Thursday, March 28, 2024

ஒரு அழகிய செயல்...!

மதநல்லிணக்கத்திற்காக, ரமலான் மாதத்தில்  சுஃபிதார் அமைப்பு செய்யும் ஒரு அழகிய செயல்.....!

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில், இந்து அமைப்பைச் சேர்ந்தச் சகோதரர்கள், ரமலான் நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு, நோன்பு திறக்க உணவுப் பொருட்களை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த அழகிய, அற்புதனமான பணி நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு சென்று, இந்து சகோதரர்களின் அழகிய செயலை  நேரில் கண்டு வியப்பு அடைந்தார். மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ரமலான் மாதத்தில் செய்யப்பட்டு வரும் இந்த அழகிய பணி குறித்து, மணிச்சுடர் வாசகர்களும் அறிந்துகொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும். அத்துடன், மற்றவர்களுக்கும் இந்த மத நல்லிணக்க செய்தி பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட ஒரு சிறப்பு ரிப்போர்ட், இதோ உங்கள் பார்வைக்கு:

சுஃபிதார் அமைப்பு:

விடுதலைக்குப் பிறகு, நாடு இந்தியா-பாகிஸ்தான் என பிரிந்தபோது, தற்போதைய பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இருந்து சென்னைக்கு வந்த தாதா ரத்தன்சந்த் என்பவர், சுஃபிதார் அமைப்பு என்ற பெயரில் ஒரு பொதுநல தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் சுஃபி  போதனைகள், தத்துவங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு வருகின்றன. அத்துடன், பொதுமக்களுக்கு பல்வேறு சமூகச் சேவைகளும், மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது இந்த அமைப்பு சென்னை மயிலாப்பூரில் இயங்கி வருகிறது. 

மதங்கள் பல இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புகள் என்பது சுஃபி அமைப்பின் கருத்தாக இருந்து வருகிறது. எனவே தான், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பை போதிக்கும் பணியில் இந்த அமைப்பு  தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தொடர்ந்து அழகிய செயல்களையும் பணிகளையும் ஆற்றி வருகிறது.  

ரமலானில் அழகிய செயல்:

அதன்படி, இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கும் முஸ்லிம்களுக்கு, அவர்கள் நோன்பை திறக்க உணவுப் பொருட்களை வழங்கி, தங்களது அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், சுஃபி அறிஞர் தாதா ரத்தன்சந்தின் உள்ளத்தில் உதயமானது. தனது மனதில் இந்த எண்ணம் பிறந்ததும், சிறிதும் எந்தவித தயக்கமும் இல்லாமல், அதை உடனடியாக ரமலான் மாதத்தில் செயல்படுத்த தொடங்கிய அவர், அதற்காக தேர்வு செய்த இடம், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலாகும். 

சென்னையில் புகழ்பெற்ற மிகப்பெரிய பள்ளிவாசலான இந்த பள்ளிவாசலில், ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வருவது உண்டு. இப்படி, நோன்பு திறக்க வரும் முஸ்லிம்களுக்கு நோன்பு கஞ்சி, பழங்கள், குளிர்ந்த நீர், தண்ணீர், பழச்சாறு, இனிப்பு வகைகள், மற்றும் ஏராளமான உணவுப் பொருட்களை, சுஃபிதார் அமைப்பினர் வழங்கி வருகிறார்கள். 

குழுவினருடன் சேவை:

ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும், மாலை ஐந்து மணிக்கு, ஒரு வேனில் உணவுப் பொருட்களுடன்  வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு வரும் சுஃபிதார் அமைப்பினர், தங்களது 30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களுடன், அந்த உணவுப் பொருட்களை பள்ளிவாசலுக்கு உள்ளே எடுத்துச் செல்கிறார்கள். 

நோன்பு திறக்க வரும் முஸ்லிம்கள் அனைவருக்கும், இந்த 30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தி, பாசத்துடன் உணவுப் பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். 

நோன்பு திறக்க உணவுப் பொருட்கள் வழங்குவதுடன் தங்களது பணி முடிந்துவிட்டது என அவர்கள் இருப்பதில்லை. நோன்பு திறந்துவிட்ட, தொழுகை நடத்த முஸ்லிம்கள், சென்றபிறகு, நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட பகுதியில் கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மை செய்து, அந்த பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொள்ளும் வகையில் இடம் அமைத்து தருகிறார்கள். 

சேவை செய்வது பெருமை:

கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்துவரும் இந்த அரிய சேவை குறித்து சுஃபிதார் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ராம் தேவ், முரளி, கோமல், குமார் ஆகியோரிடம் நாம் பேசியபோது, "நோன்பு வைக்கும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் பணி செய்வது எங்களுக்கு கிடைத்த பெருமை" என அவர்கள் தெரிவித்தனர். "ரமலான் மாதம் முஸ்லிம்களுக்கு மட்டுமானா ஆன்மீக மாதமாக நாங்கள் கருதவில்லை. அது எங்களுக்கும் ஒரு ஆன்மீக மாதமாக கருதுகிறோம்" என்று ராம் தேவ் கூறியபோது உண்மையில் நமக்கு மகிழ்ச்சி அளித்தது. 

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து, குடியேறியுள்ள சிந்தி மக்கள், ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இந்த புனித சேவையில் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொள்கிறார்கள். ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இதற்காக தங்களது நேரத்தை திட்டமிட்டு அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

நாற்பது ஆண்டு கால தொடர்பு:

திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலுக்கும், சுஃபிதார் அமைப்புக்கும் இடையே நாற்பது ஆண்டு காலமாக நல்ல உறவு நீடித்து வருகிறது. இதன் காரணமாக தான், இந்துக்களும், முஸ்லிம்களும், தங்களது அன்பை வெளிப்படுத்தி, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தி வருகிறார்கள். 

சென்னையில் உள்ள பல முஸ்லிம்கள், நோன்பு திறக்கும் நேரத்தில் எங்கு இருந்தாலும், உடனே வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு கட்டாயம் சென்றுவிடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம், சுஃபிதார் அமைப்புச் சேர்ந்தவர்களின் அன்பும், அவர்கள் காட்டும் மனிதநேயமும் தான் என பல்லாவரத்தைச் சேர்ந்த ஜமீல் என்பவர் உட்பட பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 

அன்பை விதைத்து, அறுவடை:

நாட்டின் சில பகுதிகளில் ஒருசில அமைப்புகள், வெறுப்பை விதைத்து, மக்கள் மத்தியில் பதற்றத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அன்பை விதைத்து அறுவடை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, ரமலான் மாதத்தில், சுஃபிதார் அமைப்பினரின் மதநல்லிணக்க செயல்கள் இருந்து வருகின்றன. மக்களிடையே அன்பை விதைத்து, சகோதரத்துவதை வெளிப்படுத்தி வரும் சுஃபிதார் அமைப்புச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மணிச்சுடர் சார்பில் பாராட்டும், வாழ்த்தும் கூறி விடைப்பெற்றோம். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: