இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் அனைவரும் போர்க்களத்தில் இயங்குவதுபோன்று இனி செயல்பட வேண்டும்.....!
மதுரையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை....!!
மதுரை, பிப்.15- தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும், இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களை உருவாக்கி, கட்சியை மிகப்பெரிய வலிமையாக சக்தியாக மாற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் 14.02.2025 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் மதுரையில் உள்ள ஜெ.எஃப்.ஏ.லக்கி பேலஸ் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுயாற்றினார்.
அப்போது பேசிய அவர், மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுக்குழு கூட்டத்தை மிக நல்ல முறையில் ஏற்பாடு செய்த மாநில செயலாளர் அவ்தா காதர், மாவட்ட துணைத் தலைவர் பொறியாளர் ஜாகிர் ஹுசைன், எம்.எஸ்.எப். மாவட்ட அமைப்பாளர் ஷாருக்கான் மற்றும் மதுரை தெற்கு, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எமது பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுக்குழு மற்றும் தேசிய கவுன்சில்:
நாம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகளவு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இனி பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டிய இருநூறு ரூபாயை தலைமை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட 523 பேரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்கள் முறைப்படி உறுப்பினர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சேர்த்து 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். புதிய பொதுக்குழு கணக்கின்படி 67 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவற்றை இந்த மாத இறுதிக்குள் நாம் செய்தாக வேண்டும். தேசிய தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி 3 பேர் நியமிக்கப்படுவார்கள். ஆக மொத்தம் தமிழகத்தில் இருந்து 70 பேர் தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்படும் அனைவரும் 500 ரூபாயை கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர்கள்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்கள் இ.யூ.முஸ்லிம் லீக் தனது நிர்வாக பணிகளுக்காக 52 மாவட்டங்களாக பிரித்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் 12, 838 வார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் 36 மாவட்ட ஊராட்சிகள் இவற்றில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்து நானூற்றி ஐம்பத்து மூன்று (1, 60, 453) வார்டுகள் உள்ளன.
மேற்கண்ட அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் முஸ்லிம் லீகின் தலைமை அமைப்போ, அல்லது இணை அமைப்போ அல்லது சார்பு அமைப்போ உருவாக்கிட மாவட்ட முஸ்லிம் லீக்களும் மற்றும் சார்பு அமைப்பின் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த பணிகளை மார்ச் முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
போர்க்களத்தில் இயங்குவது போன்று:
இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் இதுவரை எப்படி செயல்பட்டார்கள் என்பது முக்கியம் அல்ல. இனி வரும் நாட்களில் போர்க்களத்தில் நின்று பணியாற்றுவதைப் போன்று மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நமது இயக்கம் வலிமை வாய்ந்த இயக்கமாக மாறும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்பி வைக்க முடியும். அத்துடன் நம்முடைய சமுதாயத்திற்கு மட்டுமல்லமால், சகோதர சமுயாத்திற்கும் செயல்படக் கூடிய நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்கும். எனவே அனைவரும் அதில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட உங்கள் அனைவரும் அழைக்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment