சவால்களைத் தாண்டி முஸ்லிம்கள் எப்போது எழுவார்கள்?
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் நாள்தோறும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த 11 ஆண்டுகளாக சந்தித்துவரும் சவால்கள், பிரச்சினைகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என பல்வேறு சட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வருகிறது. இதனால், முஸ்லிம்களை மனரீதியாக தாக்கி, அவர்களின் அமைதியை பறிக்க சதித் திட்டங்கள் நாள்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சதித் திட்டங்கள், சவால்கள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவை உண்மையாகவே நேசிக்கும் மக்களாக முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். உலகில் ஒரு சிறந்த நாடு, இந்தியா மட்டுமே என்று இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். பல்வேறு கலாச்சாரம், பண்பாடு, மொழி என இருக்கும் இந்திய நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த சிந்தனையை மனதில் கொண்டு இந்திய முஸ்லிம்கள் அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள்.
நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை அந்நியர்கள் என சொல்லும் அளவுக்கு ஒருசில பாசிச இந்துத்துவ அமைப்புகள் பணியாற்றி வரும் நிலையில், அந்த சவால்களை நாள்தோறும் எதிர்கொண்டு, அமைதியான முறையில் தங்களுடைய பணிகளை முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு முஸ்லிம்கள் உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும், பிரச்சினைகள், சவால்களைத் தாண்டி முஸ்லிம்கள் எப்போது எழுவார்கள் ? என்ற கேள்வி பொதுவாக இருந்து வருகிறது.
செயல்திறனை முடக்க சதி:
அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கல்வித் துறைகளில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதை எதிர்கொள்ளும் ஒரு காலகட்டத்தில், முஸ்லிம்கள் எப்போது ஒன்றுபட்ட மற்றும் நீதியுள்ள தேசமாக மாறுவார்கள்? என்ற கேள்வி இருந்து வருகிறது. தினசரி சதித்திட்டங்கள் அவர்களின் செயல்படும் திறனை முடக்கி, அவர்களை விரக்தியின் சுழற்சியில் சிக்க வைத்துள்ளன. மறைந்த பத்திரிகையாளர் ஜமீல் மெஹ்தி ஒருமுறை, இதேபோன்ற கேள்வியை தனது தலையங்கங்களில் எழுப்பினார். பின்னர் "முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிறு புத்தகத்தில் பல்வேறு தகவல்களையும் விஷயங்களையும் அவர் தொகுத்தார்.
ஜமீல் மெஹ்தியின் கருத்துகளைப் போலவே இந்தியாவில் உள்ள மூத்த முஸ்லிம் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களின் அவதானிப்புகளும் சமூகத்தின் மீதான ஆழ்ந்த கவலையை பிரதிபலித்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களின் அவலநிலையை கண்டு, பலர் கவலையுடன் செயல்பட்டு வருகிறார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடிகள் காரணமாக புதிய புதிய பிரச்சினைகள், புதிய புதிய சிக்கல்கள், புதிய புதிய சவால்கள் என ஏராளமான பிரச்சினைகள் சந்திக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வருவதை கண்டு அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகிறார்கள். எனினும் முஸ்லிம்களின் செயல்திறனை முடக்க சதிகளை முறியடித்து நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும், ஒற்றுமையுடன் செயல்பட்டு, சவால்களை தாண்டி எழ வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
முன்னுரிமைகளின் நெருக்கடி:
ஒரு முக்கிய அம்சத்தை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், பிரச்சினையின் மையமானது தவறான முன்னுரிமைகளில் உள்ளது என தெரியவரும். சாப்பிடுவதும் குடிப்பதும் வாழ்க்கையின் ஒரே நோக்கங்கள் போல, முஸ்லிம் சுற்றுப்புறங்கள் பெரும்பாலும் இன்பத்தில் மூழ்கியிருப்பதாகத் தெரிகிறது. திருமணங்கள் மற்றும் பொருள் உடைமைகளுக்கு ஆடம்பரமான செலவுகள் வழக்கமாகிவிட்டன. உதாரணமாக, உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், ஒரு முஸ்லிம் குடும்பம் சமீபத்தில் 10 கோடி ரூபாய் பணத்தை ஒரு திருமணத்திற்காக செலவிட்டுள்ளது. இது சமூகத்தின் இளைஞர்களை மேம்படுத்த ஒரு கல்லூரிக்கு நிதியளிக்க முடியும். இதேபோன்று, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதை பெருமையாக கருதும் போக்கு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் தற்போது இருந்து வருகிறது.
வடமாநிலங்களில் முஸ்லிம்கள் கல்வி, சமூக வாழ்வு ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அதற்காக நல்ல தீர்வு காண யாரும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக வேலை தேடி நாள்தோறும் அலைய வேண்டிய கட்டாய சூழ்நிலை வடமாநில முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட தென்மாநிலங்களுக்கு வரும் கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் முஸ்லிம்களாக இருந்து வருகிறார்கள். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தும், முஸ்லிம் இளைஞர்களின் கல்விக்காக எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான தயாரிப்புகளிலும் முஸ்லிம் அமைப்புகள் இறங்கவில்லை.
தென்னிந்திய முஸ்லிம்கள் சாதனை:
இதற்கு நேர்மாறாக, தென்னிந்திய முஸ்லிம்கள், தங்கள் மாநிலங்களில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். அத்துடன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம் குடும்பங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளில் தென்னிந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக வட மாநில முஸ்லிம்களை விட தென்னிந்திய முஸ்லிம்கள் கல்வி, தொழில், வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் நன்கு வளர்ச்சி அடைந்து சமூகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில், பதோஹி மற்றும் மொராதாபாத் போன்ற நகரங்கள் கடுமையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இந்த நகரங்கள் பொருளாதார ரீதியாக செழித்து வளர்ந்தாலும், கம்பளங்களில் பதோஹி மற்றும் மட்பாண்ட ஏற்றுமதியில் மொராதாபாத் அவர்களின் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. இந்தத் தொழில்களில் ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கல்வி அல்லது சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல் குறைவாகவே இருப்பதால் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மாற்றத்திற்கான அழைப்பு:
நாட்டில் 25 கோடிக்கு அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் பொருளாதார மேம்பாடு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. கல்வியில் மிகப்பெரிய அளவுக்கு முஸ்லிம்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக அவர்களின் வளச்ச்சி பின்நோக்கியே சென்றுக் கொண்டு இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், முஸ்லிம்கள் தங்கள் கவனத்தை ஊதாரித்தனத்திலிருந்து கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அர்த்தமுள்ள முதலீடுகளுக்கு மாற்ற வேண்டும். செல்வம், புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டால், சமூகத்தை மாற்றியமைத்து, பின்தங்கிய சுழற்சியை உடைக்க முடியும். முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்து, அரசியல், சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்புக்காக கூட்டாக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரகாசமான எதிர்காலத்திற்காக ஏங்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நடவடிக்கைக்கான அழைப்பு இதுவேயாகும். இதைப் பற்றி சிந்தித்து ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்காக முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். இன்றைய முஸ்லிம்களின் நிலை ஆழ்ந்த வேதனையை பிரதிபலிக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு, அதை மாற்றி அமைக்க அனைவரும் ஒன்றுபட்டு, சரியான திட்டமிட்டு, உறுதியாக செயல்பட்டால், நிச்சயம் மாற்றம் ஏற்படும். அதற்கு, 'சவால்களைத் தாண்டி முஸ்லிம்கள் எப்போது எழுவார்கள்?' என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால், தடைகளை உடைத்து ஓரளவுக்கு சாதனையின் திசையை நோக்கி முஸ்லிம்கள் நிச்சயம் பயணிக்க முடியும் என உறுதியாக கூறலாம்.
==========================
No comments:
Post a Comment