Sunday, January 5, 2025

பேட்டி....!

தி.மு.க.வுடன் கொள்கை ரீதியான கூட்டணி இனியும் தொடரும்...!

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட வேண்டும்....!!

இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய தலைமை அலுவலகம் வரும் பிப்ரவரி முதல் தலைநகர் டெல்லியில் செயல்படும்...!!!

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு....!!!!

லால்பேட்டை, ஜன.06- கொள்கை ரீதியாக தி.மு.க.வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வைத்திருக்கும் கூட்டணி இனியும் தொடரும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள லால்பேட்டையில் வரும் 11ஆம் தேதி கடலூர் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் மற்றும் பணிகளை ஞாயிற்றுகிழமையன்று (05.01.2025) நேரில் பார்வையிட்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

மாவட்ட மாநாடு:

அப்போது, ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமையன்று, லால்பேட்டையில் நடைபெறும் கடலூர் மாவட்ட மாநாட்டில், தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் காட்டுமான்னர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சிந்தனைச் செல்வன், இ.யூ.முஸ்லிம் லீகின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். 

டெல்லியில் புதிய தலைமை அலுவலகம்:

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தற்போது இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய தலைமை அலுவலகம் சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வரும் பிப்ரவரி மாதம் முதல் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு புதிய தலைமை அலுவலகம் செயல்படும் என்றார். 

திமுகவுடன் வலுவான கூட்டணி:

தமிழ்நாட்டில், திமுகவுடன் இ.யூ.முஸ்லிம் லீக் கொள்கையின் அடிப்படையில் கொள்கை ரீதியாக வலுவான கூட்டணியை வைத்து இருக்கிறது. இந்த கூட்டணி இனி வரும் காலங்களிலும் தொடரும். திமுகவுடன் இ.யூ.முஸ்லிம் லீக் வைத்திருக்கும் கூட்டணி, அரசியல் ரீதியான கூட்டணி மட்டுமல்ல, அது கொள்கை ரீதியாக கூட்டணியாகும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்ற பதவிக்காக நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. அதுகுறித்து திமுகவுடன் எந்தவித கோரிக்கையையும் நாங்கள் வைக்கவில்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை, திமுக மிக சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. இந்த திராவிட மாடல் அரசு இனியும் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து திமுகவிற்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது. 

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையில், திமுக. மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் இணைந்து செயல்படுகிறது. இதன்மூலம் அனைத்து சமுதாய மக்களிடமும் அமைதி, அன்பு தழைக்க வேண்டும். ஏக இறைவனின் திருவாக்கான திருக்குர்ஆன் கூட இந்த உயர்ந்த கொள்கையை தான் போதிக்கிறது. இத்தகைய உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை திமுக தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது. எனவே தான் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியான அடிப்படையில் நாங்கள் திமுகவோடு கூட்டணி வைத்து இருக்கிறோம். இத்தகை உயர்ந்த இலட்சியத்துடன் கூடிய இந்த கூட்டணி இனியும் தொடரும்.   இதேபோன்று, கேரளாவில் தற்போது உள்ள கூட்டணி தொடரும். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும். 

ஆளுநருக்கு அறிவுரை:

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பேராசிரியர், இது மிகவும் வேதனையான மற்றும் விரும்பதகாத சம்பவம் என குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை சரியாக அறியாமலும், புரியாமலும் இருப்பதாக விமர்சனம் செய்த அவர், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு அளித்து ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  அனைத்து நடிகர்களும் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் போன்று, அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார். 

செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட தலைவர் ஜெக்கரியா, செயலாளர் சுக்கூர், பொருளாளர் சகாபுதீன், கௌரவ ஆலோசகர் மருத்துவர் அப்துல் சமது, நகரத் தலைவர்கள் வாஜிது (லால்பேட்டை) சகாபுதீன் (ஆயங்குடி) மற்றும் ஜாபர் அலிஉள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: