Thursday, March 21, 2024

ஹலீம்….!


உடலுக்கு வலுச் சேர்க்கும் ஹலீம்….!

-            ஷாருக்கான்  -

சென்னையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவரை சிறப்பு பேட்டி எடுக்கச் சென்றபோது, என்னை அன்புடன் வரவேற்ற அவர், பேட்டி சிறிது நேரம் கழித்து கொடுக்கிறேன். முதலில், ஹைதரபாத் ஹலீம் சாப்பிடலாம் வாங்க என அழைத்தார். தனது வீட்டின் சிறிய அறையில், போடப்பட்டு இருந்த சேரில் என்னை அமரச் சொன்ன அவர், பின்னர் தனது உதவியாளரை அழைத்து, இரண்டு ஹலீம் கொண்டு வா என உத்தரவிட்டார். அதை உத்தரவு என சொல்ல முடியாது. அன்பு கட்டளை என்று கூறலாம்.

இதையடுத்து, சிறிது நேரத்திற்குப் பிறகு, உதவியாளர் கொண்டு வந்து கொடுத்த ஹலீமை என்னிடம் கொடுத்த ஷாருக்கான் “நன்றாக சுவைத்து சாப்பிடுங்கள். ஹலீம் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறீர்கள் இல்லையா” என வினா எழுப்பினார். நான் இல்லை என சொன்னதும், “இது ஹைதராபாத் நிஜாம்கள் சாப்பிட்ட உணவு. உடலுக்கு தெம்பும், வலுவும் ஆரோக்கியமும் தரும் உணவு தான் ஹலீம். ஒருமுறை சாப்பிட்டு பாருங்க” என கூறிக் கொண்டே, அவர் ஹலீமை சாப்பிட தொடங்கினார். என்னையும் சாப்பிடுங்கள் என அன்புடன் கூறினார்.

அந்த அரசியல் தலைவர் சொன்னப்படியே நானும் ஹலீம் சாப்பிட்டு, பின்னர் அதன் சுவையில் மயங்கி, அது தரும் ஆரோக்கியம் ஆகியவற்றை அறிந்து, தற்போது அடிக்கடி ஹலீம் சாப்பிடுவதை வழக்கமாகவும், பழக்கமாகவும் கொண்டு விட்டேன்.

ஹலீமின் தாயகம்:


பிரியாணி எப்படி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறதோ, அதேபோன்று, ஹலீம் கூட தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், முஸ்லிம் நாடுகள், ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது ஹலீம், மக்கள் மத்தியில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் ஹலீமிற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்க என்ன காரணம்? என்று சற்று ஆராய்ந்தால், அதன் சுவை மற்றும் அது உடலுக்கு தரும் ஆரோக்கியம், வலு ஆகியவற்றை கூறலாம். ஹலீம் என்பது இறைச்சி, பயறு, கோதுமை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது முதன்முதலில் ஒரு அரபு உணவாக இருந்தது.

பிரபல எழுத்தாளர் மார்கரெட் ஷைதாவின் மிகவும் பாராட்டப்பட்ட சமையல் புத்தகமான தி லெஜண்டரி குசைன் ஆஃப் பெர்சியா”-வில், அவர் ஹலீமின் தோற்றத்தை 6ஆம் நூற்றாண்டின் பாரசீக மன்னர் குஸ்ரோ வரை கண்டறிந்துள்ளார். அடுத்த நூற்றாண்டில் பெர்சியாவை முஸ்லீம்கள் கைப்பற்றிய பிறகு, அது மிகவும் பிரியமான உணவாக மாறியது. பல அரபு நாடுகளில் இது ஹரிஸ்ஸா அல்லது ஹரீஸ் என்று அழைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஹலீம் குறித்தும் அதன் தாயகம் குறித்தும் ஏராளமான குறிப்புகளை நாம் காண முடிகிறது.

ஹைதராபாத் நிசாம்களின் ஆட்சியில் ஐதராபாத்தில் சாயுஸ் மக்களால் ஹலீம் அறிமுகப்படுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஒரு அரபு உணவாக ஹலீம் உருவானது. ஆறாவது நிசாம், மஹபூப் அலி கான், ஆசாப் ஜா ஆட்சியின் போது அரேபியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரால் இது ஹைதராபாத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஹைதராபாத் உணவு முறை ஏழாம் நிசாம் மிர் உசுமான் அலிகான் ஆட்சியின் போது ஒரு ஒருங்கிணைந்ததாக மாறியது. ஏழாவது நிசாமின் அரசவையின் பிரபுக்களில் ஒருவரான யேமனின் முகல்லா, என்ற இடத்திலிருந்து வந்த அரபு தலைவரான சுல்தான் சயிப் நவாஸ் ஜங் பகதூர் இதை ஐதராபாத்தில் பிரபலப்படுத்தினார்.

முகாலயர்களும் ஹலீமும்:


முகலாயர்கள் மற்றும் ஹலீம் குறித்து நாம் அறிய வேண்டுமானால் அது,  நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. முகலாயர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக ஹலீம் இருந்துள்ளது. முகலாய நீதிமன்றங்களில் பரிமாறப்படும் உணவுகள், துருக்கிய, பாரசீக மற்றும் அரேபிய மொழிகளின் மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தின. அழகாக எழுதப்பட்ட ஐன்-இ-அக்பரியில், பேரரசர் அக்பரின் அரசவையில், ஹலீம் பயன்படுத்தப்பட்டதாக அபுல் ஃபஸ்ல் ஹலீமை பற்றிக் குறிப்பிடுகிறார் , இது இறைச்சி, வேகவைத்த கோதுமை, டர்னிப்ஸ், கேரட், கீரையின் குண்டு, மற்றும் ஹரிசா, ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டதாக வரலாற்றின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஹலீம் மற்றும் ஹரிஸ்ஸா இரண்டும் அரபு வார்த்தைகளாகும்.

பத்தாம் நூற்றாண்டிலிருந்து முகலாயர்கள் தானியங்கள் வளரும் பகுதிகளுக்குச் சென்றதால், முகலாய உணவில் தானியங்களைச் சேர்ப்பது மிக முக்கியமான பகுதியாக இருந்தது. முகலாய அரசவைகளில் இறைச்சி அடிக்கடி பரிமாறப்பட்டாலும், முகலாயப் பேரரசர்கள் பலர் அதைத் தவிர்த்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. எனவே தான் இறைச்சி இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஹலீமை முகலாயர்கள் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கும் உன்னதமான ஹைதராபாத் ஹலீம், "நிஜாமின் அரபு அரண்மனையால் அறிமுகப்படுத்தப்பட்ட அரேபிய ஹரிசாவின் மாறுபாடாக இருக்கலாம்” என வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

ஹைதராபாத் ஹலீம்:


இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் ஹலீம் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், ஹைதராபாத் ஹலீமிற்கு எப்போதும் ஒரு தனி மசுவு இருந்து வருகிறது. இன்று, ஹைதராபாத்தில் உள்ள பர்காஸ் பகுதியில் அதன் பிரபலம், முந்தைய நிஜாமின் படைகளின் தாயகம் என்றும் அதன் இராணுவ தோற்றத்திற்கான சான்றாகவும் கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஹைதராபாத் ஹலீம், மதீனா உணவகம் 1956-இல் ஈரானிய விடுதி நிறுவனர் ஆகா உசைன் ஜாபெத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் பதர்கட்டியில் உள்ள வக்ஃப் சொத்தில் திறக்கப்பட்ட மதீனா உணவகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள பழமையான உணவகங்களில் ஒன்று மதீனா உணவகமும் ஒன்றாகும். மதீனா உணவகம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், அதனை கடைசி நிசாம், மிர் ஒஸ்மான் அலிகான் 1956-இல் திறந்து வைத்தார்.

லீம் தயாரிப்பது, ஹைதராபாத் பிரியாணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. திருமணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பிற சமூக சந்தர்ப்பங்களில் இது பாரம்பரிய உணவு என்றாலும், குறிப்பாக இசுலாமிய மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு காலங்களில் ஹலீம் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலுக்கு ஹலீம் உடனடி ஆற்றலை வழங்குகிறது. மேலும், இதில் கலோரி அதிகமாக உள்ளது. எனவே தான் முஸ்லிம்கள் ரமலான் காலங்களில் இதனை அதிகளவு பயன்படுத்துகிறார்கள். ஹைதராபாத் ஹலீமிற்கு கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தால் புவிசார் குறியீடு (ஜிஐஎஸ்) வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்தைப் பெற்ற இந்தியாவின் முதல் அசைவ உணவாக இது திகழ்கிறது.

ஹலீமில் சேர்க்கப்படும் பொருட்கள்:


ஹலீம் தயாரிக்கும்போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன?. மேலும் தேவையான பொருட்கள் என்ன? என்பதை கொஞ்சம் அறிந்துகொள்வோம்.  மட்டன். கோதுமை ரவை. கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தயிர், உப்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம்,  மிளகு, பொன்னிறமாக வதக்கிய வெங்காயம், கரம் மசாலா, மட்டன் வேக வைத்த நீர்,  புதினா,  கொத்தமல்லி, நெய், எலுமிச்சை துண்டுகள் என உடலுக்கு நல்ல சக்தியை தரும் ஏராளமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

இப்படி சத்தான உணவுப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவான ஹலீமை சாப்பிட்டால், நம் உடல் ஏன் ஆரோக்கியமாக இருக்காது? எனவே தான் நம்மில் பலர் அடிக்கடி ஹலீமை சாப்பிட்டு, தங்களது உடல்நலத்தை பேணிக் காத்துக் கொள்கிறார்கள்.

ஹலீம் மூலம் வணிகம்:


புகழ்பெற்ற ஹைதரபாத் ஹலீம் தற்போது நாடு முழுவதும் கிடைத்து வருகிறது. அத்துடன் உள்ளூரில் பக்குவம் மிக்க சமையல் கலை வல்லுநர்களால், ஹலீம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்படி பிரியாணி தற்போது அனைத்துத் தரப்பு மக்களின் உணவாக மாறிவிட்டதோ, அதேபோன்று, ஹலீம் கூட முஸ்லிம்களின் உணவாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது.

இதன் காரணமாக சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில், ஏராளமான ஹலீம் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஹலீம் விற்பனை நிலையங்களில் மக்களின் விருப்பத்திற்கும், அவர்களின் பொருளாதார நிலைக்கும் ஏற்ப, ஹலீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, தொழிலாளர்கள் உட்பட நடுத்தர மக்களும் ஹலீமை விரும்பி சுவைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

பிரியாணியை விற்பனை செய்து பலர் எப்படி தங்களது வாழ்க்கையில் உயர்வு அடைந்தார்களோ, அதேபோன்று, தற்போது ஹலீமை விற்பனை செய்யும் நிலையங்களை தொடங்கி, பலர் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி, குறிப்பாக பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறார்கள். உங்களுக்கு வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் ஹலீமை ஒருமுறை கட்டாயம் சாப்பிடுங்கள். வாய்ப்பு கிட்டினால் என்று கூறக் கூடாது, அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, ஹலீமை சாப்பிட்டு பாருங்கள். பின்னர், அதன் சுவையில் மயங்கி, உடலுக்கு அது தரும் சக்தி, ஆரோக்கியம் ஆகியவற்றை அறிந்து, பின்னர் தொடர்ந்து ஹலீமை சாப்பிடுவதை வழக்கமாகிக் கொள்வீர்கள்.


கடைசியாக, உடலுக்கு வலுச் சேர்க்கும் ஹலீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் சுவையை அறிய வைத்தவர் யார்? என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளராக இருக்கும், தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் எம்.எல்.ஏ., ஆம்பூர் அப்துல் பாசித்-தான், ஹைதராபாத் நிஜாம்கள் பயன்படுத்திய, சாப்பிட்ட, ஹலீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். பாசித் எப்போது சென்னைக்கு வந்தாலும், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, என்னப்பா ஹலீம் சாப்பிடலாமா? வா போகலாம் என  அழைப்பது வழக்கம். என்னை அவர் அன்புடன் அழைக்கும்போது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், நான் அவர் கூட சென்றுவிட்டு, சுவையான பிரியாணியுடன், ஹலீமையும் ஒரு பிடிபிடிப்பது வழக்கமாகி கொண்டு இருக்கிறேன். அத்துடன், ஹலீமின் பெருமைகளை மற்றவர்களிடம் கூறி மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

======================

 


No comments: