Friday, January 31, 2025

ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்கள்!

"பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், வாழ்க்கைத் தரம் மேம்படும் 

என்ற நம்பிக்கையை இழந்த இந்தியர்கள்"

- ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்கள் -

ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மோடியின் ஆட்சியில், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து இருக்கிறதா? அனைத்துதரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்களா? விலைவாசிகள் கட்டுக்குள் உள்ளதா? வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா? நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்களா? இதுபோன்ற பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கவே செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மோடியின் ஆட்சியில் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்ற நம்பிக்கையை பெரும்பாலான இந்தியர்கள் இழந்துள்ளனர். 

ஆய்வு தரும் தகவல்கள்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி குறித்து சி-வோட்டர்  என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புக்காக இந்திய மாநிலங்களில் 5 ஆயிரத்து 269 பெரியவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வில், தேக்கநிலையில் உள்ள ஊதியங்கள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச்  செலவுகள் எதிர்கால வாய்ப்புகளை மறைப்பதால், அதிகமான இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம் குறித்து நம்பிக்கை இழந்து வருவதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.

பட்ஜெட்டுக்கு முந்தைய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 37 சதவீதத்துக்கும் அதிகமானோர், அடுத்த ஆண்டில் சாதாரண மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் மோசமடையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர். இது 2013க்குப் பிறகு மிக உயர்ந்த சதவீதமாகும் என்று ஆய்வு நிறுவனமான சி-வோட்டர்  வெளியிட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. 

அதிகரித்து வரும் பணவீக்கம்:

தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் மற்றும் கண்களில் நீர் வரவழைக்கக்கூடிய அளவிற்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கமானது இந்தியக் குடும்ப வரவு செலவு திட்டங்களின் சுமையை அதிகரித்து, அவர்களின் செலவழிக்கும் சக்தியைக் குறைத்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியா, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் மெதுவான வளர்ச்சியை இம்முறை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட முதல்  அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் பணவீக்க விகிதம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை "மிகவும் மோசமாக பாதகமாக" பாதித்துள்ளதாகக் கூறியுள்ளனர். 

தடுமாறும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், செலவழிக்கக்கூடிய வருமானத்தை உயர்த்தவும், ஒரு நெருக்கடியான நடுத்தர வர்க்கத்தை சமாதானப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் அதிகரித்தபோதும், கடந்த ஆண்டு மக்களின் தனிப்பட்ட வருமானம் அப்படியே இருந்ததாகவும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு அதிகரித்து வரும் செலவுகளை நிர்வகிப்பது கடினமாகிவிட்டதாகவும் ஆய்வு காட்டுகிறது.

உலக அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை அதன் பெரிய இளைஞர்களுக்கு வழக்கமான ஊதியம் பெற போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. கடந்த பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளில் செலவிட ஒன்றிய அரசு கிட்டத்தட்ட சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியது. ஆனால் விவரங்கள் குறித்த விவாதங்கள் இழுபறியாக இருப்பதால் அந்தத் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. 

தீர்க்கமான பார்வையுடன் செயல்பாடு:

மேலே குறிப்பிட்ட இந்த ஆய்வு முடிவுகள், மோடி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் வெகுவாக குறைத்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளாக உண்மையான வளர்ச்சியை நோக்கி தீர்க்கமான பார்வையுடன் ஒன்றிய பாஜக அரசு செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், தற்போது அது உண்மை என்றே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டில் வாழும் 120 கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர தீர்க்கமான பார்வையுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு இனி செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, தங்களுடைய வாழ்க்கை குறித்து நம்பிக்கை இழந்துவரும் மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். வழக்கம் போல வெற்று முழக்கங்கள் மூலம் மட்டுமே, செயல்பாடுகள் அமைந்தால், நாட்டு மக்கள் பெரும் துயரங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அத்தியாவசிப் பொருட்களின் குறைக்கவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், தீர்க்கமான பார்வையுடன் செயல்பாடுகள் அமைந்தால் நிச்சயம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என உறுதியாக கூறலாம்,.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: