"மதரஸாக்களில் படிப்படியாக குறைந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை"
- புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சி ரிப்போர்ட் -
இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் ஆகிய இருபாலாரும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இதன்மூலம் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி ஆகிய இரண்டையும் பெறுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும் என்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது. உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், அவர்கள் உயர்கல்வி பெற அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் மத்தியிலும், கல்வி குறித்து நல்ல புரிதல் தற்போது உருவாகி வருவதால், ஆண்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய பெண்கள் கூட, உயர்கல்வி பெறுவதில் அதிக அக்கறையுடன் இருந்து வருகிறார்கள்.
இப்படி, சமுதாயம் கல்வியில் ஆர்வம் செலுத்தி வந்தாலும், மார்க்கக் கல்வியை வழங்கும் மதரஸாக்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதுதொடர்பாக கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (Unified District Information System for Education Plus (UDISE) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
குறையும் மாணவர் சேர்க்கை:
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2018-19 ஆம் ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவின் பள்ளி மாணவர் சேர்க்கை 1 கோடியே 22 லட்சம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று ஆராயந்தால், முதன்மையாக, ஆதார் இணைக்கப்பட்ட மாணவர் ஐ.டி.கள் மூலம் நகல் மற்றும் சில பொய் உள்ளீடுகளை நீக்கியதே இதற்குக் காரணம் என தெரியவருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 36 லட்சம் (-2.8 சதவீதம்) குறைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 லட்சம் (-8.7 சதவீதம்) குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் 21 லட்சம் (-2.3 சதவீதம் ) குறைந்துள்ளது. பிற பள்ளிகளில் (மத்ரஸாக்கள் உட்பட) 41 லட்சம் (-44.8 சதவீதம்) குறைந்துள்ளது.
மதரஸாக்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகள்:
இதேபோன்று, அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களில் மாணவர் சேர்க்கை 16 சதவீதும் குறைந்துள்ளது. அதாவது 30 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக சரிந்துள்ளது. ஆனால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை முறையே 7 சதவீதம் மற்றும் 13 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில் மாணவர் சேர்க்கை 87 சதவீதம் (6 லட்சத்தில் இருந்து 78,283) வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோன்று அங்கீகரிக்கப்படாத பிற பள்ளிகளில் சேர்க்கை 56 சதவீதம் குறைந்துள்ளது (53 லட்சத்தில் இருந்து 23 லட்சத்து 50 ஆயிரமாக). மொத்த மாணவர் சேர்க்கைகளில் 2-4 சதவீதம் மட்டுமே இருந்தபோதிலும், மதரஸாக்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் மொத்த சேர்க்கை சரிவில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்தன.
காரணம் என்ன?
ஆதார் அடிப்படையிலான ஐடிகள் தரவுத் துல்லியத்தை மேம்படுத்தியுள்ளன. ஆனால் அவை அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் மற்றும் மதரஸாக்களை விகிதாச்சாரத்தில் பாதித்திருக்கலாம். அங்கு பதிவுகளில் சரிபார்க்கப்படாத அல்லது நகல் உள்ளீடுகள் இருக்கலாம். பல அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்கின்றன. மேலும் அவற்றின் மூடல் அல்லது சேர்க்கை குறைக்கப்பட்டது, உண்மையான மாணவர் எண்ணிக்கையில் சரிவைக் காட்டிலும் அணுகலுக்கான தடைகளைக் குறிக்கிறது.
அதிகரித்த உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் இருந்தபோதிலும், அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் மாணவர் சேர்க்கையில் 16 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டன. இது தக்கவைத்தல் மற்றும் வெளியேறுதல் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. சரிவு உண்மையான கைவிடுதல்களை பிரதிபலிக்கிறதா அல்லது மேம்படுத்தப்பட்ட தரவு சேகரிப்பு என்பதை தரவு உறுதியாக தீர்மானிக்கவில்லை.
அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் பெரும்பாலும் பின்தங்கிய பகுதிகளில் முக்கியமான இடைவெளிகளை நிரப்புகின்றன. அவர்களின் சரிவு விளிம்புநிலை சமூகங்களுக்கு கல்வி சமத்துவமின்மையை அதிகரிக்கலாம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கொள்கை சவால்கள்:
சேர்க்கைகளின் கூர்மையான குறைப்பு, கண்காணிப்பு வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைக்கு இடையே உள்ள சமநிலை (எ.கா., அங்கீகரிக்கப்படாத பள்ளிகளை மூடுதல்) மற்றும் கல்விக்கான அணுகலை உறுதி செய்வது பற்றிய கவலைகளை எழுப்புகிறது. அங்கீகரிக்கப்பட்ட மத்ரஸா பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அதிகரிப்பு இருந்தபோதும், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது சமூக ஈடுபாடு மற்றும் பாடத்திட்டத்தின் பொருத்தம் உள்ளிட்ட அமைப்பு ரீதியான சவால்களை மேலும் ஆராயப்பட வேண்டும்.
காரணங்கள் பற்றிய விரிவான ஆய்வு:
குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில், மேம்பட்ட தரவு சேகரிப்பு அல்லது உண்மையான மாணவர் சேர்க்கை குறைவால் ஏற்பட்டதா என்பதை ஆராய வேண்டும். .அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் பெறுவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்ய ஆதாரங்களை வழங்குதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான தொடர்ச்சியான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மதரஸாக்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளை நம்பியிருக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கான சேர்க்கை இயக்கங்களில் சமுதாயம் கவனம் செலுத்த வேண்டும். உண்மையான மாணவர்களைத் திட்டமிடாமல் விலக்குவதைத் தடுக்கும் அதேவேளையில், தரவுத் துல்லியத்தை உறுதிப்படுத்த கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்:
இஸ்லாத்தின் இதயமாக இருக்கும் மார்க்கக் கல்வியை போதிக்கும் மதரஸாக்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைந்து வருகிறது? என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும். மார்க்கக் கல்வி ஆன்மீகத்திற்கு பலன் அளிக்கும். ஆனால் வருவாய்க்கு உதவாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த எண்ணத்தை முஸ்லிம்களின் மனதில் இருந்து நீக்க வேண்டும். பல இஸ்லாமிய அறிஞர்கள் மதரஸாக்களை தற்போது நவீனப்படுத்தி, மார்க்கக் கல்வியுடன் நவீன உலகக் கல்வியையும் வழங்கி வருகிறார்கள். இதன்மூலம் மதரஸாக்களில் படித்த ஆலிம்கள், மெளலானாக்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் அலங்கரித்து வருகிறார்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி சமுதாயத்திற்குப் புகழை சேர்த்து வருகிறார்கள்.
எனவே, மதரஸாக்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் சமுதாயம் கண்டிப்பாக எடுக்க வேண்டும். மதரஸாக் கல்வி குறித்து முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் மதரஸாக் கல்வி நிச்சயம் பலன் அளிக்கும் என்பதை தெளிப்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம், வருங்காலத்தில் மதரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும். அதன்மூலம், இஸ்லாமிய சிந்தனைகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கும். தற்போது உள்ள பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே, மதரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment