Friday, January 3, 2025

முன்னோடி முயற்சியில்.....!

"திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முன்னோடி முயற்சியில் ஈடுபட்ட அல்லாமா ஆ.கா.அப்துல்  ஹமீது பாகவி (ரஹ்)"

தி இந்து ஆங்கில நாளிதழில் 03.01.2025 வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமிய பெண் எழுத்தாளர் நஹ்லா நைனார் அவர்கள் "A pioneering effort to translate the holy book of Islam into Tamil in full" என்ற தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கட்டுரையில், அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள், ஏக இறைவனின் திருவாக்கான திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்க்க மேற்கொண்ட முயற்சிகள், சந்தித்த சவால்கள் மற்றும் பணிகள் குறித்து பல அரிய சுவையான தகவல்களை, எழுத்தாளர் நஹ்லா நைனார் அவர்கள் எழுதியுள்ளார். 

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பணியில், தனது தந்தையான அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களுக்கு,  மணிச்சுடர் நாளிதழின் நிறுவனர் மர்ஹும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் ஸமது சாஹிப் அவர்கள்  எந்தளவுக்கு உதவியாக இருந்தார் என்பதை இஸ்லாமிய சமுதாயம் நன்கு அறிந்து ஒன்றாகும். தற்போது மணிச்சுடர் நாளிதழ் 40வது ஆண்டில்  பயணம் செய்துகொண்டிருக்கும் நிலையில், 40வது ஆண்டு சிறப்பு மலர்  மற்றும், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது சாஹிப் அவர்களின் நூற்றாண்டு சிறப்பு மலர் இணைந்து விரைவில் வெளியிடப்படுகிறது. இந்த நல்ல தருணத்தில், இந்து ஆங்கில நாளிதழில், இஸ்லாமிய பெண் எழுத்தாளர் நஹ்லா நைனார் அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை, மணிச்சுடர் வாசகர்களுக்கு தமிழில் மொழிபெயர்த்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆ.கா.அப்துல் ஹமீது பாகவியின் (ரஹ்) பயணம்:

இஸ்லாத்தின் புனித நூலான திருக்குர்ஆனை முழுமையாக தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முன்னோடி முயற்சிக்கான ஒரு பயணத்தை கடந்த பிப்ரவரி 19, 1926 அன்று, ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) தொடங்கினார்.  அந்த பயணத்தை நிறைவு செய்ய, அவருக்கு இரண்டு தசாப்தங்களுக்கு (20 ஆண்டுகள்) மேல் எடுத்தது. கிளாசிக்கல் அரபு மொழியில் எழுதப்பட்டு 114 அத்தியாயங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குர்ஆனை, தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய அவருக்கு  அதிக நேரம் எடுத்தது உண்மைதான். ஆனால், மொழிபெயர்ப்புக்கு நீண்ட காலம் எடுத்தாலும், கடந்த 1949இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு, அந்த மொழிபெயர்ப்பின் நேர்த்தியான பாணி, அதை மிகவும் நீடித்த பதிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

கடந்த பிப்ரவரி 19, 1926 அன்று தமிழ் இஸ்லாமிய அறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) (1876-1955) ஒரு அற்புதமான இலக்கியப் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பயணத்தை நிறைவு செய்ய அவருக்கு இரண்டு தசாப்தங்களுக்கு (20 ஆண்டுகள்) மேல் எடுத்தது. இந்த பயணத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருள்: குர்ஆனின் அர்த்தத்தை அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதாகும். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்தவர்களில் அப்துல் ஹமீது மட்டுமே ஒருவர் அல்ல. மேலும், தமிழ் மொழிபெயர்ப்புக்கு கடைசியாக முயற்சித்தவரும் அவர் மட்டுமல்ல. ஆனால் கடந்த 1949 இல் தர்ஜுமத்-உல்-குர்ஆன் பை அல்தாஃப்-இல்பயான் (குர்ஆனின் மொழிபெயர்ப்பு ஒரு புகழ்பெற்ற விளக்கத்துடன்) என வெளியிடப்பட்ட அவரது முயற்சி, இஸ்லாமிய புனித நூலின் முதல் முழுமையான தமிழாக்கம் ஆகும்.

அச்சம் காரணமாக தாமதம்:

கிளாசிக்கல் அரபு மொழியில் எழுதப்பட்ட குர்ஆன், 23 ஆண்டுகளுக்கும் மேலாக இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு,  வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம், ஏக இறைவனால், அருளப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. திருக்குர்ஆன், சூரா எனப்படும் 114 அத்தியாயங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இருந்தபோதிலும், திருக்குர்ஆன்  தமிழில் நீண்ட காலத்திற்குப் பிறகே மொழிபெயர்க்கப்பட்டது. அதாவது, தென்னிந்தியாவிற்கு இஸ்லாம் வந்து குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் உலமாக்கள் அல்லது அறிஞர்களின் எதிர்ப்பு மற்றும் அச்சமே காரணமாக இருந்தது. ஒரு தமிழ் பதிப்பு அசலுக்கு மாற்றாக தவறாக கருதப்படலாம் என்ற அச்சமும், பயமும் உலமாக்கள் மத்தியில் இருந்தது. எனவே தான் திருக்குர்ஆனை மொழிபெயர்ப்பு செய்ய யாரும் முயற்சி எடுக்கவில்லை. ஆனால், அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களின் முயற்சிக்குப் பிறகு, பிற்காலத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் நுழைந்தவர்கள் உலமாக்கள்தான் என்பது வரலாற்று உண்மையாகும். 

கலப்பு மொழி:

17 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஆரம்பகால மொழிபெயர்ப்புகள், அரபு-தமிழில் ஒரு கலப்பின மொழியில் செய்யப்பட்டன. அதாவது தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை கையாளப்பட்டது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில், அறிஞர்கள், துண்டு துண்டான தமிழ் மொழிபெயர்ப்புகளை (தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்கள் அல்லது வசனங்கள்) செய்ய முயற்சிக்கத் தொடங்கினர்.

குர்ஆனை மொழிபெயர்க்க அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் மேற்கொண்ட முயற்சி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிடத்தக்க முயற்சியாக இருந்தது. ஏனெனில், பாகவியின் இந்த முயற்சி, திருக்குர்ஆன் படிப்பதை பாமர மற்றும் புலமை வாய்ந்த மக்களும் அணுகக்கூடியதாக மாற்றியது. இதன் காரணமாக தான், பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு எண்ணற்ற முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு வந்தபிறகு, மற்ற அறிஞர்களால், குறைந்தது 17 முழுமையான திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. 17 தமிழ் மொழிபெயர்ப்புகள் இருந்தபோதிலும், அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்) அவர்கள் கையாண்ட எழுத்து நடை மிகவும் எளிமையாக இருந்த காரணத்தினால், வாசகர்களை கவர்ந்து, எண்ணற்ற முறை மறுபதிப்பு செய்யப்பட்டது. 

மதரஸா அல் பாகியாத்துஸ் ஸாலிஹாத்:

புகழ்பெற்ற ஜாமிஆ அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் அல்லது பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி மதரஸாவில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டம் தான் பாகவியாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், வேலூரில் கடந்த 1857இல் நிறுவப்பட்ட அல் பாகியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸா,  இஸ்லாமிய மதரஸாக்களில் மிகவும் புகழ்பெற்ற மதரஸாவாகும்.  சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்த, அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்)  அவர்கள், இளமைப் பருவத்தில் இருந்தே, இஸ்லாமிய கல்வியில் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வந்தார். அதன் காரணமாக இஸ்லாமிய சிந்தனைகளை அடிக்கடி எழுதுவதில் அவர் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி மதரஸாவில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்ற அவர், பாகவி பட்டத்தைப் பெற்று தனது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தார். 

 ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர்களின் ஆர்வம்:

அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்)  அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிக்கு திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியை நிறுவிய நிறுவனர்கள் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவுக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளை செய்ததுடன், அதன் முதல் பாகம் வெளியாக தேவையான நிதியுதவிகளையும் செய்தனர். அதன் முதல் பாகத்தின் முதல் பிரதி தற்போதும், கல்லூரியின் இஸ்லாமிய தமிழ் கலாச்சார ஆராய்ச்சி மையத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு திட்டப் பணிகளை  கடந்த 1926ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, திருச்சியில் இருந்த ஜனாப் கான் சாஹிப் மற்றும் என்.எம்.காஜா மியான் ராவுத்தரின் பங்களாவில் தாம் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்) அவர்கள், அந்த பணிகள் திருச்சியில் மூன்று ஆண்டு காலம் நீடித்ததாகவும் கடந்த 1929ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பாகத்திற்காக எழுதிய தனது முன்னுரையில், நன்றியுடன் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகம் வெளியிட தமக்கு மூன்று ஆண்டுகாலம் பிடித்த நிலையில், மீதமுள்ள 29 பாகங்களை மொழிபெயர்ப்பு செய்து முடிக்க அதிக காலம் ஆகும் என்றும் அதற்காக வாசகர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் எம்.ஜெ.ஜமால் முஹம்மது அவர்களின் ஆணையின் பேரில்,  வெளிநாட்டில் இருந்து அச்சு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பின்னர் திருச்சி பாலக்கரையில் இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம் என்ற பெயரில் ஒரு பிரசுரச் சங்கம் தொடங்கப்பட்டு, அந்த சங்கத்தின் மூலம் அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்) அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆனின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. அந்த காலத்தில் இந்த முதல் பாகத்தின் விலை இரண்டு ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

பல தசாப்தங்களாக (ஆண்டுகள்) பணி:

மிகுந்த ஆரவாரத்துடன் திருச்சியில் தொடங்கிய மொழிபெயர்ப்புப் பணி, 1929க்குப் பிறகு ஏன் முடங்கியது என்பது புதிராகவே உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திருநெல்வேலி சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவரும்,  திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகளில் 12 மொழிபெயர்ப்புகளை  தனது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் ஏ.நியமத்துல்லாஹ் அவர்கள், "பொது களத்தில் ஆவணங்கள் இல்லாதது  காரணமாக மொழிபெயர்ப்புப் பணி, பார்வையற்ற இடத்திற்கு கொண்டுச் சேர்த்தது" என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 1938ஆம் ஆண்டு, அப்துல் காதர் அஸரத் அவர்கள், மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்)  அவர்களை, ஹைதராபாத் நிசாமின் மாமனார் நவாப் நசீர் யார் ஜங்க் பகதூர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புப் பணி குறித்தும், அப்துல் காதர் அஸரத் அவர்கள், நவாப்பிடம் அழகிய முறையில் எடுத்துக் கூறினார்.   இதைத் தொடர்ந்து, திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பணி, ஹைதராபாத் நிசாமின் ஆதரவுடன், உரிய நிதி பங்களிப்புடன் மீண்டும் தொடங்கியது என பேராசிரியர் நியமத்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

ஹைதராபாத் நிசாமின் உதவியுடன் மீண்டும் பணி தொடங்கியபோது கரைக்காலில், அதற்காக தனியாக ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் இருந்து , அப்துல் ஹமீது பாகவி  (ரஹ்)  அவர்கள் தனது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணிகளை தொடர்ந்தார். இப்படி, தொடர்ந்த பணி இறுதியில் 1942ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. பணி நிறைவுபெற்றபோதும்,, உலமாப் பெருமக்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று நினைத்த அப்துல் ஹமீது பாகவி அவர்கள், வேலூர் மதரஸா அல் பாகியாத்துஸ் ஸாலிஹாத்தை அணுகி, மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதியை சரிபார்க்க இறையியலாளர்கள் குழுவை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

மொழிபெயர்ப்புப் பணியில் மகன் அப்துஸ் ஸமது உதவி:

இப்படி திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை கொண்டு வர அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருந்த நிலையில், அவரது மகனும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தலைவராகவும், மிகச் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், மணிச்சுடர் நாளிதழை நிறுவி, அதை சிறப்பாக நடத்தியவருமான, மர்ஹும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்கள், தனது தந்தை அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களுக்கு உதவியாக இருந்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பணிகளை விரைந்து முடிக்க தேவையான அனைத்துப் பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். எனினும் முழுமையான மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று அச்சகத்திற்கு செல்ல  மேலும் ஐந்து ஆண்டுகள் பிடித்தன.  இலங்கையைப் பூர்விகமாக கொண்ட, நாகூரைச் சேர்ந்த பிரபல வணிகர் நாகூர் மீரா முஹம்மது ஹனீபா அவர்கள், தனது பங்களிப்பாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கி, தமிழ் மொழிபெயர்ப்பை கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்தார்.  இதன் காரணமாக 1949ஆம் ஆண்டு, இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, அச்சகப் பணிக்கு குழு காரைக்காலில் இருந்து சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.  

அப்துல் ஹமீது பாகவியின் (ரஹ்) பணிக்கு புகழாரம்:


மௌலானா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)  அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்புப் பணி குறித்து கருத்து கூறியுள்ள, புகழ்பெற்ற ஜெர்மன் அறிஞரும், ஹெய்சன்பெர்க் ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உறுப்பினரும், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையின் விரிவுரையாளருமான டார்ஸ்டன் ஷாச்சர் (Torsten Tschacher) "அப்துல் ஹமீது பாகவியின் மொழிபெயர்ப்புக்காகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த பணிக்காகவும், சமுதாயம் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறது" என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

"திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது, மொழிபெயர்ப்பில் எந்தவித குறுக்கீடு வாதங்கள் தோன்றாத வகையில் செய்யப்பட்டு இருப்பது தனிச் சிறப்பாகும். உண்மையில் அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள், அதிக வர்ணனைகள் கொடுப்பதை தவிர்த்தார். இது மொழிபெயர்ப்புச் செய்வதற்கு அவருக்கு உதவி இருக்கலாம்" என்றும் ஜெர்மன் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் கருத்து கூறியுள்ள அவர், "மொழிபெயர்ப்பு நடை கொஞ்சம் வித்தியாசமாகவும், பழைய பாணியாக தோன்றினாலும், என்னைப் பொறுத்தவரை மொழியின் சரியான அம்சங்களை மொழிபெயர்ப்பிற்கும் தரத்திற்கும் இடையே அவர் (பாகவி) சரியான முறையில் கையாண்டார் என்றே நினைக்கிறேன். முந்தைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் அரேபிய ஸ்கிரிப்ட் மற்றும் நிறைய அரேபிய சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டு இருந்தன. இதனால், முந்தைய மொழிபெயர்ப்புகளைப் படிக்க முடியாத நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருந்து வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மௌலானா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)  அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, குர்ஆனை சிறந்த முறையில் அணுகக்கூடியதாக இருந்தது. ஏனெனில் இது முக்கியமானது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது" என்று ஜெர்மன் அறிஞர், ஹெய்சன்பெர்க் பாராட்டியுள்ளார். 

- நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: