திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக மக்களிடையே எந்த பிரச்சினையும் கிடையாது.....!
தமிழகத்தில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்புகின்றன....!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி....!
மதுரை, பிப்.15-தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுன் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி வரும் நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி வருவதாக இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத் சென்டர்:
மதுரையில் இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம் 14.02.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் முழு விவரம் வருமாறு:
இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியில் மேற்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள், கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவறை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் கடந்த 1948ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தற்போது தலைநகர் டெல்லியில் புதிதாக தலைமை அலுவலகம் ஒன்றை கட்டிக் கொண்டு இருக்கிறோம். இதன் திறப்பு விழா ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். டெல்லியில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு காயிதே மில்லத் சென்டர் என பெயரிட்டுள்ளோம். இங்கு தற்போது பராமரத்துப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இங்கு தலைமை அலுவலகம் முழுவீச்சில் செயல்படும்.
இந்தியா முழுமைக்கான திராவிட மாடல்:
தமிழகத்தைப் பொறுத்தவரை, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு, ஒரு திராவிட மாடல் அரசாகும். இந்த திராவிட மாடல் அரசு தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வேண்டும். அதன்மூலம் அனைத்துச் சமுதாய மக்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நல்ல மாற்றங்கள், செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்கள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திராவிட மாடல் அரசுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தமிழகத்தில் அளித்து வருகிறது இதேபோன்று, மற்ற மாநிலங்களில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர்கள் நன்கு செயல்பட்டு, திராவிட மாடல் அரசு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் நிலவும் மத ஒற்றுமை, சமூக மேம்பாடு, மத நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் மற்ற மாநில மக்களும் புரிந்துகொள்ள வாயப்பு உருவாகும். இதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது பங்களிப்பையும், பணிகளையும் செய்யும்.
முக்கிய கோரிக்கைகள்:
இந்த மதுரை பொதுக்குழுவில். நாங்கள் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். குறிப்பாக தமிழக அரசுக்கு பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதேபோன்று, சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் சுற்றியுள்ள நிலப்பகுதியில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பெயரில் காயிதே மில்லத் அரபு தமிழ் ஒப்பாய்வு பல்கலைக்கழகம் உருவாக்கி தர வேண்டும். மேலும், இதே பகுதியில், உர்தூ ஆசிரியர் பயிற்சி கல்லூரியையும் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரோல் மிகவும் போற்றப்பட்ட இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் அவர்களின் நூற்றாண்டு விழா வரும் அக்டோபர் 4ஆம் வருவதால் அந்த விழாவை தமிழக அரசின் சார்பில் நடத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு 2025 :
தமிழகத்தை பொறுத்தவரை இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்சி நிதியாக 25 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஹல்லா ஜமாஅத்துகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டை தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு 2025 என்ற பெயரில் டிசம்பர் இறுதி வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கேரள மாநில தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி தங்ஙள், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி, தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வகாப் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா பி.ஏ.காஜா முயினுத்தீன் பாகவி, பொதுச் செயலாளர் மௌலானா டாக்டர் அன்வர் பாதுஷாஹ் உலவி, முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சதி:
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களும், ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் வழக்கம் போல தங்களுடைய வழிப்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 1800க்கும் மேற்பட்ட தர்காகள் உள்ளன. இந்த தர்காகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களும் சென்று வழிபாடு செய்கிறார்கள். காலம் காலமாக இருக்கும் வழக்கமான நடைமுறையின்படி, ஆடு, கோழி ஆகியவற்றை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார்கள். இதேபோன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிலும் அனைத்து சமுதாய மக்களும் சென்று வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தற்போது வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கையை எடுத்து, நீதிமன்றத்திலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் கூட, திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளியூர்களில் இருந்து வரும் சிலர் மட்டுமே பிரச்சினையை கிளப்புவதாகவும் கூறியுள்ளார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் தற்போது திருப்பரங்குன்றம் பகுதி அமைதியாக இருந்து வருகிறது.
இந்து-முஸ்லிம் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை யாரும் கெடுத்துவிடக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழகம் எப்போதும் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியாக, நிம்தியாக வாழ வேண்டும். இதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தனது ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வ சமய நல்லிணக்க மாமன்றம்:
தமிழகத்தில் குன்றக்குடி அடிகளார் அவர்கள், திருவருள் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டார்கள். அதன்மூலம் நல்ல பலன் கிடைத்தது. தற்போது மத அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வரும் நிலையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சர்வ சமய நல்லிணக்க மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக இ.யூ.முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பு 11 பேர் கொண்ட அமைப்பாக செயல்படும். மக்கள் மத்தியில் நல்ல புரிதலை உருவாக்கி, நல்லிணக்கத்தை ஏற்படும் வகையில் இந்த சர்வ சமய நல்லிணக்க மாமன்றம் தனது பணிகளை சிறப்பான முறையில் செய்யும்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்:
திமுகவிற்கும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கும் உள்ள தொடர்பு கொள்கை ரீதியான தொடர்பாகும். அரசியலுக்காக நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. கொள்கையின் அடிப்படையில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என திமுக சொல்கிறது. இதைத் தான் இ.யூ.முஸ்லிம் லீகும் காலம் காலமாக சொல்லிக் கொண்டே இருக்கிறது. எனவே, திமுக-இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பு என்பது கொள்கையின் அடிப்படையில் உள்ள தொடர்பாகும். தேர்தலில் நின்று சீட்டுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை.
இதை திமுக தலைமை நன்கு அறிந்து இருக்கிறது. அதன் காரணமாக தான் இ.யூ.முஸ்லிம் லீகுடன் திமுக தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்கிறது. திமுகவுடன் நாங்கள் முன்பும் இருந்தோம். இப்போதும் இருக்கிறோம். எப்போதும் இருப்போம். மற்ற கட்சிகள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து உங்கள் கேள்விக்கு என்னுடைய பதில் இதுதான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நன்மை செய்யலாம். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். பிற யூகமான கேள்விகளுக்கு தற்போது எந்த பதிலும் அளிக்க முடியாது.
ஒன்றிய அரசு பாரபட்சம்:
தமிழக அரசு திராவிட மாடல் ஆட்சியை மிகவும் சிறப்பாக அளித்துவரும் நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களையும், நிதியையும் முறையாக ஒதுக்குவதில்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. அரசு நடந்துகொள்கிறது. தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகமாக கொடுக்கிறது. நல்ல செய்யும் தமிழநாட்டை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆ ட்சிக்கு வந்து மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறது. இதனை இ.யூ.முஸ்லிம் லீக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியையும், நல்ல திட்டங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்துவரும் பணிகள் மேலும் சிறப்பாக செய்ய முடியும். நல்ல திட்டங்களை கொண்டுவந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகீதின் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி, மாநில துணைத் தலைவர் டாக்டர் தாவூத் பாஷா, மாநில துணைத் தலைவர் கே.டி.கிஸர் அகமது, மாநில செயலாளர்கள் காயல் மஹபூப், எச்.அப்துல் பாசித், வழக்கறிஞர் வி.ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், கே.எம்.நிஜாமுத்தீன், காதர் பாஷா (எ) அவுதா காதர், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஜபரூல்லாஹ், எஸ்.எ.இப்ராஹிம் மக்கீ, வி.எம்.பாருக், கே.ஏ.டபுள்யூ அப்துல் காதர் ஷெரீப், பி.எம்.அப்துல் ஜப்பார், ஏ.எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி, மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர், எம்.எஸ்.எஃப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்முது அர்ஷத் உட்பட முன்னணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment