"மத்திய பட்ஜெட் - ஓர் பார்வை"
- ஜாவீத் -
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11வது ஆண்டு நடந்துகொண்டு இருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் தனது எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் நான்கு ஆண்டுகளில் குறைந்த பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் மூன்றாவது முழு ஆண்டு பட்ஜெட்டை ஆகும்.
எளிமையாகச் சொல்ல வேண்டுனால், பட்ஜெட் என்பது ஒரு செயல்முறை அல்லது அதன் மூலம் அரசாங்கம் அதன் நிதிநிலையைப் பற்றி நாடாளுமன்றத்திற்கும் மற்றும் முழு நாட்டிற்கும் தெரிவிக்கிறது. பட்ஜெட்டில் மூன்று முக்கிய பகுதிகள் பற்றிய வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது. அவை வருமானம், செலவு மற்றும் கடன் ஆகியவை ஆகும். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் சுமையை குறைக்க வருமான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன்மூலம் பயன் அடைபவர்கள் மிகவும் குறைந்தவர்கள் மட்டுமே என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் வாக்காளர்களை கவரும் பட்ஜெட்:
பீகார் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட்டில் பாஜக அரசு, வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும், பீகார் வாக்காளர்களையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அறிவிப்புகளை பீகாரில் உள்ள 6 கோடியே 65 லட்சம் வாக்காளர்களும், நாடு முழுவதும் வருமான வரி செலுத்தும் 3 கோடியே 20 லட்சம் பேர் வரவேற்பார்கள். ஆனால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே கூறினார்.
முக்கிய துறைகளில் செலவினம் குறைப்பு:
பட்ஜெட்டில், செலவுகளைப் பொறுத்தவரை, மொத்த செலவினம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 25 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு 92 ஆயிரத்து 682 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் மற்றும் குறைக்கப்பட்ட தொகைகள் குறித்து நாம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். சுகாதாரம் ஆயிரத்து 255 கோடி ரூபாய், கல்வி, 11 ஆயிரத்து 584 கோடி ரூபாய், சமூக நலன், 10 ஆயிரத்து 19 கோடி ரூபாய், விவசாயம் 10 ஆயிரத்து 992 கோடி ரூபாய், கிராமப்புற மேம்பாடு, 75 ஆயிரத்து 133 கோடி ரூபாய், நகர்ப்புற மேம்பாடு 18 ஆயிரத்து 907 கோடி ரூபாய், வடகிழக்கு மேம்பாடு ஆயிரத்து 894 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கல்விக்கான நிதி ஒதுக்கீடு, 2 புள்ளி ஐந்து மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு 10 புள்ளி எட்டு மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. மற்றும் டெலிகாம் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்று புள்ளி எட்டு எட்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய பட்ஜெட் உரைகளில் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களில் அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டது. மேலும் அரசாங்கத்தின் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. உதாரணமாக போஷன், ஜல் ஜீவன் மிஷன், என்.எஸ்.ஏ.பி., (NSAP) பி.எம்.ஜி.எஸ்.ஒய்., (PMGSY) பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா மானியம் மற்றும் பி.எம். கரிப் கல்யாண் அன்ன யோஜனா ஆகியவை அடங்கும்.
நாட்டில் ரயில்வேகள் குறைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறை பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் 766 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்திருப்பது பணவீக்கத்தைக் கூடக் கணக்கிடாது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருக்கும். மேலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்ட, பெரிதும் பாராட்டப்பட்ட பி.எல்.ஐ. திட்டங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் மற்றும் திறன் இந்தியா திட்டத்தில், இந்த நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை நாம் வரவேற்க வேண்டும்.
130 கோடி மக்கள் பாதிப்பு:
கெட்டிக்காரத்தனமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள். பீகார் வாக்காளர்களுக்கு கெட்டிக்காரத்தனமாக பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து இருக்கிறார்கள். அதேபோன்று வரிச் செலுத்தக்கூடிய வருமான வரி சலுகை தந்து இருக்கிறார்கள். ஆனால் பீகார் வாக்காளர்கள் 7 கோடியே 60 லட்சம் பேர் தான். நாடு முழுவதும் வருமான வரி செலுத்துபவர்கள், 3 கோடியே 20 லட்சம். 10 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் எஞ்சியுள்ள 130 கோடி மக்களுக்கு என்ன சலுகைகள் அறிவித்து இருக்கிறார்கள்.
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியை உயர்த்தி இருந்தால் பல கோடி பேர் பயன் அடைந்து இருப்பார்கள். ஜி.எஸ்.டி. வரியை குறைத்து இருந்தால், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன் கிடைத்து இருக்கும். குறைந்தபட்ச ஊதியத்தை சட்டப்பூர்வமாக உயர்த்தி இருந்தால், பல கோடி பேர் பயன் அடைந்து இருப்பார்கள். அதையெல்லாம் செய்யாமல், பீகார் வாக்காளர்கள், வருமான வரி வாக்காளர்கள், அவர்களுக்கு மட்டுமே சலுகை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு என்ன சலுகைகளை அறிவித்தார்கள். பட்ஜெட்டில் இல்லை என்ற பட்டியலை போட்டால், நீளமான பட்டியல் வரும். செய்யாததை, பட்டியல் போட்டால் அதுவும் நீளமாக வரும்.
இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
மக்களுக்கான பட்ஜெட் இல்லை:
பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, இது நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கிராமப்புறங்களில், ஊரகப்பகுதிகளில், ஒரு தனி நபர் மாதச் செலவு, நான்கு ஆயிரத்து 120 ரூபாய் என மத்திய அரசு எடுத்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படி என்றால், ஒரு தனி நபர் ஒருநாளைக்கு 130 ரூபாய் செலவழிக்கிறார். நகர்புறங்களில் 7 ஆயிரம் ரூபாய் மாதச் செலவு. அப்படியெனில், ஒரு நாளைக்கு 230 ரூபாய் செலவு செய்கிறார். 230 ரூபாய் செலவு செய்து எப்படி வீடு, உணவு, கல்வி, சுகாதாரம், மின்சாரம், மற்ற இதரச் செலவுகளை எப்படி செய்ய முடியும். இந்தியாவில் 50 சதவீதற்கும் அதிகமான மக்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் ஜி.எஸ்.டி. செலுத்துகிறார்கள். வருமான வரி கட்டுபவர்கள் மட்டுமே, வரி செலுத்கிறார்கள் என நினைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.யை ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என அனைவரும் செலுத்துகிறோம்.
எனவே ஜி.எஸ்.டி.யை குறைத்து இருந்தால், எல்லோருக்கும் பயன் கிடைத்து இருக்கும். நாட்டில் உள்ள எல்லோரும் பெட்ரோல், டீசல் போடுகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை காரணமாக தான் பேருந்து, வாடகை கார் உள்ளிட்டவைகளின் கட்டணம் கூடிக் கொண்டே செல்கிறது. எனவே எல்லோருக்கும் சலுகை கிடைக்க வேண்டுமானால், பெட்ரோல், டீசல் வரிச் சுமையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்டி.யை குறைத்து இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி இருக்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாள் கூலியை உயர்த்தி இருக்க வேண்டும். இவற்றை செய்து இருந்தால் பெரும்பாலான மக்களுக்கு சலுகை கிடைத்து இருக்கும்.
நடுத்தர மக்கள் என்றால் யார்? :
நடுத்தர மக்களுக்கு சில சலுகைகளை தந்து இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் என்றால் யார்? இந்தியாவில் நடுத்தர மக்கள் என எடுத்துக் கொண்டால் 30 சதவீதம் அளவுக்கு தான் இருப்பார்கள். மற்ற 70 சதவீதம் நடுத்தர மக்கள் கணக்கில் வர மாட்டார்கள். 30 சதவீதம் இருக்கும் நடுத்தர மக்களில் வருமான வரிச் செலுத்துபவர்களுக்கு மட்டுமே சலுகையை அறிவித்து இருக்கிறார்கள். அதாவது சுமார் 3 கோடி பேருக்கு மட்டுமே சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நடுத்தர மக்களுக்கு சலுகையை கிடையாது. நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சலுகை கொடுக்க வேண்டுமானால், ஜி.எஸ்.,டி.யை குறைத்துஇருக்க வேண்டும். கேன்சர் மையங்கள் அமைக்கப்படும் என்ற திட்டத்தை எந்த ஆண்டு நிறைவேற்றுவார்கள் என்ற தெளிவு இல்லை.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கப்படும் என்று சொன்னார்கள். விவசாயி கடன் வாங்கும் அளவு உயர்த்தி வசதி செய்யப்படும் என சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே விவசாயி கடன் சுமையை இருக்கிறார்கள். இன்னும் கடன் வாங்கினால் நிலைமை என்னவாகும். விவசாயப் பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. உரங்களின் விலை குறைப்பு குறித்து எதுவும் அறிவிப்பு இல்லை. பயிர் காப்பீடு குறித்த புதிய அறிவிப்பு எதுவும் இல்லை.
தமிழ்நாடு புறக்கணிப்பு:
பட்ஜெட்டில் பீகாரை 4 முறை குறிப்பிட்டதைப் போல மற்ற மாநிலங்களையும் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிப்பட்டு இருக்கின்றன. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் எதுவும் இல்லை. இது தமிழக மக்களுக்கு எமாற்றமே என்று கூறலாம்.
இதேபோன்று, புதிய வேலைவாய்ப்புகள், பணவீக்கம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள், பா.ஜ.க. அரசு இன்னும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது, நடத்திக் கொண்டு இருக்கிறது.
பட்ஜெட் தயாரிக்கும்போது வருமானத்தை கருத்தில் கொள்ள வேண்டும். செலவினங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலீடுகளை கருத்தில் கொள்ள வேண்டும். கடன் சுமையை கருத்தில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட் தயாரிக்க வேண்டும். ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட்டைப் பார்க்கும்போது, நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ தலைமைப் பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையைப் பொருட்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தனது பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் விவேகமான ஆலோசனையை வழங்கினார். "வழியை விட்டு வெளியேறு" என்பது அரசாங்கத்திற்கு அவர் விடுத்த அழைப்பு. மாறாக, பட்ஜெட் புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்களால் நிறைந்துள்ளது, அவற்றில் பல இந்த அரசாங்கத்தின் திறனுக்கு அப்பாற்பட்டவை. முடிவாக, பொருளாதாரம் மீண்டும் பழைய பாதையில் செல்லும், 2025-26 ஆம் நிதியாண்டில், வழக்கமான 6 அல்லது 6 புள்ளி 5 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக வளர்ச்சியை வழங்காது என்று பொருளாதார வல்லுநர்கள், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கூறியுள்ள விமர்சனக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
=====================
No comments:
Post a Comment