கிரிக்கெட்டும் இப்ராஹிம் பாயும்....!
கிரிக்கெட்டும், இப்ராஹிம் பாயும் என்ற இந்த தலைப்பே உங்களுக்கு கொஞ்சம் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். இப்ராஹிம் பாய்க்கு கிரிக்கெட் தேவையா என்ற கேள்வி கூட நம்மில் சிலருக்கு பிறக்கலாம். ஆனால், ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் விளையாட்டுகளை ஒருபோதும் வெறுக்கவில்லை. உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரும் நல்ல விளையாட்டுகளை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கிறது. நன்கு ஊக்குவிக்கிறது.
இதன் காரணமாக தான், சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் கால்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுகள் புகழ்பெற்று விளங்குகின்றன. சவுதி அரேபியாவில், சவுதி புரோ லீக் என்பது நாட்டின் மிக உயர்ந்த அளவிலான போட்டியாகும். 1970கள் வரை, சவுதி அரேபியா முழுவதும் ஒரு பிராந்திய அடிப்படையில் கால்பந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 1976 சவூதி புரொபஷனல் லீக் சீசனில், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் உள்ளூர் கால்பந்து மேம்படுத்தப்பட்டதன் மூலம், லீக் தேசிய அடிப்படையில் தொடங்கப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக வரும் 2034ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்பட உள்ளது. இப்படி பல்வேறு விளையாட்டு போட்டிகளில், முஸ்லிம்கள் கலந்துகொள்ள ஆர்வமும் ஊக்கமும் ஊட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பிரபலமாக உள்ள கிரிக்கெட் விளையாட்டுகளிலும் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். முஸ்லிம் இளைஞர்களில் முகமது ஷமி உள்ளிட்ட சிலர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு, நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். பலர் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடாவிட்டாலும், சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளை மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதை காண முடிகிறது. இப்படி முஸ்லிம் இளைஞர்களும், முதியவர்களும் ஏன் பெண்களும் கூட வழக்கமாக கொண்டு வருகிறார்கள். தற்போது நவீன காலத்தில் விளையாட்டு போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுவதால், வீட்டில் இருந்தே அதனை கண்டு ரசிக்கும் வாய்ப்பு ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைத்து விடுகிறது.
இப்ராஹிம் பாயின் ஆர்வம்:
அப்படி தான் இப்ராஹிம் பாயும் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே, இப்ராஹிம் பாய்க்கு கிரிக்கெட் என்றால் அப்படி ஒரு ஆர்வம். அப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட மாட்டாது. எனவே, வானொலி மூலம் மட்டுமே வர்ணனை கேட்க முடியும். எனவே, இப்ராஹிம் பாய் தனது இளமை காலத்தில், கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையை வானொலி மூலம் ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பார். இப்படி கேட்பது அவருக்கு தனி சுகம் என்றே கூறலாம்.
நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இப்ராஹிம் பாய், கிரிக்கெட் போட்டிகளை நேரில் சென்று பார்க்க ஒருபோதும் விரும்பியதே இல்லை. எப்போது வானொலி மூலம் மட்டுமே கேட்டு ரசிப்பார். அத்துடன், கிரிக்கெட் நுணுக்கங்களை பலரும் வியக்கும் வகையில் எடுத்துக் கூறி, எல்லோரையும் வியப்பு அடையச் செய்வார். நவீன காலத்தில் தொலைக்காட்சி யுகம் தொடங்கியபிறகு, கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும், தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படும் போட்டிகளை வீட்டில் அமர்ந்து ரசிப்பது இப்ராஹிம் பாயின் வழக்கம். பெரும் செல்வந்தராக இருந்தாலும், போட்டிகள் நடைபெறும் கிரிக்கெட் அரங்கங்களுக்கு அவர் ஒருபோதும் செல்லவே மாட்டார். இது, அவருடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். ஏன் சில சமயங்களில் இப்ராஹிம் பாய் ஒரு கஞ்சர் என்று கூட சிலர் வெளிப்படையாக கூறாமல், மனத்திற்குள் சொல்லிக் கொள்வார்கள்.
காரணம் என்ன?
சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்குச் சென்று பார்க்க வேண்டுமானால், மிகப்பெரிய அளவுக்கு தொகையை செலவழிக்க வேண்டும். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் சர்வதேச போட்டிகளுக்கான டிக்கெட் ஒன்றின் அதிகப்பட்ச விலை 25 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இந்த பெரும் தொகையை செலவழித்து கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ஆனால், பெரும் செல்வந்தரான இப்ராஹிம் பாய், தமக்கு செல்வம் இருக்கும்போதும், அப்படி ஒருபோதும், ஒரு பெரும் தொகையை செலவழித்து கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்ததே இல்லை. இதற்கு என்ன காரணம் என அறிய பலருக்கு ஆவல் ஏற்பட்டது. அப்போது தான் ஓர் உண்மை தெரியவந்தது.
இப்ராஹிம் பாய் குடும்பத்தில் மொத்தம் 6 பேர். இவர்கள் 6 பேருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு கிரிக்கெட் போட்டியை காண வேண்டுமானால் மொத்தம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். இப்ராஹிம் பாயை பொறுத்தவரை, மூன்று லட்சம் என்பது மிகவும் சாதாரண தொகை தான். எனினும், அதை செலவழிக்க அவருக்கு ஒருபோதும் மனம் வராது. கிரிக்கெட் போட்டிக்காக செலவழிக்கும் மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அவர் என்ன செய்வார் என அறிந்தபோது மிகவும் வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி:
சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரை நேரில் சென்று பார்க்க செலவாகும் ஒரு பெரும் தொகையை இப்ராஹிம் பாய், ஏழை, எளிய மாணவ மாணவிகளின் கல்விக்காக செலவழித்து வருவதை அறிந்தபோது, உண்மையில் ஏக இறைவனுக்கு நன்றி செல்ல மனம் துடித்தது. இதுகுறித்து ஒருமுறை இப்ராஹிம் பாயிடம் பேசியபோது, அவர் இப்படி கூறினார்.
"பாய், அல்லாஹ் எனக்கு நல்ல செல்வத்தை வாரி வழங்கி இருக்கிறான். வசதியையும் கொடுத்துள்ளான். கார், பங்களா என அனைத்தும் என்னிடம் உள்ளது. மேலும், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்தையும் கொடுத்துள்ளான். எனக்கு கிரிக்கெட் என்றால், உயிர். மற்ற விளையாட்டு போட்டிகளை விட, கிரிக்கெட்டை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். ரசிப்பேன். அதேநேரத்தில் எனக்கு மனதில் ஒரு வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. கிரிக்கெட் போட்டியை காண நாம் செலவழிக்கும் தொகையை, ஏன் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கல்விச் செலவுக்காக செலவழிக்கக் கூடாது? என்று என் மனம் அடிக்கடி என்னை கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தது. நான்கு மணி நேரம் பொழுதுபோக்கிற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவழித்து ஏன் வீண் விரயம் செய்ய வேண்டும்? என என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொண்டேன். இப்படி அடிக்கடி கேள்வி கேட்டதால், அந்த தொகையை ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்விக்கு செலவழிக்கலாம் என்ற எண்ணம் பிறந்தது. அன்று முதல் இதை கடைப்பிடித்து வருகிறேன்.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் எந்த போட்டியானாலும், அந்த போட்டிக்காக என் குடும்பத்தில் உள்ள மொத்தம் 6 பேருக்கான டிக்கெட் தொகையை தனியாக எடுத்து வைத்துகொள்வேன். இப்படி, ஓர் ஆண்டில் பல போட்டிகள் நடந்தால், அந்த அனைத்து போட்டிகளின் டிக்கெட் தொகையையும் தனியாக எடுத்துவைத்துக் கொண்டு, அந்த தொகையை, நம் பகுதியில் உள்ள ஏழை, மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கல்வியில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளின் படிப்புக்காக கொடுத்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவிடுவேன். பள்ளி, கல்லூரி படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகச் செலவு, சீருடை செலவு, என என்னால் முடிந்த அளவுக்கு கொடுத்துவிடுவேன். கிரிக்கெட் போட்டியை காண செலவழிக்கும் பெரும்தொகையை, ஏழை, எளிய மாணவ மாணவிகளின் படிப்புச் செலவுக்காக கொடுக்கும்போது, மனதில் மகிழ்ச்சி பிறக்கும். உடலில் ஆனந்தம் உருவாகும். அத்தோடு, ஒரு ஏழை இளைஞன், வாழ்க்கையில் உயர நாமும் ஒரு சிறிய உதவி செய்தோம் என்ற மன திருப்தி கிடைக்கும். இப்படி செய்யும்போது, என் குடும்பத்திலும் எப்போதும் மகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.
உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், வெகு சீக்கிரத்திலேயே நலம் பெற்றுவிட்டு, மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட வாய்ப்பு உருவாகிவிடும். ஒருவரின் கல்விக்காக நாம் செய்யும் செலவு, அந்த குடும்பத்தை மட்டுமல்லாமல், சமுதாயத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தான் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டி தொடரின்போதும், நான் வழக்கமாக செலவழிக்கும் தொகையை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அதை நானே நேரில் சென்று மாணவர்களின் கல்விச் செலவுக்காக கொடுத்து வருகிறேன். இதுதான் கிரிக்கெட் போட்டிகளை நான் நேரில் பார்க்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம்"
இப்ராஹிம் பாய் இப்படி கூறியதை கேட்டபோது, உண்மையிலேயே மனதில் ஒரு இனம்புரியாத ஆனந்தம் ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியை காண பல லட்சம் ரூபாயை செலவழிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்துவரும் நிலையில், அந்த தொகையை நல்ல காரியத்திற்கு, நல்ல எண்ணத்துடன் செலவழிக்கும் இப்ராஹிம் பாய்க்கு ஏக இறைவன் இன்னும் நிறைய கொடுக்க வேண்டும். அதன்மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் உயர்கல்விப் பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என மனம் துஆ செய்தது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment