சின்னச் சின்ன விஷயங்களில்....!
மனிதர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் எப்போதும் குடிபுகுந்து இருக்க வேண்டுமானால், அவன் சின்னச் சின்ன விஷயங்களில் தனது கவனத்தை திருப்ப வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களின் மதிப்பை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களின் மதிப்பை அறிந்துகொள்ளாமல் இருப்பதால், மனிதன் பல சந்தோஷங்களை இழக்கிறான். துன்பங்களை அனுபவிக்கிறான். அதன் காரணமாக குடும்பத்தில் மட்டுமல்லாமல், மற்றவர்களின் மத்தியிலும் மதிப்பை இழக்கிறான்.
வாழ்க்கையில் ஒருவன் பெரிய அளவுக்கு சாதிக்க வேண்டுமானால், முதலில் அவன் செய்ய வேண்டியது சிறிய விஷயங்களில் தனது கவனத்தை சிறப்பாக செலுத்தி, அதை நல்ல முறையில் செய்ய வேண்டும். அப்படி செய்வதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி சிறிய விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, அதை சிறப்பாக செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், பின்னர், பெரிய, பெரிய விஷயங்கள் செய்வது மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் மனிதனுக்கு அமைந்துவிடும். உலக வரலாற்றில் மிகப்பெரிய அளவுக்கு சாதனைகளை நிகழ்த்தியவர்கள் அனைவரும், தங்களது ஆரம்பக் காலத்தில் சின்னச் சின்ன விஷயங்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு இருப்பது தெரியவருகிறது.
நல்ல செயல்கள் மூலம்:
மனிதன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், அவனிடம் நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல பண்புகள் இருக்க வேண்டும். ஏக இறைவனின் தூதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நம்பிக்கையாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதை "நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்" என்று மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
இதேபோன்று, பொறாமை குணம் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, "நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்" என்று கூறி பொறாமை மனிதனின் நற்செயல்களை வீணாக்கிவிடும் என எச்சரித்துள்ளார்கள்.
கோப குணம் குறித்து குறிப்பிட்டுள்ள அண்ணலார் அவர்கள், "குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்" என்று மிக அற்புதமாக கூறியுள்ளார்கள்.
மேலும், நற்செயல்கள் குறித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதமான அமுதமொழிகள் ஏராளமாக இருந்து வருகின்றன. அவற்றில் ஒருசிலவற்றை இங்கே காணலாம். "பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்" "எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்" "உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்" "பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்" "அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்" "இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்" "தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது" "நோயாளிகளை நலம் விசாரியுங்கள்" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சின்ன விஷயங்கள் மூலம்:
விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரிப்பது, சாலையில் கிடக்கும் முள்ளை அப்புறப்படுத்துவது, ஒரு சகோதரனைப் பார்த்து அன்புடன், மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்வது, இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாமல் இருப்பது, ஏழை எளியவர்களுக்கு உணவு அளிப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, இவை அனைத்தும் சின்னச் சின்ன விஷயங்கள் தான். ஆனால் இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனிதன் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அவனுடைய வாழ்க்கையில், மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். அவனது குணங்களில் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலம், அவனை எல்லோரும் நேசிப்பார்கள். அவன் மீது எல்லோரும் அன்பு செலுத்துவார்கள். அவனைப் பார்க்கும்போது, அன்புடன் வரவேற்பார்கள். அவன் நலனில் மற்றவர்கள் எப்போதும் அக்கறைக் கொள்வார்கள்.
ஆக, ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் மேற்கொள்ளும், கடைப்பிடிக்கும் அல்லது செய்துவரும் சிறியச் சிறிய செயல்கள் மூலம் அவனுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். எனவே, மனிதன் சிறிய விஷயங்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சின்ன விஷயம் தானே அதை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
ஒருவருக்கு உதவிச் செய்ய நினைத்தால், அப்படியொரு எண்ணம் மனதில் உருவானால், உடனே அதை செய்துவிட வேண்டும். நாளைக்கு செய்யலாம் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. வாழ்க்கையில் அடுத்த நொடியில் என்ன நிகழும் என்பதை யாரும் அறிய முடியாது. என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, சிறிய விஷயங்களில் நாம் எப்போதும் கவனத்துடனும் எச்சரிக்கையாவும் இருப்பது மிகவும் அவசியம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் மீது நல்ல அன்பை செலுத்தி, அவர்களின் நல்வாழ்விற்காக நாம் செய்யும் சின்னச் சின்ன செயல்கள், நம்முடைய குடும்பத்தை மட்டுமல்லாமல், நம்மையையும் உயர்நிலைக்குக் கொண்டு சென்று, மகிழ்ச்சி அடையச் செய்யும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரிய அளவுக்கு சாதிக்க:
மனிதன் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதிக்க வேண்டுமானால், அதற்கு சரியான முறையில் எண்ணங்களையும் செயல்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படி, சரியான முறையில் அமைத்துக் கொள்ளும் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம், ஒருவனுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். இந்த சிறப்பான பயிற்சி, சிறிய விஷயங்களை மேலும் மிகச் சிறப்பாக செய்ய உதவும். அத்துடன், ஒருவன் வாழ்க்கையில் மேற்கொள்ள இருக்கும் மிகப்பெரிய குறிக்கோளை, இலக்கை வெற்றிக்கரமாக எட்ட, சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் கிடைக்கும் பயிற்சி மிகவும் பயன் தரும் வகையில் நிச்சயமாக இருக்கும்.
சின்னச் சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தாமல் சோம்பலுடன் இருந்தால், நம்மால் நிச்சயம் பெரிய செயல்களை செய்ய முடியாது. நமது உயர்ந்த இலட்சியங்களை அடைய முடியாது. இலட்சியங்களை எட்ட மிகப்பெரிய அளவுக்கு முயற்சி செய்தாலும், அந்த முயற்சி பலன் அளிக்காது. இதற்கு முக்கிய காரணம், சிறிய விஷயங்களில் நமது கவனம் சிதறி, அதை விருப்பத்துடன் செய்யாமல் இருந்ததே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதிக்க உங்களுக்கு விருப்பமா? அப்படியெனில், இனி வரும் நாட்களில், உங்களது எண்ணங்களையும், செயல்களையும் மாற்றி அமைத்துக் கொண்டு, சிறிய விஷயங்களில் அக்கறையுடன் செயல்படுங்கள்.
ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை:
மனிதனின் நலனில், அவனது நல்வாழ்வில் பெரிதும் அக்கறைக் கொண்டவன் ஏக இறைவன். திருக்குர்ஆனை வாசிக்கும்போது மனிதன் மீது எந்தளவுக்கு இறைவன் கருணையுடன் இருக்கிறான். அவன் நலனில் அக்கறையுடன் இருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனவே ஏக இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து, நீங்கள் உறுதியுடன் செயல்பட தொடங்கினால், நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி எற்படும். உங்கள் எண்ணங்கள், செயல்களாக மாறி மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை தேடித்தரும். வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியும், ஆனந்தமும் கிடைக்க, இனி நாம் அனைவரும் சின்னச் சின்ன விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதை வழக்கமாகவும் பழக்கமாகவும் மாற்றிக் கொள்வோம்.
- எஸ்.எ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment