Tuesday, March 26, 2024

ஒன்றியத்திலும் திராவிட மாடல் ஆட்சி.....!

ஒன்றியத்திலும் மலர வேண்டும் திராவிட மாடல் ஆட்சி.....!

தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் திராடவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்திலும் ஏற்பட வேண்டும் என்பது தற்போது தமிழக மக்களின் விருப்பமாக மட்டுமல்லாமல், அனைத்து மாநில மக்களின் எண்ணமாகவும் இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது, என்ன? என்று கேள்வி எழுப்பினால், "எல்லோருக்கும் எல்லாமே" என்பதே, திராவிட மாடல் ஆட்சி என்று மிகச் சிறந்த விளக்கம் நமக்கு கிடைக்கிறது. 

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

ஒரு ஆட்சி என்பது, குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமான ஆட்சியாக இல்லாமல், எல்லோருக்குமான ஆட்சியாக இருக்க வேண்டும். எல்லோருக்குமான ஆட்சியில், மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடைய வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அந்த  உயர்ந்த நோக்கத்தில் தான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மிகச் சிறந்த முறையில், திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். 

திராவிட மாடல் ஆட்சியில்  முன்னேற்றம்:


திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் முன்னேற்றம் அடைந்து இருக்கிறதா என சிலர் சந்தேகம் எழுப்பலாம். பல்வேறு கேள்விகளை முன் வைக்கலாம். இப்படி கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பும் மக்களுக்கு சில விளக்கங்களை தருவது மிகவும் அவசியமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு தமிழகம், 9 சதவீத பங்கைத் தருகிறது. இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.)அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  இது, இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி இரண்டு நான்கு சதவீதமாக இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8 புள்ளி ஒன்று ஒன்பது சதவீதமாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை. 

இந்திய அளவில் பணவீக்கமானது 6 புள்ளி ஆறு ஐந்து சதவீதமாக  இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5 புள்ளி ஒன்பது ஏழாக குறைந்துள்ளது.இது, நான்காவது சாதனை. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இது, ஏழாவது சாதனை.

கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது திராவிட மாடல் ஆட்சியின் எட்டாவது சாதனை. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை. இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை. இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

மக்கள் நலத் திட்டங்கள்:


திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய திட்டங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்காக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர்க்கு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  மேலும்,  காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் திட்டம், களஆய்வில் முதலமைச்சர் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம் “நீங்கள் நலமா?” திட்டம் என பல மக்கள் நலத் திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதுமட்டுமல்ல, பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம், பட்டப்படிப்பு வரை பேருந்து பயணம் இலவசம், பெண் தொழில் முனைவோருக்கு உதவி, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க பல திட்டங்கள் நிறைவேற்றம், கலை அறிவியல் கல்லூரிகள் அதிகரிப்பு, மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு, 

சட்டக் கல்லூரிகள் அதிகரிப்பு, என வளர்ச்சி, முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கியே திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறது. மக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகிறது. 

சிறுபான்மையினர் நலன்:


திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது.  சிறுபான்மையினர் நலன் காப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னேடியாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகையை திராவிட மாடல் ஆட்சி வழங்கி வருகிறது. மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் இனி நிரந்தரமாக வழங்கப்படும் என்பது தான் திராவிட மாடல் அரசின் அறிவிப்பாக இருந்து வருகிறது. 

அத்துடன் சிறுபான்மையின மக்களுக்கு வளமாக எதிர்காலத்தை உருவாக்குவதில் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்மூலம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கையில் நல்ல ஒளியும், வெளிச்சமும் ஏற்பட்டுள்ளது. உர்தூ உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் மொழிகளை காக்க நடவடிக்கை திராவிட மாடல் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ளது. 

ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சி:


தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில், மக்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படுகிறது. அதன்மூலம், அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், மகளிர், மாணவ மாணவியர் என பல்வேறு தரப்பினரும், நல்ல பயன் அடைந்து வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். 

இப்படி, தமிழகத்தில் மிகச் சிறப்பாக வீறு நடைபோடும் திராடவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்திலும் மலர வேண்டும். ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சி மலர்ந்தால், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும். நாட்டில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு அனைத்து உரிமைகள் வழங்கப்படும். அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்படும். 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் ஆகிய முழக்கங்களுக்கு, திராவிட மாடல் ஆட்சியில் சிறிதும் இடமே இல்லை. மதசார்பற்ற இந்திய நாட்டில், அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். மிகவும் பழமையான இந்திய ஜனநாயகம், உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. அத்தகைய புகழ்பெற்ற இந்திய ஜனநாயகத்தின் மாண்புகள், திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாக்கப்படும். 

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் சதித் திட்டங்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் கொஞ்சம் கூட இடமில்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லை. 

அனைத்துத் தரப்பு மக்களும் நல்ல கல்வி பெற வேண்டும். வாழ்க்கையில் ஒளியை பெற வேண்டும். வாழ்க்கையில் வளர்ச்சியும், முன்னேற்றமும் காண வேண்டும். இந்த கொள்கைகளை முன்நிறுத்திக் கொண்டு, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மிகச் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பலன் அடைந்து வருகிறார்கள். 

தமிழக மக்கள் அடையும் பலன்களை, நாட்டில் உள்ள அனைத்துத்  தரப்பு மக்களும் பெற வேண்டுமானால், ஒன்றியத்தில் கட்டாயம் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட வேண்டும். அப்போது தான் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் ஆட்சி மக்களுக்கு கிடைக்கும். திராவிட மாடல் ஆட்சியில், நாட்டில் வன்முறை நடைபெற அனுமதிக்கப்பட மாட்டாது. அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

சமூகநீதி, சமத்துவம் கிடைக்க:

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்கும் திராவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்தில் ஏற்பட்டால், அது இந்தியாவிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும். 

தற்போது நாடு எந்த திசையை நோக்கிச்  சென்றுக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து, அதன்மூலம் அரசியல் லாபம் பெற பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டன. 

ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் வெறுப்பு பேச்சுக்கும், வெறுப்பு நடவடிக்கைகளுக்கும், வெறுப்பு வன்முறைக்கும் இடமில்லை. மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படும். ஒன்றியத்தில் உள்ள சி.பி.ஐ. உள்ளிட்ட சுதந்திர அமைப்புகளின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்காது. இது திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அம்சமாகும். 

ஆக, மக்களுக்கு சமூக நீதி, சமத்துவம் கிடைக்க வேண்டுனால், ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சி மலர வேண்டும். 18வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றும். அப்போது, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள், திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூட்டணி கட்சிகளுக்கு எடுத்துரைத்து, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை கட்டாயம் எடுப்பார்கள். இதன்மூலம், நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவம் உணரப்பட்டு, ஒவ்வொரு மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சி நடைமுறைக்கு வர வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில் மட்டுமல்ல, ஒன்றியத்திலும் திராவிட மாடல் ஆட்சி என்பதே இனி ஒவ்வொருவரின் முழக்கமாக இருக்க வேண்டும். இது சாதாரண முழக்கம் அல்ல. மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் முழக்கமாகும் என்பதை நாம் நினைவில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: