Wednesday, January 1, 2025

மன அழுத்தத்தைத் தவிர்க்க எளிய வழிகள்....!

"மன அழுத்தத்தைத் தவிர்க்க 9 எளிய வழிகள்"

இன்றைய நவீன காலகட்டத்தில், பல காரணங்கள், நீண்டகால அடிப்படையில் உளவியல் அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றன. அதேநேரத்தில், பிஸி ஷெட்யூல் மற்றும் பல்வேறு அனைத்து பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதால், உலகில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாதவர்களுக்கு பஞ்சமே இல்லை. மன அழுத்தம், ஒருவர் தன்னுடைய திறமையை சரியான முறையில் பயன்படுத்த முடியாத வகையில் தடுத்து விடுகிறது. வாழ்க்கையில் எப்போதும் ஒருவித பதற்றத்துடன் வாழ  வழி அமைத்து கொடுத்து விடுகிறது. இதனால், நிம்மதி பறிபோகும் நிலைக்கு மனிதன் தள்ளப்படுகின்றான். 

மன அழுத்தத்தை நாம் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. அதற்கு சரியான முறையில் தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைப் போக்க உதவும் 9 பொதுவான பழக்கங்களை வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன்மூலம், மன அழுத்தம் என்ற தொல்லையில் இருந்து நிச்சயம் ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும். 

சுவாசத்திற்கு முன்னுரிமை:

பெரும்பாலான மக்கள், தாங்கள் நாள் முழுவதும் எப்படி சுவாசிக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. இருப்பினும், ஒரு மன அழுத்த சூழ்நிலையை எதிர்கொண்டால், பலர் விரைவாக சுவாசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இந்த கட்டத்தில் ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக்கொள்வது உடலை அமைதிப்படுத்த உதவும் என்பதை கவளத்தில் கொள்ள வேண்டும். மேலும், அமைதியைப் பேணுவதன் மூலம், நரம்புகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு திறம்பட பதிலளிக்க உதவுகிறது என்பதையும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

புன்னகை எனும் சிரிப்பு: 

மன அழுத்தத்திற்கு எதிரான பதிலுக்கு தினமும் சிரிக்கும் பழக்கம் மிகவும் முக்கியமானது. புன்னகை எனும் சிரிப்பு, இதயம் மற்றும் நுரையீரலைத் தூண்டுகிறது. அதேநேரத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன்மூலம் மன அழுத்தத்திற்கு திறம்பட பதிலளிக்க உதவுகிறது. எனவே எப்போதும் சிரித்த முகத்துடன், இருக்க நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முகத்தில் அழகிய சிரிப்பு, புன்னகை இருந்தால், எல்லோரும் நம்மை நேசிப்பார்கள். நம் மீது அன்பு செலுத்துவார்கள். புன்னகை மூலம் வாழ்க்கையில் சாதித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். புன்னகை எனும் ஆயுதம், பலருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. இறுக்கமான மனநிலையில் இருந்து வெளியே வந்து, சிரிப்பு என்ற ஆயுதம் மூலம் மன அழுத்தத்தை நாம் விரட்டியடிக்க வேண்டும். 

போதுமான தூக்கம்: 

மன அழுத்தம் மற்றும் தூக்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது.  ஒரு ஆய்வின்படி, தூக்கமின்மை  காரணமாக, அடுத்த நாள் அதிக மன அழுத்தம், கோபம், சோகம் மற்றும் மன சோர்வு ஆகிய புகார்களுக்கு பலர் ஆளாகின்றனர். போதுமான தூக்கம் இல்லாமை காரணமாக மனம் பெரும் அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஏக இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய அருட்கொடைகளில் தூக்கம் ஒரு முக்கிய அருட்கொடையாகும். சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்த மனிதர்கள், வாழ்க்கையில் எப்போதும் மன அழுத்தம் அடையாமல், மகிழ்ச்சியாக இருந்து இருக்கிறார்கள். தற்போது நவீன விஞ்ஞான யுகம், மனிதனின் தூக்கத்தை மெல்ல மெல்ல பறித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு நாம் அடிமையாகாமல், சரியாக தூங்கும் பழக்கத்தை வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதன்மூலம், மன அழுத்தம் குறையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

காஃபின் கட்டுப்பாடு: 

தேநீர் அல்லது காபியை பெரும்பாலான மக்கள் நாள் முழுவதும் உட்கொள்கிறார்கள்.  ஆனால் அதில் உள்ள காஃபின் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ஒரு  ஆராய்ச்சியின்படி, காஃபின் அதிகப்படியான நுகர்வு, உடலில் மனக் கவலையின் அறிகுறிகளை அதிகரிக்க வழிவகுக்கிறது. காஃபின் பதட்டம் உள்ளவர்களுக்கு அதிக கவலையை ஏற்படுத்துகிறது. எனவே முடிந்த அளவுக்கு தேநீர், அல்லது காபி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால், முயற்சி செய்தால், நிச்சயம் அந்த பழக்கத்தில் இருந்து நாம் விடுபட முடியும். 

வீட்டிற்கு வெளியே நடப்பது: 

மன அழுத்தத்தின் விளைவாக பலர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கத் தயாராக இல்லை. இருப்பினும், ஒருபோதும் மன அழுத்தத்திற்கு ஆளாகாதவர்கள், வீட்டிற்கு வெளியே அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒரு ஆய்வின் படி, காலை அல்லது மாலை வேளையில் வீட்டிற்கு வெளியே ஒரு சிறு நடைப்பயிற்சி செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். நடைப்பயிற்சி மன அழுத்தத்திற்கு மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு காணும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. நாள்தோறும் நடைப்பயிற்சி செய்பவர்கள், சுவாசப் பிரச்சினைகள், நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடுகிறார்கள். நாம் மருத்துவரிடம் செல்லும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வியே தினமும் நடைப்பயிற்சி செய்கிறீர்களா? என்பதாகவே இருக்கிறது. எனவே, நடைப்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகமிக அவசியம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

வாழ்க்கை இருப்பு: 

பெரும்பாலான மக்களின் மன அழுத்தத்திற்கு அலுவலக பொறுப்புகள் முக்கிய காரணமாகும். எனவே அலுவலக வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம். அலுவலகத்திற்கு வெளியே உள்ள பொறுப்புகளில் இருந்து உங்கள் மனதை எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. அலுவலகம் மற்றும் வீட்டில் இருக்கும்போது, தனிதனி மனநிலையில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அலுவலக டென்ஷனை வீட்டிற்கு கொண்டு வர கூடாது. வீடு என்பது, நாம் வாழும் ஒரு சொர்க்கம் என்ற எண்ணம் எப்போதும் மனதில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து உறவுகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களிடம் நமது எண்ணங்களை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியாக வாழ பழக்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நிச்சயம் மன அழுத்தம் என்ற நோயில் இருந்து நாம் மீள முடியும். 

நண்பர்களுடன் நேரத்தை செலவிடுதல்: 

மக்களுடன் நல்ல, ஆரோக்கியமான மற்றும் ஆதரவான உறவுகள் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பல்வேறு ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, மக்களுடன் தொடர்புகொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நண்பர்கள் இல்லாதவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நவீன ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது தற்போது அபூர்வமாக உள்ளது. அப்படி நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால், அவர்களின் நட்பை நாம் ஒருபோதும் கைவிடக் கூடாது. நண்பர்களின் இன்பம், துன்பம் ஆகிய அனைத்திலும் நாம் பங்கேற்ற வேண்டும். இதேபோன்று, உறவுமுறைகளை நல்ல முறையில் பேணுவதை வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாக கருத வேண்டும். நல்ல உறவுகள், நல்ல நண்பர்கள் ஆகியவர்களுடன் நேரத்தை செலவிட தயங்கவே கூடாது. இப்படி செலவிடும் நேரம், நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான முதலீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆரோக்கியமான உணவு: 

ஆரோக்கியமான உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை மன அழுத்தத்திற்கு பதிலளிக்க உடலுக்கு உதவுகின்றன. அதேசமயம் மோசமான உணவை சாப்பிடுவது மன மூடுபனி மற்றும் மன அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். இவை மன அழுத்தத்தை எதிர்க்கின்றன. ஒரு நோய்க்கு நல்ல மருந்து உணவே ஆகும். இதன் காரணமாக தான் "உணவே மருந்து" நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியமான  உணவின்  மீது  நாம் சரியாக கவனம் செலுத்துவதிலலை. ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விட்டு, வாழ்க்கைப் பயணத்தில் வேகவேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறோம். இது பின்னர் மன அழுத்தத்திற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விடுகிறது. எனவே எப்போது ஆரோக்கியமான, ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உண்பதை நாம் பழக்கமாக்கிக் கொண்டால், மன அழுத்தம் மட்டுமல்ல, பிற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

உடற்பயிற்சி: 

உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் மிகமிக அவசியம் என்பதை அதை  அறிந்து உள்ளவர்களுக்கு நன்கு தெரியும், உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. உடற்பயிற்சி மூளைக்கு நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நமது வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்து, நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய நேரத்தை ஒதுக்க வேண்டும். சரியாக நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால், நிச்சயம் மனம் மற்றும் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: