Saturday, February 22, 2025

400 மொழிகளை பேசும் சென்னை இளைஞர்....!

 "400 மொழிகளை பேசி அசத்தும் முஸ்லிம் இளைஞர் மஹ்மூத் அக்ரம்"

ஏக இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கு பல அற்புதமான திறமைகளை வாரி வழங்கி இருக்கிறான். அந்த திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது மனிதனின் பொறுப்பாகும். இப்படிப்பட்ட திறமைகளை தங்களுக்குள் இருப்பதை அறிந்து, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்கள் உலகில் நிறைய பேர்  இருந்து வருகிறார்கள். அத்தகைய வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் மஹமூத் அக்ரம்.

சென்னையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மஹ்மூத் அக்ரம், தம்முடைய அற்புதமான சாதனையால் உலகில் உள்ள அனைவரின் பார்வையையும், கவனத்தையும், தம்மை நோக்கி திருப்பி வைத்துள்ளார். பலர் சாத்தியமற்றது என்று கருதுவதை, மஹமூத் அக்ரம், தனது கடுமையான உழைப்பால், ஆர்வத்தால் சாதித்துள்ளார். ஆம், 400 மொழிகளில் படிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யவும் திறமை கொண்டுள்ள இந்த இளைஞர்,  46 மொழிகளை மிகவும் சரளமாகப் பேச முடியும் என்பதை நிரூபித்துள்ளார். மஹ்மூத்தின் இந்த சாதனைகள் மூலம் அவருக்கு உலக சாதனை விருதுகள் கிடைத்தது மட்டுமல்லாமல்,  உலகெங்கிலும் உள்ள மொழியியலாளர்களின் மத்தியில் மரியாதையைப் பெற்று தந்துள்ளது.

ஒரு மொழியியல் பயணம்:

மஹமூத் அக்ரமின் மொழிகளின் மீதான ஈர்ப்பு இளம் வயதில் ஆரம்பிக்க தொடங்கியது என்றே கூறலாம். தனது மகனின் ஆர்வத்தை கண்ட அவரது தந்தை ஷில்பீ மொழிப்பிரியன், அக்ரமை சரியான முறையில் வழிநடத்திச் சென்றார்.  தாம் மட்டுமே,16 மொழிகளைப் பேசும் ஷில்பீ மொழிப்பிரியன், "மொழி சார்ந்த வாய்ப்புகளிலிருந்து தன் மகனின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், தனது மனைவி அக்ரமுடன் கருத்தரிக்கப்பட்டபோது, ​குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட உதவும் என்ற நம்பிக்கையில் மொழிகளைப் பற்றி தாங்கள் உரையாடியதாகவும்,  அக்ரமின் விஷயத்தில் அது பலித்ததாகத் தெரிகிறது" என்றும் கூறுகிறார்.

அக்ரமுக்கு மொழிகள் மீதான ஈர்ப்பு 4 வயதிலேயே தொடங்கியது. அவரது பெற்றோர் அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிம் கற்பிக்கத் தொடங்கியதுபோது, ஆறு நாட்களில் ஆங்கில எழுத்துக்களில் அவர் தேர்ச்சி பெற்றதைக் கண்டு அவரது பெற்றோர் ஆச்சரியப்பட்டார்கள்.  அவரது திறமை அத்துடன்  நிற்கவில்லை. அவர் மூன்று வாரங்களில் 299 தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டார். இது பொதுவாக பல மாதங்கள் எடுக்கும் பணியாகும். அவரது தந்தையின் வழிகாட்டுதலின் மூலம், அக்ரம் விரைவாகவே வட்டெலுத்து, கிரந்தம் மற்றும் தமிழி போன்ற பண்டைய தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொண்டார். அவற்றில் அக்ரம் விரைவாக தேர்ச்சி பெற்றார். 

சாதனைகள் மற்றும் பதிவுகள்:

ஆறு முதல் எட்டு வயது வரை, அக்ரமின் மொழியியல் தேர்ச்சிக்கான சுயமான தேடல் அவரை 50 மொழிகளைக் கற்றுக்கொள்ள வழிவகுத்தது.  இந்தப் பயணம் எட்டு வயதில் இளைய பன்மொழி தட்டச்சு செய்பவர் என்ற அவரது முதல் உலக சாதனைக்கு வழிவகுத்தது.  அக்ரம் 70 மொழியியல் நிபுணர்களுடன் போட்டியிட்டு ஜெர்மன் இளம் திறமை விருதை வென்றார்.  10 வயதில், அக்ரம் ஒரு மணி நேரத்திற்குள் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி தனது இரண்டாவது உலக சாதனையை படைத்தார். மொழியியல் சிறப்பிற்கான அவரது பசி தொடர்ந்தது. மேலும் 12 வயதில், அவர் 400 மொழிகளில் படிக்க, எழுத மற்றும் தட்டச்சு செய்ய முடியும் என்பதை நிரூபித்தார். இதன்மூலம், 70 மொழியியல் நிபுணர்களுடன் போட்டியிட்டு ஜெர்மனியில் தனது மூன்றாவது உலக சாதனையைப் பெற்றார்.

அக்ரமின் மொழிகள் மீதான ஆர்வம் வளர்ந்ததால், அது அவரது வழக்கமான கல்விக்கு சவால்களை ஏற்படுத்தியது. அவர் ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். ஆனால் அவரது ஆர்வத்திற்கு வேறு அணுகுமுறை தேவை என்பதை விரைவில் உணர்ந்தார். மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு பள்ளியில் சேர விரும்பிய அவர், ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்பதை உணர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்லைன் மூலம், அரபு, ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் ஹீப்ரு போன்ற முக்கிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். மொழி அறிவில் வெற்றி இருந்தபோதிலும், வாழ்க்கையில் கல்விச் சான்றிதழ்களின் முக்கியத்துவத்தையும், சில சமயங்களில் அவை திறமையை விட எவ்வாறு முக்கியமானவை என்பதையும்  தாம் உணர்ந்து கொண்டதாக அக்ரம் ஒப்புக்கொள்கிறார். எனவே தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனம் மூலம் படிக்க முடிவு செய்து, அந்த வழியில் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார்.  அக்ரமின் தந்தை ஷில்பீ  மொழிப்பிரியன், அவரது வெற்றிக்கான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள டானூப் சர்வதேச பள்ளியில் உதவித்தொகையுடன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையைத் தொடங்கிய அக்ரம்,  இது தம்மை தாய்மொழி பேசுபவர்களுடன் உரையாடவும், அவரது மொழியியல் திறன்களை மேம்படுத்தவும் அனுமதித்தது என்கிறார். தனது வகுப்பறையில் மட்டும், 39 தேசிய இனத்தவர்கள் இருந்ததாகவும், தனது வகுப்புத் தோழர்களுடன் உரையாடுவது பல மொழிகளில் சரளமாகப் பேச தமக்கு உதவியது என்றும் கூறுகிறார்.

தமிழ் மொழியே சிறந்தது:

அக்ரம் இன்று பல துறைகளில் கல்வி பயின்று பட்டங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் மொழியியல், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் மற்றும் சென்னை அழகப்பா பல்கலைக்கழகத்தில் அனிமேஷனில் அறிவியலில் இளங்கலை பட்டம் என பல பட்டங்களை பெற்றுள்ளார். மொழிகளை சரளமாகப் பேசுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் அக்ரமிற்கு ஆர்வம் உருவானது.  அதன் காரணமாக இன்று, அவர் 15 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவராக மாறியுள்ளார். மற்ற மொழிகளையும் ஒரு தாய்மொழிப் பேச்சாளர் அளவுக்குக் கற்றுக்கொள்கிறார். பல ஆண்டுகளாக அவர் கற்றுக்கொண்ட ஏராளமான மொழிகளுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களையும் பொழுதுபோக்கையும் அக்ரம் பயன்படுத்துகிறார். 

அக்ரம் தேர்ச்சி பெற்ற மொழிகளில், தமிழ் அவருக்கு மிகவும் பிடித்தமான மொழியாகும். “தமிழ் தனது  தாய்மொழி என்றும், எனவே அது தன் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது" என்று கூறி அவர் மகிழ்ச்சி அடைகிறார். அக்ரமைப் பொறுத்தவரை, அவரது சாதனைகள் ஒரு பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும். 2016 ஆம் ஆண்டில், அக்ரமின் தந்தை, ஷில்பி சென்னையின் ஷெனாய் நகரில் அக்ரம் குளோபல் லாங்குவேஜஸ் நிறுவனத்தை நிறுவினார். தனது மகனுக்கு மட்டுமே பல மொழிகளைக் கற்றுக் கொள்வது சுயநலம் என்று உணர்ந்ததாலும், மொழிகளின் சக்தியால் மற்றவர்கள் பயனடைய வேண்டும் என்று விரும்பியதாலும், இந்த நிறுவனத்தை தொடங்கியதாக அவர் கூறுகிறார்.  இந்த நிறுவனம் இந்தியா மற்றும் வளைகுடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 150 மாணவர்களுக்கு கற்பிக்கிறது. ஷில்பீ மற்றும் அக்ரம் நடத்திய ஆன்லைன் வகுப்புகள் மூலம் இந்தி, பிரஞ்சு, ஸ்போக்கன் இங்கிலீஷ், அமெரிக்க உச்சரிப்பு மற்றும் தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு பலர் தற்போது சாதனை புரிந்து வருகிறார்கள். 

பிற மொழிகளில் தமிழ் இலக்கியங்கள்:

திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை முடிந்தவரை பல மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே அக்ரமின் கனவாகும். தற்போது 50 மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே திருக்குறளை அணுக முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.  உலகளாவிய பார்வையாளர்கள் தமிழின் வளமான பாரம்பரியத்தை அறிய வேண்டும் என்று விரும்பும் அக்ரம், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 

ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மொழியியலில் பேராசிரியராக வேண்டும் என்பதே அக்ரமின் நோக்கமாக இருந்து வருகிறது.  தனது திறமையை வளர்த்ததற்காக தனது பெற்றோரைப் பாராட்டும் அக்ரம், "திறமை தனிநபருக்குள் இருக்கிறது. ஆனால் அதை அங்கீகரித்து ஆதரிப்பது பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களைப் பொறுத்தது. அவர்களின் ஊக்கம் இல்லையென்றால், தாம் 16 மொழிகளில் நிறுத்தியிருக்கலாம்" என்றும் தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார்.  சென்னையில் எழுத்துக்களைக் கற்கும் ஆர்வமுள்ள நான்கு வயது சிறுவனிலிருந்து உலக சாதனை படைத்த பன்மொழிப் புலமையாளர் வரையிலான மஹ்மூத் அக்ரமின் பயணம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் தாக்கத்தை நினைவூட்டுவதாகும். தனது பணி மற்றவர்களை மொழியியல் பன்முகத்தன்மையைப் பாராட்ட ஊக்குவிக்கும் என்று நம்பும் அக்ரம்,  ஒரு மொழியை அறிவது மக்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்றும் கூறுகிறார். அக்ரமின் இந்த பயணம் உலகெங்கிலும் உள்ள மொழியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அர்ப்பணிப்பும் ஆர்வமும் கல்வி மற்றும் கற்றலில் தடைகளை உடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: