நாடு எங்கும் ஒலிக்கும் "இந்தியா வெல்லும்" முழக்கம்....!
நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது, கோடை வெயிலைப் போன்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விறுவிறுப்பு அடைந்துள்ளது. முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிட்டுள்ளன. இதனால், வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி, வாக்காளர்களைச் நேரில் சந்தித்து வருகிறார்கள். தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
சரி, 18வது மக்களவைத் தேர்தல் எந்த திசையை நோக்கிச் செல்லும்? நாட்டில் தற்போது மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறதா? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சிக் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பா.ஜ.க அரசு எதிர்க்கட்சிகளை நசுக்கி, அதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்து எடுத்துவரும் நடவடிக்கைகள் பயன் தருமா? இதுபோன்ற நிறைய கேள்விகள் தற்போது நாடு முழுவதும் மக்கள் மனங்களில் ஓடிக் கொண்டு இருக்கின்றன.
இந்தியா வெல்லும் முழக்கம்:
இந்தியா கூட்டணி 18வது மக்களவைத் தேர்தலுக்காக தனது முழக்கமாக "JEETEGA INDIA" (ஜீதேகா இந்தியா) அதாவது "இந்தியா வெல்லும்" என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த இந்தியா வெல்லும் முழக்கத்தில், கடந்த பத்து ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் நாட்டு மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள், நாட்டின் வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் எடுத்துவரும் சர்வாதிகார நடவடிக்கைகள், ஒன்றிய அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருவது போன்ற பல்வேறு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணி முன்வைத்துள்ள இந்த "இந்தியா வெல்லும்" முழக்கம் தற்போது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பை பெற்று வருகிறது. இதன்மூலம் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் உண்மை முகத்தை தற்போது மக்கள் தெரிந்துகொண்டு வருகிறார்கள். கடந்த பத்து ஆண்டு காலமாக வெறும் வெற்று முழக்கங்கள் மூலம் மட்டுமே, பிரதமர் மோடி, மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வந்து இருப்பதை, மக்கள் தற்போது உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆக, இந்தியா கூட்டணியின் "இந்தியா முழக்கம்" என்ற பிரச்சாரம் மிகப்பெரிய அளவுக்கு அரசியலில் தாக்ககத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம். தேர்தல் காலம் நெருங்க, நெருங்க இந்த "இந்தியா முழக்கம்" பிரச்சாரம் மேலும் தீவிரம் அடைந்து, மக்களை நல்ல விதமாக சிந்திக்க வைக்கும் என்பது உறுதி.
எனவேதான், அச்சம் அடைந்துள்ள பா.ஜ.க. தலைவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்துவிடும் என்ற பயத்தில், பதற்றம் அடைந்து, ஒன்றிய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் கைதும் செய்து வருகிறார்கள். தற்போது டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு என நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தோல்வியை உறுதி செய்கிறது என்றே கூறலாம்.
ராகுல் காந்தி தாக்கு:
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் தற்போதைய நடவடிக்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டதால், பிரதமர் நரேந்திர மோடி, பயந்துவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும், தவறான செயல்பாடுகளில் இறங்கியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர். நாட்டில் தற்போது ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டு வருவதாகவும், சர்வாதிகாரப் போக்கு தலைதூக்கி வருவதாகவும் நாட்டு நலனின் அக்கறைக் கொண்ட சமூக ஆர்வர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோரும் கருத்து கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பணிகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும், செய்தியாளர்களின் சந்திப்பிலும் கீழ்க்கண்ட இந்த கருத்து சொல்லாமல் இருப்பது இல்லை.
"ஒரு பயந்த சர்வாதிகாரி இந்திய நாட்டில், இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, எதிர்க்கட்சிகளை உடைப்பது, தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்ற 'அசாதாரண சக்தி'க்கு போதாதென்று, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களை கைது செய்வதும் சகஜமான விஷயமாகிவிட்டது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" இப்படி ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார். நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை காக்க, தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும், அது இந்தியாவின் குரலாக இருக்கும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் தோல்வி உறுதி:
கடந்த 2019ஆம் ஆண்டை போல் இல்லாமல் தற்போது நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் விழித்துக் கொண்டு, அரசியல் குறித்து தங்களது புரிதலை மற்றவர்களிடமும் எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அளவுக்கு தோல்வி கிடைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில், பீகார், கர்நாடகா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மீண்டும் பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றியது.
ஆனால், தற்போது அரசியல் களம் மாறியுள்ளது. நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆட்சி குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள் மீது ஏன் தொடர்ந்து மோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்? என மக்கள் கேள்விக் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இதன்மூலம், கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை நிச்சயம் கிடைக்காது. பீகாரில், காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி, மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்று, பா.ஜ.க.வை வேரோடு சாய்த்துவிடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இதேபோன்று, கர்நாடகா மாநிலத்தில் சென்ற முறை வென்றது போன்று, இந்த முறை பா.ஜ.க. அதிக தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியாது. தற்போது அங்கு நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறிவிட்டது.
மகாராஷ்டிரா, தெலங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிங்களிலும் பா.ஜ.க.விற்கு எதிரான அலை வீசி வருகிறது. இதனால் பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை இந்த மாநிலங்களில் சந்திக்கும்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் குறித்து நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் கூட பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது. இதேபோன்று, ஆந்திர பிரதேசத்திலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
இந்தியா கூட்டணிக்கு வெற்றி:
நாம் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு மாநிலங்களில், தற்போது உள்ள அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்தால், அந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் நல்ல வெற்றியை பெறுவார்கள் என்பது உறுதியாக தெரியவருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் காங்கிரஸ், சமாஜ்வாதி காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, உள்ளிட்ட கட்சிகள், வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல மகசூலைப் பெறுவார்கள் என தெரிகிறது.
இப்படி வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், தென்மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் 18வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.
இதன் காரணமாகதான், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் பதற்றம் அடைந்து, பல்வேறு சதி வேலைகளில் இறங்கியுள்ளனர். எனவே, இந்தியா கூட்டணி தலைவர்கள் மட்டுமல்லாமல், நாட்டு மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருந்து, பா.ஜ.க.வின் சதி வலையில் சிக்கிக் கொள்ளாமல், உஷாராக செயல்பட வேண்டும். மீண்டும் ஆட்சியை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்ல பா.ஜ.க. திட்டங்களை அரங்கேற்றும் என நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்தியாவில் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் ஆகியவை பாதுகாக்க, சர்வாதிகாரம் ஒழிய, இந்திய மக்கள் மிகச் சிறந்த முறையில் தங்களது ஜனநாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி, பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டுமானால், பா.ஜ.க. கண்டிப்பாக வீழ்ச்சி அடைய வேண்டும். பா.ஜ.க.வின் வீழ்ச்சியில் தான் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment