இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைமை அலுவலகத்தில் 76வது குடியரசுத் தின விழா கொண்டாட்டம்.....!
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி உரை....!!
இந்திய முஸ்லிம்கள், ஒரு கையில் திருக்குரனையும் மறுகையில் அரசியல் சாசனத்தையும் பிடித்துக் கொண்டு செயல்பட வேண்டும்...!!!
சென்னை, ஜன.27-இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், ஒருகையில் திருக்குர்ஆனையும், மறுகையில் நாட்டின் அரசியல் சாசனத்தையும் பிடித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 76வது குடியரசுத் தின விழாயையொட்டி நேற்று (26.1.2025)இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், நாட்டின் மூவர்ண கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்பு:
76வது குடியரசு தின விழாவில் இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் மௌலவி சுலைமான் மன்பஈ கிராத் ஓத, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய முஸ்லிம்கள் நாட்டின் விடுதலைக்காக செய்த தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தார். தற்போது, இந்திய முஸ்லிம்களை ஒரு கும்பல் ஒடுக்க நினைப்பதாக கூறிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்கள் செய்துகொண்டிருக்கும் பணிகள் ஏராளம் என்றும் முஸ்லிம்களின் இந்த பணிகளுக்கு வழிகாட்டும் இயக்கமாக இ.யூ.முஸ்லிம் லீக் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம் சமுதாயத்தை ஒடுக்க நினைக்கும் கும்பல்களின் சதிகளை முறியடிக்க நாம் அனைவரும் இந்த திருநாளில் உறுதி எடுத்துக் கொண்டு, மதநல்லிணத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்காகவும் முஸ்லிம் சமுதாயம் எல்லாமும் பெற்று வாழ உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, குடியரசு தினமான இன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு கிடைக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அபூபக்கர் வலியுறுத்தினார்.
நவாஸ் கனி எம்.பி. பேச்சு:
விழாவில் இ.யூ.முஸ்லிம் லீக் துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான கே.நவாஸ் கனி எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தாய்ச்சபை இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தை பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கியபோது, அவருக்கு துணையாக நின்றவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஆவார்கள். அரசியல் சாசனத்தை வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது உரிமைகளை யாரும் தடுக்க முடியாது. ஆனால், ஒருசிலர், வேண்டும் என்றே தற்போது பிரச்சினையை எழுப்பி வருகிறார்கள். இத்ததகைய பிரச்சினைகளுக்கு நாம் நல்ல முறையில் தீர்வு காண வேண்டும். அதன்மூலம் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
மஸ்ஜித், தர்கா பிரச்சினைகள் என்றால் அதற்கு தீர்வு காண வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா குறித்து பிரச்சினை எழுந்தபோது, அதற்கு தீர்வு காண நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். வக்பு வாரிய தலைவராக இருப்பதால், அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவை ஆய்வு செய்வது என்னுடைய கடமை. இராமநாதபுரம் எம்.பி. என்ற முறையில் தொகுதியில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறேன். இதன் காரணமாக இரண்டாவது முறையாக நான் அனைத்து தரப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்டேன். அங்குள்ள புகழ்பெற்ற கோவில் திருவிழாவில் அனைத்து பக்தர்களும் சிறந்த முறையில் வழிப்பாடு செய்ய வழிவகை செய்தேன். இதனால், சகோர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்களும் என்மீ து அளவுகடந்த பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் பிரச்சினை வந்தபோது, இராமநாதபுரம் தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு தந்தார்கள். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்காவிற்கு சென்று ஆய்வு செய்ததை வரவேற்றார்கள். இதன் காரணமாக தற்போது தர்கா பிரச்சினையில் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. நேற்றைய தினம் (25.1.25) திருப்பரங்குன்றம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஓன்றுகூடி, பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வர ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி எடுத்து இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல ஆண்டாண்டு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை, வழக்கம் போல செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதுதொடர்பாக நாளை (27.01.2025) அன்று மதுரை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையை சந்தித்து முறையிட இருப்பதாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். இதன்மூலம், பிரச்சினைக்கு ஒரு சுமூக முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
தாய்ச்சபை நமக்கு காட்டியுள்ள வழியின்படி நாம் செயல்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் ஆளாகக் கூடாது. அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை தர்கா பிரச்சினையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்பட்டு வருகிறோம். இதனால் குழப்ப வாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என நவாஸ் கனி எம்.பி. பேசினார். இதனைத் தொடர்ந்து கே.எம்.சி.சி. தேசிய பொதுச் செயலாளர் சம்சுத்தீன் உரையாற்றினார்.
தேசிய தலைவர் உரை:
விழாவில் நிறைவுரை ஆற்றிய இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய கொடியை ஏற்றிவைக்க வாய்ப்பு அளித்த மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் முதலில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து உரையாற்றி அவர், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது, தேசிய கொடி ஏற்றி, நாட்டின் ஒற்றுமைக்காக உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம் என்றார். கடந்த 25 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இந்த அலுவலகத்தில் நாம் தேசிய கொடியை ஏற்றி வருகிறோம். இந்த திருநாள், இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் கொண்டாடும் திருநாளாகும். நாம் எப்படி செயல்பட வேண்டும். எப்படி, பணியாற்ற வேண்டும் என்பதை நமக்கு சொல்லும் புத்தகம் தான் நமது இந்திய அரசியல் சாசனமாகும்.
அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள்:
கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில் கூடிய நமது தலைவர்கள், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த அரசியல் சாசனத்தில் 395 பிரிவுகள் இருக்கிறது. இந்த 395 பிரிவுகளின் முதல் பிரிவே, அதாவது முன்னுரை அரசியலமைப்பின் மூலத்தையும், இந்திய அரசியல் அமைப்பின் தன்மையையும், அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிது. நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோரத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கும் முகவுரை இது. சிந்தனை, வெளிபாடு, நம்பிக்கை, மற்றும் வழிப்பாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது. சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்குகிறது. அந்தஸ்து மற்றும் சமத்துவத்தை நோக்கமாக கொண்டுள்ளது. தனி மனிதனின் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்கிறது.
இந்திய முஸ்லிம்களின் உரிமைகள்:
டெல்லியில் நேற்று (25.1.25) தேசிய வாக்காளர் தினம் தேர்தல் ஆணையத்தால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டில் மொத்தம் 100 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த 100 வாக்காளர்களில், இந்தியாவில் உள்ள 25 கோடி முஸ்லிம்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களும் உண்டு. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி வாழ்ந்து வருகிறோம். உலகில் மொத்தம் 193 நாடுகள் இருக்கின்றன. இந்த 193 நாடுகளில் முஸ்லிம் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாடுகளில் 57 நாடுகள் முஸ்லிம் நாடுகள் ஆகும். மீதமுள்ள நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களாக இருந்து வருகிறார்கள். அதாவது, 72 நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களாக இருக்கிறார்கள். இந்த 72 நாடுகளில் அதிகமாக சிறுபான்மையின மக்களாக முஸ்லிம்கள் வாழ்வது இந்திய நாட்டில் தான். இந்தியாவில் மொத்தம் 25 கோடி முஸ்லிம்கள் உள்ளார்கள். இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒரு கையில் திருக்குர்ஆன், மறுகையில் அரசியல் சாசனம்:
உலக அளவில் இந்திய முஸ்லிம்கள், முஸ்லிம்களாக வாழ்ந்து, இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். இதேபோன்று, இந்தியாவில் ஒரு கையில் திருக்குர்ஆனையும் மறுகையில் அரசியல் சாசனத்தையும் பிடித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இப்படி செயல்பட இந்திய முஸ்லிம்கள் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தன்னுடைய பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் மீது ஒரு கும்பல் வேண்டும் என்றே, அவதூறுகளை பரப்பி வருகிறது. இந்திய முஸ்லிம்கள் அழிந்துபோய் விடுவார்கள். இஸ்லாம் காணாமல் போய் விடும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கியாமத் நாள் இருக்கும் வரையில் இஸ்லாம் இருக்கும். முஸ்லிம்கள் இருப்பார்கள். உலகில் மிகவும் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. அதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்திய முஸ்லிம்கள் ஒருகையில் திருக்குர்ஆனையும், மறுகையில் அரசியல் சாசனத்தையும் பிடித்துக் கொண்டு செயல்பட்டால், நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
முஸ்லிம்கள் செய்த தியாகங்கள்:
மணிச்சுடர் நாளிதழில் முஸ்லிம்கள் செய்த தியாகத்தை உரக்கச் சொல்வோம் என்று குடியாத்தம் கவிஞர் வி.எஸ்.முஹம்மது பஸ்லூல்லாஹ் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை 1941ல் உருவாக்கி தந்தவர் ஆபித் ஹஸன் சுப்ரானி, இன்குலாப் ஜிந்தாபாத் என்னும் சொல்லை உருவாக்கியவர் ஹஸரத் மொஹானி, சாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமரா எனும் தேசப்பற்று மிக்க தேசிய கீதப்பாடலை இயற்றியவர் முஸ்லிம் லீக் தலைவர் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்), மகாத்மா காந்தியின் பெயரில் கூறுப்படும் Quit India எனும் தலைப்பை தந்தவர் 1942ல் மும்பை மேயராக இருந்த யூசுப் மெஹர் அலி, நேதாஜியின் இராணுவ படைக்கு அன்றே ஒரு கோடி ரூபாய் வழங்கிய போராளி வள்ளல் ஹபீப் முஹம்மது, நேதாஜி அமைத்த படைக்கு ஆயிரம் ஏக்கர் நிலம், 10 ஆயிரம் சவரன் தங்கம் கொடுத்த வள்ளல் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஸா, இந்திய முதல் விடுதலை போரை தலைமை தாங்கி நடத்தியவர் மவ்லானா அஹ்மதுல்லாஹ் ஷாஹ், தனது இரண்டு மகன்களின் தலையை சுதந்திரத்திற்காக அர்பணித்த மன்னர் பகதூர் ஷாஹ், தேசத்திற்காக தன் உடலை உரமாக்கிய முஹம்மது கான் சாஹிப் எனும் மருதநாயகம், வ.உ.சி.க்கு கப்பல் வாங்கி கொடுத்து பல உதவிளை செய்த வள்ளல் பக்கீர் முஹம்மது சாஹிப், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் 5 ஆயிரம் கிலோ தங்கம் தனமாக தந்த வள்ளல், சுதந்திர போராட்ட நிதியாக மகாத்மா காந்திக்கு பிளாங்க் செக் கொடுத்த வள்ளல் திருச்சி ஜமால் முஹம்மது சாஹிப், வெள்ளையனே வெளியேறு என்னும் முழக்கத்தை முழ்ங்கியதால், 8 முறை சிறையில் அடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி யூசுப் மெஹரலி, காந்திஜியின் அழைப்பை ஏற்று கல்லூரி படிப்பை துறந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் இ.யூ.முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) இந்திய விடுதலை போரில் ஈடுபட்டு, உயிர் தியாகம் செய்ய 93 ஆயிரத்து 300 தியாகிகளில் முஸ்லிம்கள் 61 ஆயிரத்து 395 பேர் என டெல்லியில் உள்ள இந்தியா கேட் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், முஸ்லிம்களின் தேசப்பற்றையும், தியாகத்தையும் மறக்கடித்து இருட்டிப்பு செய்யப்படுகிறது என முஹம்மது பஸ்லூல்லாஹ் மிகவும் விரிகாக எழுதியுள்ளார்.
தேசப்பற்று குறித்து பாடம் வேண்டாம்:
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளித்துவரும் முஸ்லிம்களுக்கு யாரும் தேசப்பற்று குறித்து பாடம் கற்பிக்க வேண்டாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உண்மையான தேசப்பற்றுகொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஒருகையில் திருக்குர்ஆன், மறுகையில் அரசியல் சாசனம் பிடித்துக் கொண்டு செயல்படும் முஸ்லிம்களை அழிக்க சிலர் நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் அடங்கும் காலம் விரைவில் வரும். எனவே, இந்திய முஸ்லிம்கள் அனைவரும் எந்தவித அச்சமும் இல்லாமல், திருக்குர்ஆன் வழங்கிய வாழ்க்கை முறைப்படியும்,இந்திய அரசியல் சாசனம் சொல்லும் உரிமைகள் படியும் தொடர்ந்து செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
தலைவர் உரையை தொடர்ந்து விடுதலை போரில் முஸ்லிம்கள் செய்த தியாகம் தொடர்பாக மணிச்சுடர் நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு விவரத்தை மனப்பாடம் செய்த ஒப்பிக்கும் போட்டியை நடத்த முடிவு செய்ததாக மாநில கௌரவ ஆலோசகர் பி.அப்துல் காதர் தெரிவித்தார். இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிச 3 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாவது பரிசு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
விழாவின் இறுதியில் தலைமை நிலையச் செயலாளர் நிஜாமுத்தீன் நன்றி, கூற, இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் மௌலவி சுலைமான் மன்பஈ அவர்களின் துஆவுடன் விழா நிறைவுபெற்றது. 76வது குடியரசு தினவிழாவில் மாநில கௌரவ ஆலோசகர் பி.அப்துல் காதர், மாநில செயலாளர் அப்துல் காலிக், மாநில துணைச் செயலாளர் முன்னாள் எம்.சி., ஆப்பனூர் ஆர்.ஜபருல்லாஹ், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர், ஏ.எச். இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவர் சேட், மாவட்ட செயலாளர் கோதர் ஷா, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கமுதி ஷம்சுததீன், சென்னை தெற்கு மாவட்ட உறுப்பினர் பூவை எம்.எஸ்.முஸ்தபா, திருவள்ளுர் வடக்கு மாவட்ட தலைவர் எண்ணூர் இப்ராஹிம், செயலாளர் சிக்கந்தர், மகளிர் அணி தமிழ்நாடு அமைப்புக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஆயிஷா நிசா, ஏ.எம்.ஜெய்த்தூன், ஆயிஷா மாலிக், எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்மது அர்ஷத், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நூர் முஹம்மது, இ.யூ.முஸ்லிம் லீக் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சல்மான் முஹம்மது, அதன் மாநில செயலாளர் ஜாபர், கே.எம்.சி.சி. மாநில தலைவர் குஞ்சுமுன் ஹாஜி, கே.எம்.சி.சி. தமிழ்நாடு துணை பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம், எஸ்.டி.யூ. மாநில தலைவர் கானகத்து மீரான், எஸ்.டி.யு. சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.முஹம்மது ரபீ, மணிச்சுடர் ஊழியர் ஏ.பி.முஹம்மத் ஜலால், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment