உத்தரகாண்ட் அரசு கொண்டு வந்துள்ள பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது...!
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் பொதுசிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது...!!
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.!!!
சத்தியம் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு....!!!!
சென்னை, ஜன.29- உத்தரகாண்ட் அரசு ஜனவரி 27ஆம் தேதி அந்த மாநிலத்தில் நாட்டிலேயே முதல்முறையாக பொதுசிவில் சட்டம் அமல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? இதனால் பன்முகத்தன்மை கொண்டு இந்திய நாட்டில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? இந்த சட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்ப்பு ஏன்? பல்வேறு வினாக்களுடன் சத்தியம் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் கண்ணன் அவர்கள், கடந்த 27.01.2025 அன்று மாலை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் சிறப்பு நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த நேர்காணலை நடத்திய செய்தி ஆசிரியர் கண்ணன் மற்றும் சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றியுடன் அந்த நேர்காணலின் முழு விவரங்களை மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் தொகுத்துள்ளார். பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த நேர்காணலின் முழு விவரம் வருமாறு:
சரியான விளக்கம் இல்லை:
பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்முதலாக அமல்படுத்துவதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி தற்போது நாட்டில் எல்லோரும் கேட்கக் கூடிய கேள்விதான். உத்தரகாண்ட் முதலமைச்சர் அவர்கள், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்கள். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் நவம்பர் மாதம் வரும் என்று சொன்னார்கள். இப்போது ஜனவரி மாதத்தில் அமல்படுத்தி இருக்கிறார்கள். முதலில் பொதுசிவில் சட்டம் என்று அவர் சொல்வது எது என்பதற்கு அவர்கள் விளக்கம் தரவில்லை. பொதுவாக சிவில் சட்டம் என்று சொல்லி இருக்கிறார்களே தவிர, பொதுசிவில் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள். அந்த பொதுசிவில் சட்டம் என்று சொல்லிவிட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில்பெரும்பான்மையாக உள்ள மலைசாதி மக்களுக்கு அது பொருந்தாது என்று சொல்லி இருக்கிறார்கள். பட்டியல், பழங்குடியின மக்களுக்கும் பொருந்தாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்த மக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 40 சதவீதற்கும் மேலாக வருகிறார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம்:
சுதந்திரத்திற்கு முன்பு கோவாவில் பொதுசிவில் சட்டம் இருந்தது. இப்போது சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முதலாக உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் இந்த பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள். இந்த பொதுசிவில் சட்டம் பொதுவாக மதங்கள் அனைத்தையும் ஒன்று சேர்க்கக் கூடிய சட்டம் என்று சொல்லி, மத கருத்துகளை திணித்து இருக்கிறார்கள். முஸ்லிம்களை வெறுக்க என்ன காரணம் எனில், திருக்குர்ஆனில் உள்ள சட்டங்களுக்கு மாற்றமாக அவர்கள் சொல்கிறார்கள். திருக்குர்ஆனில் உள்ள சட்டங்கள் என்பது ஆயிரத்து 400 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் சட்டங்கள் ஆகும். அதை இந்தியாவில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உத்தரகாண்ட்டில் ஒரு சதவீதம் கூட இல்லாத முஸ்லிம்கள், பொதுசிவில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என சொன்னால் அது உத்தரகாண்ட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அது பொருந்தும். ஏன் என சொன்னால், ஒரு மாநிலத்தில் என்று சொல்விட்டு, மற்ற ஒரு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அங்கு சென்றால் என்ன செய்வார்கள். ஒரு மாநிலத்தில் மட்டும் பொதுசிவில் சட்டம் வருவது தவறான விஷயம்.
இந்தியா முழுவதும் ஒரே சிவில் சட்டம் தான் வரும் என்று சொன்னார்கள். பொதுவான சிவில் சட்டம் குறித்து நமது பிரதம்ர் சமீபத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், We Need Secular civil Code இதைத் தான் செங்கோட்டையில் பேசியபோது கூறினார். பொதுசிவில் சட்டம் என்று கூறவில்லை. இப்போது பொதுசிவில் சட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இது மதசார்பற்ற சிவில் சட்டமாக இல்லை. மேலும் 40 சதவீத மக்களுக்கு இது பொருந்தாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆக மிகவும் குழப்பமான ஒரு சட்டத்தை அறிவித்துவிட்டு இதை எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்று சொல்வது, ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாது. இது குழப்பத்தை ஏற்படுத்தும். கோவாவில் கொண்டு வரப்பட்ட பொதுசிவில் சட்டத்தில் பொதுவான அம்சங்கள் எதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஒரு மாதிரியான சட்டமும், இந்துக்களுக்கு வேறு மாதிரியான சட்டமும் அங்கு உண்டு. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எல்லோரும், பொதுவான சட்டம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது:
திருக்குர்ஆனில் மணவிலக்கு தொடர்பாக உள்ள சட்டங்கள் இவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக, இத்தா சட்டம். இத்தா என்பது கணவர் இறந்துவிட்டால், மனைவி மூன்று மாதங்கள் வரை யாரையும் மறுமணம் செய்ய முடியாது. காரணம், இறந்துவிட்ட கணவனால், கரு உருவாக்கி இருக்கிறதா என்பதை மூன்று மாதங்களில் கண்டுபிடிப்பார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் மறுமணம் குறித்து அந்த பெண் யோசிக்க வேண்டும். ஆனால், இவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், இத்தா இருக்க வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். இத்தா இல்லாமல் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
ஜப்பானில் ஒரு வழக்கு கூட வந்தது. ஒரே நேரத்தில் இத்தா காலத்தில் திருமணம் செய்துகொண்டு, இரண்டு விதமான குழந்தைகளை பெற்று, அதன்பிறகு ஜப்பான் நாட்டிலேயே அந்த சட்டத்தை மாற்றிய வரலாறு கூட உண்டு. கணவனை இழந்தபிறகு, அந்த பெண் கருவுற்று இருக்கிறளா என்று அறிந்தபிறகு தான், திருமணம் செய்துகொள்வதை யோசிக்க வேண்டும். ஆனால் இவர்கள் கொண்டு வந்த சட்டத்தில் இத்தா இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இது ஆயிரத்து 400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் கடைப்பிடித்து வரும் சட்டத்தை மாற்றுவது திருக்குர்ஆனையே மாற்றவது போலாகும். இதை மாற்றுவதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பொருந்தாதா சட்டங்களை தவிர்ப்பது சரியா என்ற உங்களில் கேள்வியில், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி ஒழிப்பு, குழந்தை திருமணம், ஆகியவற்றுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு நாட்டில் இருந்துகொண்டு தான் உள்ளது. அதை யாரும் குறை சொல்லவில்லை. இதுபோன்ற சிக்கல்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் முத்தலாக் என்பதே கிடையாது. அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு, அவர்களாக ஒரு சட்டத்தை கொண்டு வந்தால், அதை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். முத்தலாக் என்று பெயர் வைத்துக் கொண்டார்களே தவிர, முத்தலாக் என்ற முறையே கிடையாது. இஸ்லாமிய சட்டத்தில் அது இல்லை.
திருக்குர்ஆன் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு:
ஜீவனாம்சம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க பேராசிரியர், ஜீவனம்சம் வழக்கு வேறு. ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் சொல்லவில்லை. ஷாபானு வழக்கில் வந்த பிரச்சினை என்னவென்று சொன்னால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருக்குர்ஆனில் உள்ள சட்டம் பொருந்தாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திருக்குர்ஆனைக்கு புதிய விளக்கம் கொடுத்தார்கள். ஷாபானு வழக்கில் ஜீவனாம்சம் பிரச்சினை வரவில்லை. பராமரிப்பு செலவு குறித்து பிரச்சினை வரவில்லை. ஆனால், அவர்கள் (நீதிபதிகள்) திருக்குர்ஆனுக்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்தார்கள். இதன் காரணமாக தான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும், திருக்குர்ஆனில் உள்ள சட்டத்தை மாற்றுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். உச்சநீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறி போராட்டங்களை செய்தார்கள்.
ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருக்குர்ஆன் சட்டங்களை மாற்றுவதற்கான தீர்ப்பு என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை. ஷாபானுவிற்கு ஜீவனாம்சம் ஆகியவற்றை கொடுப்பதை யாரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் தான் உண்மை. பலருக்கு அடிப்படை உண்மைகள் விளங்குவதில்லை.
முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உண்டு:
பொதுசிவல் சட்டத்தை சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், இதுபோன்ற பல சமூகங்கள் எதிர்க்கவில்லை. இஸ்லாமியர்கள் எதிர்க்க என்ன காரணம் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்தியாவில் உள்ள இந்துக்கள், சிக்கியர்கள், பௌத்தர்கள், ஜெனர்கள், ஆகிய அனைவரும் சட்டப்படி இந்துக்கள் தான். இந்திய அரசியல் சாசனம் 25வது விதிகளின் படி, இந்தியாவில் இந்துக்கள் என்று சொல்லக் கூடிய சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெனர்கள் ஆகிய அனைவரும் இந்துக்கள் தான். இதில் வித்தியாசம் கிடையாது. இந்துக்கள் என ஒரு சட்டம் கொண்டு வந்ததால், அது சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தார்கள், ஜெனர்கள் என அனைவருக்கும் பொருந்தும். காரணம் இவர்களுக்கு தனித்தனி சட்டமே கிடையாது. ஆனால் முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உண்டு. ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக,. ஒரு அழகிய சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றி வருகிறார்கள்.
அகாலிதளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு பெரும் போராட்டமே நடத்தினார்கள்.. நாங்கள் ஒரு சட்டத்தை கொடுப்போம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். என போராட்டம் இன்றுவரை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனப்படி இந்துக்கள் என்றால் மேற்படி நாம் குறிப்பிட்ட அனைவருக்கும் பொருந்தும். சீக்கியர்கள் தலப்பா வைத்துக் கொள்வது அவர்களின் நடைமுறையாகும். அது சட்டத்தில் வராது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆண்கள் தாடி வைத்துக் கொள்கிறார்கள். அந்த காலத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் வைத்துக் கொள்வார்கள். ஆனால் இன்று அனைவரும் தாடி வைத்துக் கொள்கிறார்கள்.
முஸ்லிம்கள் பெண்களுக்கு பெரும் பாதிப்பு:
பொதுசிவில் சட்டம் குறித்த முழு விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இத்தா வேண்டாம்., ஆண்களுக்கும் பெண்களுக்கு சம உரிமை, என சொல்லி இருப்பதாக பத்திரிகையில் படித்தேன். இஸ்லாமிய மார்க்க ஷரீயத் சட்டப்படி, ஒரு பெண்ணுக்கு உள்ள உரிமைகள், சொத்தில் பாதி இல்லை. அதாவது ஒரு தந்தை இறந்துவிட்டால், அந்த தந்தையின் சொத்தை 12 பாகங்களாக பிரிக்க வேண்டும். அதில் எட்டு பாகங்கள் பெண்களுக்கு தான். நான்கு பாகங்கள் தான் ஆண்களுக்கு. இவர்கள் கொண்டு வந்துள்ள சட்டத்தால் பெண்கள் பாதிப்பு அடைவார்கள். இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு பெரிய பாகம் வரும். எனவே, இவர்கள் கொண்டு வந்துள்ள சட்டத்தை எந்த முஸ்லிம்பெண்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
திருமணம் செய்த ஒரு ஆண், உலகத்தில் உள்ள அத்தனையும் தனது மனைவிக்கு கொடுத்து இருந்தாதலும், அதை திருப்பி கேட்கும் உரிமை கணவனுக்கு இல்லை. இது இஸ்லாமிய சட்டமாகும். மனைவிக்கு நகை, நிலம், வீடு, மனைவிக்கு சொத்து, வாங்கி கொடுத்து இருப்பார்கள். ஆனால், அதை திருப்பி கேட்க முடியாது. உரிமை கொண்டாட கணவனுக்கு உரிமை கிடையாது. மீதமுள்ள சொத்தில் தான் பாகப்பிரிவினை. இஸ்லாமிய சட்டத்தின் நுணுக்களை தெரியாமல் ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்ளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் பறிக்கப்பட்டால், அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள அத்தனை உரிமைகளையும் இதுபோன்று பொதுசிவில் சட்டங்கள் மூலம் பறிக்க முயல முயற்சி செய்கிறார்கள். சொத்தில் சம உரிமை என ஒரு வரியில் சொன்னால், சரியில்லை. இஸ்லாமிய சட்டத்தில் பெண்ணுக்கு தான் அதிக உரிமை உள்ளது. அது நடைமுறையில் உள்ளது. அதை திடீரென எப்படி மாற்ற முடியும். நீங்கள் சட்டம் கொண்டு அதை நீங்களே சட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நடைமுறைக்கு வராது. முஸ்லிம்கள் மத்தியில் இந்த பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வராது. ஏற்க மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய ஷரியத் சட்டப்படி சென்றுக் கொண்டே இருப்பார்கள்.
நீதியுடன் நடக்க குர்ஆன் அறிவுறுத்தல்:
திருமண முறிவு, திருமண பதிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பேராசிரியர், திருமண பதிவு என்பது தமிழகத்தில் பதிவாளர் அலுவலகங்களில் செய்யப்படுகிறது. கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகங்களில் செய்து விடுவார்கள். திருமண பதிவு செய்ய பொது சேவை மையம் ஒன்று திறக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்க வேண்டிய நல்ல முறைதான். கோவாவில் போட்ட பொது சிவில் சட்டத்தில், ஒரு இந்து ஆண்டு 30 வயதிற்குள், முதல் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை, பிறக்க வழியில்லாமல் போனால், அந்த இந்து ஆண், இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளலாம் என உள்ளது.
இஸ்லாமிய மார்க்கம் குறித்து பலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நான்கு திருமணம் செய்துகொள்கிறார்கள். நான்கு திருமணம் செய்ய முடியாது. திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்றால், ஒரு மனைவியோடு நீங்கள் நீதியுடன் வாழ வேண்டும். மற்றொரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால், இரண்டு பேரையும் சமமாக நீதியுடன் நடத்த வேண்டும். ஆனால் நான்கு மனைவிகளுக்கு செய்ய முடியாது. எனவே ஒரு மனைவியுடன் இருப்பது தான் சிறந்தது. இப்படி தான் குர்ஆன் சொல்லியுள்ளது.
நீங்கள் கணக்கெடுப்பு எடுத்து பார்த்தால், ஒரு திருணத்திற்கு மேல் கல்யாணம் செய்துகொண்ட முஸ்லிம் ஆண்கள் எத்தனை பேர், முஸ்லிம் அல்லாத ஆண்கள் எத்தனை பேர். என்றால், அந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் குறைவாக இருப்பார்கள். மற்றவர்கள் கூறும் கருத்தில் உண்மை இல்லை.
மக்களின் நன்மைக்காக இல்லை:
பொதுசிவில் சட்டம் என்பதை, பொது மதச் சட்டம் என்று அவர்கள், மாற்றுகிறார்கள். பிரதமர் மதசார்பற்ற பொதுசிவில் சட்டம் என்று கூறினார். ஆனால், பொதுசிவில் சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள். பொதுசிவில் சட்டம் குறித்த ஆய்வு செய்ய 22வது சட்ட ஆணையம் நியமித்தார்கள். அந்த ஆணையத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால், பொதுசிவில் சட்டம் அவசியல்லை. என்றும், சாத்தியமில்லை என்றும், சொல்லி இருக்கிறார்கள். இதை மறைத்துவிட்டு இப்போது, பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதாக கூறுகிறார்கள். அப்படியெனில் சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் பா.ஜ.கவின். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஒரே காரணத்திற்காகவே இதை கொண்டு வந்து இருக்கிறார்கள். நாட்டு மக்களின் நன்மைக்காக கொண்டு வரப்படவில்லை. அதன் காரணமாக தான் பிரதமர் உட்பட பலர் பல்வேறு குழப்பங்களை செய்து இருக்கிறார்கள். அந்த குழப்பத்திற்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவம் வகையில் தான் பொதுசிவில் சட்டம் உள்ளது.
நாட்டில் குழப்பம் அதிகமாகும்:
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் பொதுசிவில் சட்டம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். உத்தரக்காண்ட்டில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் குறித்து நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போடப்படும். இ..யூ.முஸ்லிம் லீக் சார்பிடும் வழக்கு போடப்படும். இது இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட அடிப்படைக்கு முற்றிலும் மாறானது. நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, நாட்டின் பன்முகத்தன்மையை கெடுத்து விடும். இந்தியாவில் வாழும் 4 ஆயிரத்து 698 சமுகங்களுக்கு இடையில், வித்தியாசம் உண்டு, வாழும் முறையில் வேறுபாடு உண்டு. நம்பிக்கையில் வித்தியாசம் உண்டு, மத நம்பிக்கையில் வித்தியாசம் உண்டு, இவற்றையெல்லாம் ஒரே மாதிரியாக கொண்டு வர வேண்டும் என்றால் இந்தியாவின் பெருமை சீர்குலைந்துவிடும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அழகாகும். அதுதான் நாட்டின் பெருமையாகும். அந்த பெருமையை கெடுக்கக்கூடிய அளவுக்கு உத்தரகாண்ட் அரசின் திட்டம் அமைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களில் அமல்படுத்த வாய்ப்பபே இல்லை. அப்படி செய்தால் நாட்டில் குழப்பங்கள் அதிகமாகும். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================
No comments:
Post a Comment