Sunday, March 17, 2024

ஒளியின் பக்கம் செல்ல...!

ஒளியின் பக்கம்....!


மனித வாழ்க்கையை ஒரு விசித்திரமானது. ஆனால், அதேநேரத்தில் மிகவும் அற்புதமானது. இந்த அற்புதமான, அழகான வாழ்க்கையில், அடுத்த ஒவ்வொரு நொடியும் என்ன நிகழும் என்பதை மனிதனால் நிச்சயம் யுகிக்க முடியாது. பல ஆச்சரியங்களும், அதிசயங்களும், மகிழ்ச்சியும், வேதனைகளும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. 

ஏக இறைவனால் வழங்கப்பட்ட வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால், வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிம்மதியும் நிறைந்து இருக்கும். மாறாக, வாழ்க்கையை அதன் போக்கில் செல்லவிட்டால், வேதனையும் துன்பங்களும் தாண்டவமாடும். இதனால் மனித வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடும். 

மனிதன் ஒளியின் பக்கம் பயணம் செய்தால், நிச்சயம் அவனுக்கு ஒரு சிறந்த நல்ல வழி கிடைக்கும் இந்த வழியின் மூலம், பயனுள்ள வாழ்க்கையை தனக்கும் சமுதாயத்திற்கும் மனிதன் உருவாக்கிக் கொள்ள முடியும். பயனுள்ள வாழ்க்கைக்காக மனிதன் செய்ய முதல் பணி, தன்னை ஒளியின் பக்கம் செல்லும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். 

ஒளியின் பக்கம் செல்ல...!


மனிதன் ஒளியின் பக்கம் செல்ல, முதலில் தன்னை நேசிக்க வேண்டும். தனது வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதன் உண்மையான அர்த்தம் என்ன? வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? போன்ற கேள்விகளை கேட்டு, தன்னை ஒளியின் வாழ்க்கைக்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஏக இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனினை, நாம் பொருள் அறிந்து படித்தால், மனித வாழ்க்கையின் உண்மையான அற்புதம், பயன் ஆகியவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியும். மனிதன் மீது ஏக இறைவனுக்கு இருக்கும் அக்கறை, அன்பு, இரக்கம், மனித நல்வாழ்விற்காக ஏக இறைவன் அறிவுறுத்தும் அற்புதமான பண்புகள், செயல்கள், மனிதன் ஆற்ற வேண்டிய பணிகள், கடமைகள், நல்ல செயல்கள் ஆகியவற்றை உணர்ந்து கொள்ள முடியும்.  

திருக்குர்ஆனை படிக்கும்போது, ஒளியின் பக்கம் பயணம் மேற்கொள்வதன் மூலமே, வாழ்க்கையின் உண்மையான பயனை மனிதன் அடைய முடியும் என்பதை புரிந்துகொள்ளலாம். ஏக இறைக் கொள்கையை வலியுறுத்தும் திருக்குர்ஆன், மனிதன் நல்ல பண்புள்ள மனிதனாக வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதை தொடர்ந்து வலியுறுத்துகிறது.

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில், எல்லோரிடமும் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என சொல்லும் திருக்குர்ஆன், தாய், தந்தை மற்றும் உற்றார் உறவினர்கள் என அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. 

திருக்குர்ஆனில் மனிதனுக்கு ஏக இறைவன் திரும்ப, திரும்ப கூறும் அறிவுரைகளை சற்று உற்று நோக்கினால், மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்பது தெளிவாக அறிய முடிகிறது. 

திருக்குர்ஆனில் ஏக இறைவன்க இப்படி கூறுகிறான்: “அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)

இதன்மூலம், உலக வாழ்வின் அலங்காரங்களில் நாம் மயங்கிவிடாமல், பொறுமையுடன் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

நல்ல செயல்கள் மூலம்:


"எண்ணங்களை எப்படி இருக்குமோ, அதைக் கொண்டே செயல்கள் அமையும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக அழகாக கூறி, மனிதன் தன்னுடைய எண்ணங்கள் எப்போதும் நல்ல எண்ணங்களாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

உங்களுடைய செயல்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைய வேண்டுமானால், உங்களுடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக அமைய வேண்டியது மிகவும் அவசியம். எண்ணங்களும், செயல்களும், நல்லவிதமாக அமைந்துவிட்டால், அதை விட மிகப்பெரிய பரிசு மனிதனுக்கு என்னவாக இருக்க முடியும். 

உலகில் தற்போது மனிதன் அமைதி இழந்து தவிப்பதற்கு முக்கிய காரணம், தன்னுடைய எண்ணங்களையும், செயல்களையும் நல்லவிதமாக அமைத்துக் கொள்ளாததே ஆகும். ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்களை நினைத்து, நல்ல செயல்களை செய்து வந்தால், அதனால் உள்ளம் தூய்மை அடைந்து, வாழ்க்கை நம்மை ஒளியின் பக்கம் நிச்சயம் அழைத்துச் செல்லும். 

திருக்குர்ஆனை நாம் திரும்ப, திரும்ப படித்தால், அதில் பிறர் நலன் குறித்து நமக்கு ஏராளமான அறிவுரைகள் சொல்லப்பட்டு இருப்பதை தெரிந்துகொள்ளலாம். மனிதன் தனக்காக மட்டுமே வாழ வேண்டிய பிறவி இல்லை. அதற்காக மட்டுமே மனிதனை இறைவன் படைக்கவில்லை. தானும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து, பிறரின் நல்வாழ்விற்காகவும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். 

திருக்குர்ஆனின் 103வது அத்தியாயத்தை நாம் கொஞ்சம் கவனத்துடன் படித்து பார்த்தால், நஷ்டத்தில் இருப்பவர்கள் யார்? பயனுள்ள வாழ்க்கையை வாழ்பவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த அத்தியாத்தில் ஏக இறைவன் இப்படி கூறுகிறான்: "காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கையை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும், பொறுமையைக் கடைப்பிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!"

ஆக, மனிதன் இறை நம்பிக்கையையுடன் வாழ்வதுடன், நற்செயல்களையும் செய்து வர வேண்டும். பிறருக்கும் சத்தியத்தை எடுத்துரைத்து, பொறுமையாக செயல்பட வேண்டும். ஆனால், தற்போது அமைதி இழந்து வாழ்வதற்கு முக்கிய காரணம், இறை நம்பிக்கை மனிதனுக்கு இருந்தாலும், அவனிடம் நல்ல செயல்கள் இருப்பது இல்லை. பொறுமை என்ற அழகிய குணம் இருப்பது இல்லை. பிறர் நலனில் சிறிதும் அவன் அக்கறை செலுத்துவதில்லை. சத்தியத்தின்படி, தனது வாழ்க்கையை அவன் அமைத்துக் கொள்வதில்லை. பிறகு சத்தியத்தை எடுத்துரைப்பதில்லை. இதன் காரணமாக மனிதன் ஒவ்வொரு நொடியும் அமைதி இல்லாமல் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. 

செயல்படுத்தி பாருங்கள்:


உங்கள் வாழ்க்கையில் இனி ஒவ்வொரு நாளும் நல்ல செயல்களை மேற்கொள்வது என உறுதியாக முடிவு எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப உங்கள் பணிகளை அமைத்துக் கொண்டு செயல்படுங்கள். அதன்மூலம் உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கிடைக்கும். இதனை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர் முடியும். 

நம்மை சுற்றி உள்ள அனைவர் மீதும் அன்பு செலுத்துதல், அவர்களிடம் அழகிய சொற்களை பேசுதல், அவர்களின் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருத்தல், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவிகளை செய்தல்,  நமது உற்றார் உறவினர்கள் மீதும் அன்பு செலுத்தி, அவர்களின் நலனை நாம் பேணி வந்தால், நம்மை அனைவரும் நேசிப்பார்கள். இதற்காக நமக்கு செல்வ செழிப்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. நல்ல எண்ணங்கள் மூலம் நல்ல செயல்களை அமைத்துக் கொண்டு செயல்பட்டாலே, நம்மை அனைவரும் நேசிப்பார்கள். அன்பு செலுத்துவார்கள். 

ஒளியின் பக்கம் செல்வதன் மூலம் மட்டுமே, நமது வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமையும் என்பதை நாம் உறுதி நம்பி, இனி வரும் நாட்களில், நமது செயல்களை சீர்படுத்திக் கொண்டு, நல்ல அமல்களை செய்து வந்தால், வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உலக மக்களும் நம்மை நேசிப்பார்கள். இதன்மூலம் நமது வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, ஆனந்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட ஒளிகள் கிடைக்கும். என்ன ஒளியின் பக்கம் பயணிக்க உங்களுக்கு விருப்பம் தானே? அப்படியெனில் இன்றுமுதல் உங்கள் வாழ்க்கையில் ஒளி கிடைத்துக் கொண்டு இருக்கும். அந்த ஒளியின் மூலம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக வாழ்க்கையாக நிச்சயம் மாறும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: