தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்காவிற்கு செல்லும் மக்களுக்கு செய்துதர வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்வே சென்றோம்.....!
தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று அமைதியான முறையில் தீர்வு காண்பது எங்களது பொறுப்பு....!!
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கே.நவாஸ் கனி, எம்.பி. பேட்டி....!!!
மதுரை, ஜன.24-மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்காவிற்கு செல்லும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வசதிகளை செய்துகொடுத்து, தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் முழு விவரம் வருமாறு:
கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு:
மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்காவிற்கு செல்லக் கூடிய மக்களுக்கு ஆடு கோழி எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, மதுரை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்துவிட்டு, நேரடியாக மலையின் அடிவாரத்திற்குச் சென்று, என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்தற்காக நாங்கள் அங்கு சென்றோம். அங்கு சமைத்த உணவை எடுத்துச் செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆடு, கோழி எடுத்துச் செல்வதற்கு தற்காலிகமாக தடை இருக்கின்றது. அதை விசாரித்துவிட்டு அனுமதி தருவதாக அவர்கள் சொன்னார்கள்.
நான் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக் கூடிய ஒரு பழக்கத்தை தொடருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதையடுத்து ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதா என்பதை நாங்கள் அங்கே விசாரித்துவிட்டு, அனுமதியை கொடுப்போம் என்று அவர்கள் சொன்னார்கள்.
இதைத் தொடர்ந்து, நேற்று (23.01.2025) தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அங்கு சென்று விசாரித்து இருக்கிறார்கள். அந்த மலையில் எங்கு ஆடு அறுக்கப்பட்டது., மலையின் அடிவாரத்தில் இருந்து ஆடு, கோழி எடுத்துச் செல்லப்பட்டதா என்று விசாரித்து இருக்கிறார்கள். அந்த மலையில் அடிவாரத்தில் இருந்து ஆடு, கோழிகளை எடுத்துச் சென்று மலையின் தர்காவிற்கு கொடுத்து வருவது இன்னும் பழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த பகுதியில் இருக்கும் அனைவரும் அதையெல்லாம் அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறார்கள்.
பொய்யான குற்றச்சாட்டுகள்:
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வக்பு வாரியத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. எனவே பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி இருப்பதை நேற்றிரவு தான் பார்த்தேன். மதநல்லிணக்கத்தை நான் குலைத்துவிட்டதாகவும், எனவே என்னை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
நான் அண்ணாலையை கேட்கிறேன். அங்கு போய், மலையின் மேல் சென்று அமர்ந்து நான் பிரியாணி சாப்பிட்டதாக சொல்லும் அண்ணாமலை, அதை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவரா, மாநில பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகுவராக என்று கேட்கிறேன். நான் சிலரை அழைத்துக் கொண்டு சென்று, மலையின் மேல் பிரியாணி சாப்பிட்டதாக நிரூபித்தால், நான் பதவி விலக தயார். அவர் என்மீது சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுவாரா. உண்மைக்குப் புறம்பான தகவல்களை, பொய்களை தொடர்ந்து தமிழகத்தில் அண்ணாமலை சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஐ.பி.எஸ். படித்துவிட்டு பொய்களைதான் பேசிக் கொண்டு இருக்கிறார். இப்போது லண்டனுக்குச் சென்று படித்துவிட்டு, எப்படி கூடுதலாக, எல்லோரும் நம்பும் வகையில் பொய்களை சொல்லலாம் என்று சொல்லி வருகிறார்.
வக்பு வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள தர்கா:
ஒரு உணர்திறன் மிக்க பதற்றமான ஒரு விவகாரத்தில், ஒரு குற்றச்சாட்டை சொல்கிறோமே, சுமத்துகிறோமே அதில் உண்மை உள்ளதா என அவர் நினைக்கவில்லை. நவாஸ் கனி எம்.பி. மலையின் மேல் சென்றாரா என்பதை அவர் முதலில் நிரூபிப்பரா. நான் சென்றபோது, பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்து முன்னணியினர், ஆகியோரும் இருந்தார்கள். நான் மலையின் மேல் செல்லவே இல்லை. மலையின் கீழ்ப்பகுதிக்கு போய், மலைக்குச் சென்று தர்காவில் வழிப்பாடு செய்பவர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன. என்னென்ன தடைகள், சிரமங்கள் உள்ளன என்பதை பார்க்கச் தான் அங்கு சென்றேன். இராமநாதபுரம் எம்.பி. அங்கு ஏன் சென்றார். மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் எதற்கு போகிறார் என்று தேவையில்லாத கேள்விகளையெல்லாம் அவர் எழுப்பி இருக்கிறார்.
நான் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர், வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கிறோம். மலையின் மேல் இருக்கும் சிக்கந்தர் பாஷா தர்கா, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தர்காவிற்கு செல்லக் கூடியவர்களுக்கு என்ன வசதிகள் செய்ய வேண்டும், குறைப்பாடுகளை எந்த வகையில் நீக்க வேண்டும், தற்போது உள்ள கட்டுப்பாடுகள் குறித்து அரசிடம் சொல்லி நீக்க வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதற்காக அங்கு சென்றோம்.
பாரம்பரியம் மிக்க இ.யூ.முஸ்லிம் லீக்:
இந்த பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மத நல்லிணக்கத்திற்காக, மத ஒற்றுமைக்காக, தொடர்ந்து நாடு சுதந்ததிரம் பெற்றபிறகு, கடந்த 75 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் கட்சியாகும். அந்த வகையில் நாங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இ.யூ.முஸ்லிம் லீகின் வரலாறு தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். பா.ஜ.க.வின் வரலாறும் மக்களுக்கு தெரியும்.
இந்த சம்பவத்தில் பா.ஜ.கவின் அனைத்து தலைவர்களும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். மலையின் மேல் செல்வர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்களா, சைவம் சாப்பிடுகிறார்களா என்று இவர்கள் ஏன் கேட்கிறார்கள். ஒரு எம்.பி. பிரியாணி சாப்பிடலாமா என்று இவர்கள் என் கேட்கிறார்கள். மலைக்கு செல்பவர்கள் கோவில் வளாகத்திற்கு சென்று பிரியாணி சாப்பிடவில்லை. தர்கா வளாகத்தில் தான் சாப்பிடுகிறார்கள். மலையில் உள்ள தர்காவிற்கு ஆண்டாண்டு காலமாக சென்று ஆடு, கோழிகளை அறுத்து அங்கு சமைத்து சாப்பிடும் பழக்கம் மக்களிடம் இருந்து வருகிறது. அதைத் தான் சென்று பார்த்தோம். காவல்துறை என்னிடம் தற்போது ஆடு, கோழி அறுப்பதற்கு தடை உள்ளது. சமைத்த உணவுகளை கொண்டு சென்று சாப்பிட எந்தவித தடையில் இல்லை என்று சொன்னார்கள். எனவே சமைத்த உணவை கொண்டு சென்று சாப்பிட்டவர்கள் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டார்கள். எனவே சமைத்த உணவை கொண்டு சென்று சாப்பிட காவல்துறை தடை விதிக்கவில்லை என்று கூறி நான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தேன். இது காவல்துறை அனுமதிக்கக் கூடிய விஷயமாகும். காவல்துறை ஆடு, கோழிகளை எடுத்துச் சென்று அறுப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, ஆடு, கோழிகளை எடுத்துச் சென்று அறுத்து சமைத்து யாரும் சாப்பிடவில்லை. அசைவ உணவு கொண்டு செல்ல தடையில்லை. சமைக்கதான் கூடாது. ஆனால், ஏற்கனவே அங்கு சமைப்பதற்கு தடை இல்லாமல் இருந்தது.
குழப்பத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. தலைவர்கள்:
பா.ஜ.க. தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். பிரிவினையை ஏற்படுத்த வேண்டும். ஒரு மதநல்லிணக்கத்திற்காக இருக்கும் தர்காவில், மற்ற மததத்தைச் சேர்ந்தவர்களும் சென்று வழிப்பாடு செய்கிறார்களே, என்ற அந்த நல்ல நோக்கத்தை கெடுக்கும் வகையில் புதிதாக இப்போது, பிரச்சினையை உருவாக்குகிறார்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர மற்ற எந்த கட்சிகளும் வழிப்பாடு தொடர்பாக பிரச்சினையை எழுப்பவில்லை. ஆனால் பா.ஜ.கவினர் மதத்தை வைத்து அரசியல் செய்வதால் இதுபோன்று பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்கள்.
வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள தர்கா தொடர்பாக ஏதாவது பிரச்சினை வந்தால், நாங்கள் சென்று ஆய்வு செய்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். எனவே நாங்கள் சென்றோம். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பும் இவர்கள் தான் கைது செய்யப்பட வேண்டும். பொய்யான தகவல்களை பரப்பும் அண்ணாமலை எச்.ராஜா போன்றவர்கள் தான் கைது செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு நவாஸ் கனி எம்.பி. கூறினார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment