Monday, March 25, 2024

ஏன் வீழ்த்தப்பட வேண்டும்...?

ஒன்றிய பாஜக அரசு, ஏன் வீழ்த்தப்பட வேண்டும்...?

ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஏன் வீழ்த்தப்பட வேண்டும்? என்ற கேள்வி தற்போது நாடு முழுவதும் மக்களின் மனங்களில் உருவாகி, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கிறது. நாட்டு மக்களுக்கு சிறிதும் பயன் அளிக்காத மோடி அரசு, கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும் என மக்கள் அனைவரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதுகுறித்து விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். 

பாஜக அரசு - ஒரு பார்வை:

கடந்த பத்து ஆண்டுகளில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை ஒளியை ஏற்றி இருக்கிறதா? என கேள்வி எழுப்பினால், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும், இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற மோடி அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றே குற்றம்சாட்டி வருகிறார்கள். 

நல்ல கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், வங்கிகளில் கல்விக் கடன் வாங்கிய மாணவர்களின் கடனை, ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. ஆனால், தொழில் அதிபர்களின் லட்சக்கணக்ககான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கிறது. 

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி தலைநகர் டெல்லியை நோக்கி வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மோடி அரசின் தவறாக பொருளாதாரக் கொள்கை காரணமாக, நாட்டில் அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்வு காரணமாக மக்கள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம் என கூறலாம்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை வங்கிக் கணக்குகளை தொடங்க வைத்து, அவர்கள் சேமித்த வைத்த பணத்தை குறைந்தபட்ட தொகை இல்லை என காரணம் கூறி, மோடி அரசு சுருண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு கணக்கான ரூபாய் அளவுக்கு வருவாய் வந்துக் கொண்டே இருக்கிறது. இப்படி, ஏழை, எளிய மக்களின் பணம், அவர்களை அறியாமலேயே சுரண்டப்பட்டு வருகிறது. 

இந்திய ரூபாயின் மதிப்பு மோடி ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துவிட்டது. அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 48 காசுகள் சரிந்து 83 ரூபாய் 61 காசுகளாக  வீழ்ச்சி அடைந்துவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ரூபாய் மதிப்பு அதன் மிகக்குறைந்த அளவாக 83 ரூபாய் 40 காசுகளாக இருந்தது.  தற்போது மீண்டும் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் போன்ற கடன்களுக்கு மக்கள் வங்கிகளுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  "2014க்கு முன்பு ரூபாய் மதிப்பு சரிவையும், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் வயதையும் ஒப்பிட்டு அநாகரிக கருத்துகள் சொன்ன அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, தற்போது பிரதமராக இருக்கும் நிலையில், அதுகுறித்து எதுவும் ஏன் கூறுவது இல்லை என்றும் அவர் எங்கே போய் விட்டார்?” என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டு இருக்கும் நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது ஒரு பிரதமருக்கு அழகா என்றும், நாட்டு மக்கள் தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும் வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே, நாட்டு மக்களுக்கு பரிசாக அவர் அளித்து வருவதாகவும், பல்வேறு தரப்பினர் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த பத்து ஆண்டு காலமாக ஒன்றிய பாஜக அரசு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படாமல், நாட்டு மக்களுக்கு சிறிதும் பலன் இல்லாத அரசாக இருந்து வருகிறது. 

மோடி ஆட்சியில் தமிழகம் பாதிப்பு:

சரி, மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு நன்மை கிடைத்து இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினால், அதற்கும் பதில் இல்லை என்றே வருகிறது. தமிழகத்திற்கு அடிக்கடி வந்து, தமிழ்நாட்டின் மீது, தமிழக மக்கள் மீது தனக்கு மிகப்பெரிய அளவுக்கு அன்பும், பாசமும் உள்ளது என கூறிக் கொள்ளும், பிரதமர் மோடி, உண்மையில் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அக்கறை காட்டவில்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு, மாநிலம் கடுமையாக பாதிப்பு அடைந்தது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிற பொதுநல அமைப்புகள் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள். 

வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒன்றியத்தில் இருந்து வந்த குழுக்கள், தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு சென்று அறிக்கைகளையும் சமர்ப்பித்துவிட்டன. ஆனால், இதுவரை வெள்ள நிவாரண நிதியை, தமிழகத்திற்கு மோடி அரசு வழங்கவே இல்லை. இதுதொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். அப்போது உடனே நிதி அளிக்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார். ஆனால், அது பொய் உறுதி என்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

இதேபோன்று, சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம் என்பது தமிழக அரசு 50 சதவீத நிதி, ஒன்றிய அரசு 50 சதவீத நிதி என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. 

மும்பை-அகமதாபாத் இடைய புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்னே கால் லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யும் பிரதமர் மோடி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதேபோன்று, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் சார்பில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், அது இன்னும் ஒற்றை செங்கல்லுடன் இருந்து வருகிறது. பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவாக கட்டப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் கட்டப்படவில்லை? என்பது தமிழக மக்களின் கேள்வியாகும். 

நீட் விவகாரத்தில் மோடி அரசு தமிழக மாணவர்களின் நலனை கருத்திக் கொள்ளவில்லை. ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும், நீட் முறைப்படி, மாணவர்களை சேர்ப்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம என மோடி அரசு பிடிவாதம் செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு கரைந்து போய்கொண்டே இருக்கிறது. 

தமிழகத்திற்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருவதை, மேலே கண்ட தகவல்கள் மட்டுமல்ல, பல்வேறு புள்ளிவிவரங்களும் தமிழகத்திற்கு விரோதமான அரசு, பாஜக அரசு என்பதை சுட்டிக் காட்டுகின்றன. 

ஏன் வீழ்த்தப்பட வேண்டும்?

தமிழகத்திற்கு மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளாத பிற மாநிலங்களுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்கள் மாநிலத்திற்கு மோடி அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அதை உடனே வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இப்படி, கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் வெற்று முழக்கங்கள் மூலம் ஆட்சியை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தவித முறையான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அத்துடன், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவது அதன் செயல்பாடுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

எதிர்க்கட்சிகளை ஒழிப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவது, எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்ப்பது, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய சுதந்திரமான அமைப்புகளை தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவது என்ற வகையில் தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அத்துடன், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்காமல், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கொள்கை என பா.ஜ.க. முழக்கங்களை எழுப்பி வருகிறது. இதன் காரணமாகதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு வீழ்த்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுகுறித்து விவாதிக்க தொடங்கிவிட்டார்கள்.  

நாட்டு மக்கள் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரும், மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று கருத்துகளை கூறி வருகிறார்கள். அண்மையில் தமிழத்திற்கு  வந்த சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன்,  18வது மக்களவைத் தேர்தலில், மோடி தோல்வி அடைவது உறுதி என்றும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறுவது உறுதி என்றும் கூறியுள்ளார். ஆக, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பமாக தற்போது இருப்பது, மோடி வீழ்த்தப்பட வேண்டும். ஒன்றியத்தில் மக்கள் நலன் சார்ந்த, நாட்டு நலன் சார்ந்த நல்லாட்சி மலர வேண்டும். அது இந்தியா கூட்டணியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: