Sunday, February 9, 2025

ஒரு முஸ்லிம் டாக்டரின் மனிதநேய சேவை....!

"40 ஆண்டுகளாக பத்து ரூபாய் மட்டுமே கட்டணம் வசூல்"

- டாக்டர் எஜாஸ் அலியின் ஒரு மனிதநேய சேவை -

உலகம் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், மருத்துவத்துறையும், பல்வேறு நவீனங்களை தன்னுள் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவராக வேண்டும் என்ற கனவு பலருக்கு இருந்து வருகிறது. மருத்துவத் தொழில் தற்போது வணிகமாக மாறிவிட்டதால், மருத்துவராகி, மிகப்பெரிய அளவுக்கு வருமானம் ஈட்டலாம் என்ற ஆசை இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும், கார்பரேட் மருத்துவமனைகள் தற்போது உலகின் பல பகுதிகளில் உருவாகி, மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்துவருகின்றன. அத்துடன், நோயாளிகளிடம் சிகிச்சைக்காக மிகப்பெரிய தொகையும் வசூலிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மிகப்பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிவதை இளைஞர்கள் கவுரவமாக கருதுகிறார்கள். மேலும், நல்ல வருவாய் கூட  அவர்களுக்கு கிடைத்து வருகிறது. மருத்துவத் தொழில் ஒரு அற்புதமான சேவை செய்யும் வாய்ப்பாக கருதும் எண்ணம் தற்போது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே செல்கிறது. ஏழை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் நோய்க்கு ஆளானால், அவர்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைப் பெற முடிகிறது. அங்கு சரியான சிகிக்சை கிடைக்காவிட்டால், தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சைப் பெறும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு இருப்பதில்லை. இதன் காரணமாக அப்பாவி ஏழை மக்களின் வாழ்வு சீர்குலைந்து போய்விடுகிறது. 

மனிதநேய மருத்துவர்:

இத்தகைய சூழ்நிலை இருந்துவந்தாலும், மருத்துவம் என்பது ஒரு சேவை செய்யும் தொழில் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட நல்ல மருத்துவர்களும் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் விரிந்து பரந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் டாக்டர் எஜாஸ்  அலி. இவர் ஒரு மனிதநேயம் கொண்ட மருத்துவர் என்றே கூறலாம். மருத்துவக் கட்டணங்கள் பெரும்பாலும் லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் செல்லும் இந்த உலகில், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 40 ஆண்டுகளாக கட்டணம் எதையும் குறைக்காமல், மருத்துவம் பார்த்து வரும், டாக்டர் எஜாஸ் அலி, தன்னுடைய நிலைப்பாட்டில் இன்னும் மாறாமல் இருக்கிறார். ஏழைகளின் மருத்துவர் என்று அழைக்கப்படும் டாக்டர் எஜாஸ் அலி, தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ஆலோசனைகளுக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். இதனால் தரமான சுகாதாரப் பராமரிப்பு மிகவும் தேவைப்படுபவர்களும், ஏழை, நடுத்தர மக்களும் இவரை எளிதில் அணுகக்கூடியதாக இருந்து வருகிறது. 

நாட்டில் உள்ள பல மருத்துவமனைகள் லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், டாக்டர் எஜாஸ் அலி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார். அவரது மலிவு விலை அறுவை சிகிச்சைகள், குறைந்தபட்ச கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு நோயாளியையும் ஒரேநாளில் பார்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இதனால் நோயாளிகள் யாரும் பயணம் அல்லது தங்குமிடத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதில்லை. 

திருப்தி அடையும் எஜாஸ் அலி:

தம்முடைய இந்த குறைந்த கட்டண வசூல் குறித்து கருத்து கூறியுள்ள டாக்டர் எஜாஸ் அலி, "சமூகத்திற்கு இதுபோன்ற சேவை செய்வதன் மூலம்  நான் திருப்தி அடைகிறேன்," என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.  அவரது மறைந்த மனைவியும் அதே பாதையைப் பின்பற்றினார். இப்போது மருத்துவர்களாக இருக்கும் ​​அவரது மூன்று குழந்தைகளும்  தங்கள் தந்தையின் இரக்கத்தின் மரபை முன்னெடுத்துச் செல்கின்றனர். ஒரு மதிப்புமிக்க அமெரிக்க நிறுவனத்தில் பயிற்சி பெற்ற டாக்டரான அவரது மகன்  நூறு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். அதேநேரத்தில் அவரது மகள், மகளிர் மருத்துவ நிபுணர் ஐம்பது ரூபாய் வசூலிக்கிறார். பல சந்தர்ப்பங்களில், இந்தக் கட்டணங்கள் கூட தள்ளுபடி செய்யப்படுகின்றன அல்லது தவணைகளில் செலுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும், தனது எளிய குர்தா-பைஜாமாவில், ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, டாக்டர் அலி நூற்றுக்கும்  மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அத்துடன், ஏழு அல்லது எட்டு அறுவை சிகிச்சைகளைச் செய்கிறார். இதன்மூலம் மருத்துவம் என்பது சிகிச்சையைப் பற்றியது மட்டுமல்ல, மனிதநேயத்தைப் பற்றியது என்பதை டாக்டர் எஜாஸ் அலி நிரூபிக்கிறார்.

முஸ்லிம் அல்லாத நோயாளிகள்:

பீகாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மருத்துவரான எஜாஸ் அலியிடம்  சிகிச்சை பெற வரும் நோயாளிகளில் அதிகபட்ச நோயாளிகள், முஸ்லிம் அல்லாதவர்கள் தான் அதிகம் ஆவர்கள். இப்படி வரும் சகோதரச் சமுதாய மக்களிடம், பத்து ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணம் வசூலிப்பதன் மூலம் தனது மனிதநேயத்தையும், மதநல்லிணக்கத்தையும் டாக்டர் எஜாஸ் அலி, சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருகிறார். 

தற்போதைய நவீன யுகத்தில், சாதாரண சூழ்நிலைகளில் சுமார் ஐம்பது ஆயிரம் செலவாகும் அறுவை சிகிச்சைகளுக்கு, டாக்டர் எஜாய் அலி மற்றும் அவரது மூன்று மருத்துவப் பிள்ளைகளும், பத்து ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள். திமிர்பிடித்தவர்கள், முரட்டுத்தனமானவர்கள், சுயநலவாதிகள் மற்றும் பணம் பறிப்பவர்கள் போன்ற பெரும்பாலான மருத்துவர்களைப் போலல்லாமல், சேவையுடன் மனிதநேயம் கொண்டு மருத்துவம் பார்த்து வரும் டாக்டர் எஜாஸ் அலி, இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு ஒரு முன்மாதிரி மருத்துவராக இருக்கிறார் என்றே கூறலாம். இதுபோன்ற மருத்துவர்கள் தவறான சிந்தனையுடன் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு இளம் மருத்துவர்களும், எஜாஸ் அலியை முன்மாதிரியாக  எடுத்துக் கொண்டு, மருத்துவம் பார்க்க வேண்டும். மருத்துவத் தொழிலை வருவாய் ஈட்டும் தொழிலாக மட்டுமே கருதாமல், அழகிய முறையில் சேவை செய்ய வேண்டும். இதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் அன்பை பெற்று, அழகிய முறையில் எளிதாக சிகிச்சைப் பெற வாய்ப்பு உருவாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: