Tuesday, January 21, 2025

பேட்டி.....!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை  தர்காவில் ஆண்டாண்ட காலமாக  ஒற்றுமையோடு செய்துவந்த வழிபாட்டு முறைகளை தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை தமிழ்நாடு வக்பு வாரியம் எடுக்கும்.,.!

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி எம்.பி. பேட்டி....!

மதுரை, ஜன.22- மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளதால் இந்த மலை சிக்கந்தர் மலை என்று தான் காலாகாலமாக அழைக்கப்படுகிறது.  இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் மலை  மேல் உள்ள தர்காவில் ஆடு கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது. விழா நடத்துவது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (21.01.2025) திருப்பரங்குன்றம் சென்ற தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி, மலை மேல் உள்ள தர்காவிற்கு செல்லும் பாதையை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மலை மீது உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான தடை குறித்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரனிடம், உணவு எடுத்து செல்வதற்கான தடை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல் ஆய்வாளர் மாவட்ட நிர்வாகம் தான் தங்களுக்கு இந்த அறிவிப்பை கொடுத்துள்ளதாகவும் அதற்கு மேல் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். இந்த ஆய்வுக்குப் பிறகு, நவாஸ் கனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சிக்கந்தர் மலை தர்கா:

திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளது. இந்த தர்கா இருப்பதால், இந்த மலை சிக்கந்தர் மலை என்று தான் காலாகாலமாக அழைக்கப்படுகிறது. இந்த மலையில் உள்ள தர்காவிற்குப் பின்புறம் காசி விஸ்வநாதர் ஆலயமும் இருக்கிறது.  இந்த தர்காவிற்கு இஸ்லாமியர் மட்டுமல்ல, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சென்று வழிபட்டு வருகிறார்கள். அவர்களுடைய நேத்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆடு, கோழிகள் கொண்டு போய் அறுத்து உணவு சமைத்து  அந்த உணவை மற்றவர்களுக்கும் வழங்கி சாப்பிட்டு வருவது,  ஆண்டாண்டு காலமாக பழக்கத்தில் இருக்கிறது. நடைமுறையில் இருந்து வருகிறது.  தற்போது அங்கே செல்லக் கூடியவர்கள், உணவு மற்றும்  உணவுப் பொருள்கள், ஆடு, கோழிகளை எடுத்துக் கொண்டு சென்று, அங்கு பலியிடுவதற்கும்,  தற்காலிகமாக தடை விதிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

கட்டுப்பாடுகள் தேவையில்லை:

இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை, ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இது சம்பந்தமாக மதுரை மாவட்ட நிர்வாகத்தை, மாவட்ட ஆட்சியரிடமும், பேசி இருக்கிறோம். ஆண்டாண்டு காலமாக இங்கே எப்படி வழிமுறை பின்பற்றி வந்தார்களோ, ஒரு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இங்கே தர்காவும் இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயமும் இருக்கிறது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய இந்த நிலையில், இப்போது, காவல்துறை இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை இல்லை. எதற்காக இப்படியொரு கட்டுப்பாடுகளை விதித்து வரக்கூடியவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்த வேண்டும். 

முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்:

சிரமமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உடனடியாக பேசி, தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த விவகாரத்தில் ஆண்டு ஆண்டு காலமாக எப்படி, ஒற்றுமையோடு ஒரு வழிபாட்டு முறைகளை செய்து வருகிறார்களோ, அந்த முறை தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பாக எடுப்போம்.

வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள தர்கா:

இங்கே உள்ள தர்காவும், பள்ளியும் உள்ளது இந்த பள்ளியும் தர்காவும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த தர்காவின் பள்ளிவாசல்தான் இங்கு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இங்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இங்கு அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவர்கள். எனவே அனைவரும் ஒற்றுமையுடன் வழிபடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம். அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இங்கே இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து செய்வோம். இதுதொடர்பாக தொடக்க காலத்தில் இருந்தே, ஐக்கிய ஜமாத் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து இருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் மதநல்லிணத்துடன் வழிப்பாடு செய்ய ஒத்துழைத்து இருக்கிறார்கள். 

நல்ல முடிவு கிடைக்கும்:

எனவே நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். அதன்மூலம் அனைவரும் ஒற்றுமையுடன் வழிப்பாடு செய்ய வாய்ப்பு உருவாகும். மேலும் பேசிய அவர், ஏற்கனவே இந்த நடைமுறைகள் எல்லாம் இருந்ததா இல்லையா என்பதை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் விசாரிக்க முடியும். மலை மீது ஆடு, கோழி எடுத்த சென்று சமைத்து சாப்பிட்டார்களா என விசாரித்து நடைமுறையை அனுமதித்தால் போதும். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உடனடியாக தீர்வு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசை அணுகி இந்த நடைமுறையை பெற முடியும் என்று சொல்கிறோம். அதை வரக்கூடிய நாட்களில் அனுமதி பெறுவோம். இவ்வாறு நவாஸ் கனி, எம்.பி., தெரிவித்தார்.  

ஆய்வு மற்றும் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அவுதா காதர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஹபீப் முகமது ஷேக் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அத்துடன்,  முஸ்லிம் ஐக்கிய சுன்னத் ஜமாத் மதுரை நிர்வாகிகள் ஜமாத் தலைவர் லியாகத் அலி கான்,செயலாளர் காஜா மொகிதீன்,பொருளாளர் முஹம்மது பாரூக் ஆகியோரும் உடனிருந்தனர். 



============================

No comments: