Sunday, February 2, 2025

ஜாகியா ஜாஃப்ரி மரணம்...!

"குஜராத் கலவர வழக்கில் நீதிக்காக  போராடிய ஜாகியா ஜாஃப்ரி காலமானார்"

அகமதாபாத், பிப்.2-  -குஜராத் கலவர வழக்கில் நீதிக்காக போராடிய ஜாகியா ஜாஃப்ரி, 01.02.2025 அன்று காலமானார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் வெடித்த கலவரத்தின்போது, முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 கொல்லப்பட்டனர். தனது கணவர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜாடிகயா ஜாஃப்ரி தன் வாழ்நாள் முழுவதும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டே இருந்தார். 

இத்தகைய சூழ்நிலையில், அகமதாபாத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று இருந்தபோது, நேற்று (01.02.2025) தனது குடும்ப உறுப்பினர்களுடன் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தபோது, ​ தமக்கு அசௌகரியமாக இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து மருத்துவர் அழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்தபோது,  காலை 11:30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். என்று அவரது மகன் தன்வீர் ஜாஃப்ரி தெரிவித்தார். 

குஜராத் கலவரம் ஒரு பார்வை:

கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் எரிக்கப்பட்ட மறுநாளே குஜராத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 28, 2002 அன்று அகமதாபாத்தில் உள்ள முஸ்லிம் பகுதியான குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட 69 பேரில் ஜாஃப்ரியின் கணவர் எஹ்சான் ஜாஃப்ரியும் ஒருவர் ஆவார். 

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பயங்கரமான கலவரத்தைத் தூண்டியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு நடந்த கலவரங்களுக்கான பெரிய சதித்திட்டத்திற்கு உயர்மட்ட அரசியல் தலைவர்களை பொறுப்பேற்க வைக்க உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தியதன் மூலம் ஜாகியா ஜாஃப்ரி தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

 ஜாகியா ஜாஃப்ரியின் சட்டப் போராட்டம்:

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2006 ஜுன் 8ஆம் தேதி ஜாகியா ஜாஃப்ரி 119 பக்கங்கள் கொண்டு புகார் மனு ஒன்றை மாநில டி.ஜி.பி.யுடம் நேரில் வழங்கினார். ஆனால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால், அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வன்முறையில் ஈடுபட்ட 62 பேர் உள்ளிட்டவர்கள்  மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா 2007ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து 2008 மார்ச் 3ம் தேதி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் 2009 ஏப்ரல் 27ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழு மே 14ஆம் தேதி மோடியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. 

பின்னர் ராஜு ராமசந்திரன் தாக்கல் செய்த 10 பக்க அறிக்கையின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கையில் உள்ள குறைப்பாடுகள் குறித்து ராஜு ராமசந்திரன் முறையிட்டபோது, அதுகுறித்து சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் 2011 ஜுலை 25ஆம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அப்போது சிறப்பு புலனாய்வுக்குழு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மோடி உள்ளிட்டோர் பரிசுத்தமானவர்கள் என்ற அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு எதிரா ஜாகியா ஜாஃப்ரி, மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து 2014 மார்ச் 18ல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். எனினும் 2017 அக்டோபர் 5ஆம் தேதி இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக 2018 செப்டம்பர் 12ஆம் தேதி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2022 ஜுன் 24ஆம் தேதி, சிறப்பு புலனாய்வுக்குழு மோடி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என கூறியதை ஏற்றுக் கொண்டு, அந்த மனுவை தள்ளுபடி செய்தது. 

இப்படி நீதிக்காக தொடர்ந்து ஜாகியா ஜாஃபரி தனது வாழ்வின் இறுதிநாள் வரை போராடிக் கொண்டே இருந்தார்.  இந்நிலையில் "மனித உரிமை சமூகத்தின் இரக்கமுள்ள தலைவரான ஜக்கியா  முன்பு காலமானார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட இருப்பை நாட்டின் குடும்ப நண்பர்கள் மற்றும் உலகத்திற்கு பெரும் இழப்பாகும்" என்று உச்சநீதிமன்றத்தில் ஜாஃப்ரியின் எதிர்ப்பு மனுவில் இணைப் புகார்தாரராக இருந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: