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை பெரும்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்தார். தற்போது நடக்க இருக்கும் 18வது மக்களவைத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், இரண்டாவது முறையாக இராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நவாஸ் கனி, மார்க்கத்தால் இஸ்லாமியராக இருந்தாலும், அவர் ஒரு சுத்த தமிழர் என்பது நாம் எல்லோரும் பெருமை அடைய வேண்டிய விஷயமாகும். அமைதியான குணம் கொண்ட நவாஸ் கனி, எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் மனிதர். அவரது பணிகள் எல்லாம் வேகமாகவே இருக்கும். எந்த பணிகளையும் தள்ளிப் போடும் குணத்தை அவரிடம் நாம் பார்க்க முடியாது. இப்படி நவாஸ் கனி குறித்து நாம் ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் தொகுதிக்கும், தமிழக மக்களுக்கும், இந்திய சமுதாயத்திற்கும், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்களின் நலனுக்கும் ஆற்றிய சேவைகள், நிறைய இருக்கின்றன. அதுகுறித்து நாம் கொஞ்சம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
நவாஸ் கனியின் நாடாளுமன்ற உரைகள்:
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு, அழகிய தமிழில் பேசும் நவாஸ் கனி, தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து மட்டும் பேசாமல், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தனது வாதங்களை எடுத்து வைக்க தவறுவதில்லை. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி பட்டியலின மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பாஜக அரசின் போக்கிற்கு கண்டனம், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட முக்கிய மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பங்கேற்பு, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பு, வினா-விடை அமர்வில் பங்கேற்பு,என முக்கிய விவாதங்களில் நவாஸ் கனி கலந்துகொண்டு, தனது கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்து வைக்க ஒருபோதும் தவறுவதில்ல்லை.
"பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். இதுதான் பாஜக ஆட்சியின் கடந்த 10 ஆண்டு கால சாதனை. பாஜக அரசு சிறுபான்மை மக்களை தொடர்ந்து வஞ்சிக்கக் கூடிய அரசு. சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல எஸ்சி, எஸ்டி, ஓபிசி என இதர சமூக மக்களுக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியை குறைத்து அவர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசு. தமிழ்நாட்டிற்கு எந்தவித புதிய திட்டங்களையும் பாஜக செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாரபட்சமாய் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்யும் அநீதிக்கு, தமிழ்நாடு மக்கள் பாஜகவிற்கு தொடர்ந்து பாடம் புகட்டி வருகிறார்கள். தொடர்ந்து புகட்டுவார்கள்" இப்படி நாடாளுமன்ற மக்களவையில் நவாஸ் கனி கர்ஜித்து இருக்கிறார்.
மேலும் "சிறுபான்மை மக்களை பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரீ மெட்ரிக் உதவித்தொகைக்கான நிதி பாஜக அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது. சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மாணவர்கள் ஆராய்ச்சி கல்வி கற்பதை தடுக்க கூடிய அரசாக பாஜக அரசு இருக்கிறது'' என்று நவாஸ் கனி நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றி, முஸ்லிம்களின் கவனத்தை மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் கவர்ந்து பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.
ஜனநாயகம் காக்க குரல்:
"தமிழ்நாடு உட்பட பாஜக ஆட்சி செய்யாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களின் மூலம் ஒருவித அழுத்தத்தை மாநில அரசுகளுக்கு கொடுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு மாபெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஜனநாயக மரபுகளை தகர்க்கும் ஆபத்து மிகுந்தது. இந்த ஆபத்தை தடுக்க, குடியரசுத் தலைவர் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களுக்கு வலியுறுத்தல்களை வழங்க வேண்டும்" இப்படி நாடாளுமன்றத்தில் பேசிய நவாஸ் கனி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பாஜக ஆளுநர்களின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் போக்குகளையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
பன்முகத்தன்மைக்கு ஆபத்து:
நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பேசிய நவாஸ் கனி, "அழகிய பூந்தோட்டமே இந்தியா என்று நாம் காலம் காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நம்முடைய நாட்டை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அந்த பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விட்டதோ என்று அச்சம் எழுகிறது. அந்த அளவிற்கு பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம்' என்று பன்முகத்தன்மைக்கு எதிரான மிகப்பெரிய விவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜக அரசின் செயல்பாடுகள், பன்முகத்தன்மைக்கு மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளன" என்று குறிப்பிட்ட அவர், "இந்திய தேசத்தின் உணர்வையும் வரலாற்றையும் கலாச்சார பாரம்பரியத்தையும் மனதில் ஏந்தி செயல்பட வேண்டும்" என்றும் பாஜக ஆட்சியாளர்களை கேட்டுக் கொண்டார்.
மேலும், "சுதந்திர நாடு ஜனநாயக நாடு இங்கு மக்கள் தான் எஜமானர்கள் அவர்கள் மீது எதையும் எவரும் திணிக்கவோ வற்புறுத்தவோ முடியாது. எங்களுக்கு ஒன்றை வேண்டாம் என்று கூறும் பொழுது அதனை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை" என்றும் பாஜகவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நவாஸ் கனி பேசியது அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது.
பாஜக வாக்குறுதி-நவாஸ் கனி சாடல்:
பாஜகவின் வாக்குறுதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நவாஸ் கனி, "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றீர்கள், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றீர்கள், நாட்டின் பொருளாதாரம் இமைய உயரத்தை அடையப்போகிறது என்றீர்கள் இப்படி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்று பேசி ஆட்சியில் அமர்ந்தீர்கள் இதில் ஏதாவது ஒன்றிலாவது தன்னிறைவு அடைய முடிந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இராமநாதபுரம் மீனவர்கள் பிரச்சினை குறித்து அவர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இதுதொடர்பாக மக்களவையில் பேசியபோது, " எங்களுடைய பகுதிகளின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வளவு பெரிய நாடு நாம், ஆனால் ஒரு சிறிய அண்டை நாட்டுடன் ஒரு பேச்சு வார்த்தையை நடத்தி நம்முடைய மீனவர்களை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி எப்படி பெருமிதம் கொள்ள முடியும்" என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
தொகுதிகளுக்கான பணி:
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதை மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனது இராமநாதபுரம் தொகுதியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நவாஸ் கனி ஆற்றிய பணிகள் ஏராளம் என கூறலாம். குறிப்பாக, சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ரயில் இயக்குவது, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வலியுறுத்திய நவாஸ் கனி, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
இதேபோன்று, இராமநாதபுரத்தில் தென்னை பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும். சாயல்குடி பகுதியில் நவீன பனைசார் பொருட்கள் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இராமநாதபுரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இப்படி தனது தொகுதிக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து குரல் கொடுத்து அதற்கு நல்ல தீர்வையும் கண்டவர் தான் நமது நவாஸ் கனி.
கொரோனா பேரிடர் காலத்தில் தனது தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்கள் அனைவருக்கும், நவாஸ் கனி ஆற்றிய மகத்தான சேவை மக்கள் மத்தியில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் இருந்து வருகிறது.
கல்வி உதவித் தொகை:
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் நல்ல கல்வியை பெற வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை ஆற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் நவாஸ் கனிக்கு எப்போதும் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகையை அவர் வழங்கி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு நவாஸ் கனி கல்வி உதவித்தொகையை வழங்கி அவர்களின் வாழ்வில் கல்வி ஒளியை ஏற்றி இருக்கிறார். இராமநாபுரம் தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, இதுபோன்ற கல்வி உதவித்தொகையை கடந்த ஐந்து ஆண்டுகளாக நவாஸ் கனி வழங்கி வருவது மாணவ சமுதாயத்தை, குறிப்பாக ஏழை, எளிய மாணவ மாணவிகளை பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
அவசியம் தேர்வு செய்யப்பட வேண்டும்:
இராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குரல் கொடுத்து பணியாற்றிய நவாஸ் கனி, மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நாடாளுமன்றத்தில் பிற கட்சி உறுப்பினர்களை போல் இல்லாமல், மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வரும் நவாஸ் கனி, இராமநாதபுரம் மக்களால் மீண்டும் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவைக்கு செல்வது உறுதி என்றே கூறலாம். நவாஸ் கனி போன்ற சமுதாய நலம் கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டாமல் மட்டுமே, முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு நல்ல முறையில் தீர்வு காண முடியும்.
இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனியை தேர்வு செய்வதன் மூலம், அந்த தொகுதி மக்கள், தங்களது தொகுதிக்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முடியும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நவாஸ் கனியை மீண்டும் தேர்வு செய்வது தங்களது கட்டாயக் கடமை என்றும் தொகுதி மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நவாஸ் கனி, இரண்டாவது முறையாக இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கும், நாட்டிற்கும் பலன் அளிக்கும் வகையில் மிகச் சிறந்த முறையில் சேவை ஆற்ற எமது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறோம்.
=================
No comments:
Post a Comment