Friday, January 24, 2025

துருக்கி ஒரு பார்வை.....!

  "நன்கு வளர்ந்த கல்வி, சுகாதார அமைப்பைக் கொண்டுள்ள துருக்கி"

உலகில் வேகமாக வளர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. உலக நாடுகளில் வாழும் மக்களிடையே இஸ்லாமிய நெறிமுறைகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் தற்போது தொடர்ந்து அதிகரித்துகொண்டே செல்கிறது. இதன் காரணமாக பல நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை  உயர்ந்துகொண்டு வருகிறது. பல்வேறு புள்ளிவிவரங்களின்படி, உலக மக்கள்தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் ஆவார். உலகம் முழுவதும் முஸ்லிம்களின் மக்கள் தொகை தோராயமாக 190 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 57 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசுகிறார்கள் மற்றும் பல்வேறு இனப் பின்னணியிலிருந்து வருகிறார்கள்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பட்டியலின்படி, உலகில் 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. இவற்றில் 49 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தென்கிழக்கு ஆசியாவின் துடிப்பான நகரங்கள் முதல், வட ஆப்பிரிக்காவின் பாலைவனங்கள் வரை பரவியுள்ள இந்த நாடுகள் தனித்துவமான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாகரிகங்களைக் கொண்டுள்ளன.

அவை அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை நீண்டு, இஸ்லாத்தில் உள்ள அவர்களின் பொதுவான நம்பிக்கையால் ஒன்றிணைக்கப்பட்ட பல்வேறு வகையான கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மிகவும் மாறுபட்ட அரசாங்க கட்டமைப்புகள், சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் பொருளாதார சூழல்களைக் கொண்டிருந்தாலும், இந்த நாடுகள் இன்னும் பொதுவான இஸ்லாமிய வரலாற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. அவை புவிசார் அரசியல், வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க கூட்டு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

துருக்கி ஒரு பார்வை:

துருக்கி ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சந்திப்பில் அமைந்துள்ளது. இது வடமேற்கில் கிரீஸ் மற்றும் பல்கேரியா, வடக்கே கருங்கடல், வடகிழக்கில் ஜார்ஜியா, ஆர்மீனியா, நக்சிவனின் அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவ் மற்றும் கிழக்கில் ஈரான், தென்கிழக்கில் ஈராக், தெற்கே சிரியா மற்றும் மத்தியதரைக் கடல் மற்றும் மேற்கில் ஏஜியன் கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. துருக்கியின் மொத்த பரப்பளவு 7 லட்சத்து 83 ஆயிரத்து 562 சதுர கிலோ மீட்டர் ஆகும். தெற்கில் டாரஸ் மலைகள், வடக்கே போன்டிக் மலைகள், அனடோலியன் சமவெளி போன்ற வளமான சமவெளிகள் மற்றும் மத்திய அனடோலியன் பீடபூமி, வான் ஏரி போன்ற ஏரிகள் ஆகியவை நிலப்பரப்பில் அடங்கும்.

துருக்கி நான்கு முக்கிய கடல்களின் எல்லைகளைக் கொண்டுள்ளது. கருங்கடல், மர்மாரா கடல், ஏஜியன் கடல் மற்றும் மத்தியதரைக் கடல் ஆகிய இந்த நான்கு கடல்கள் ஆகும்.  மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் கடற்கரைகள், வெப்பமான, வறண்ட கோடை மற்றும் லேசான, ஈரமான குளிர்காலம் கொண்ட மத்திய தரைக்கடல் காலநிலை துருக்கியில் நிலவுகிறது.  அத்துடன், ஆண்டு முழுவதும் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை இருந்து வருகிறது. உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பமான, வறண்ட கோடை மற்றும் மிகவும் குளிரான, பனிப்பொழிவு குளிர்காலம் கொண்ட கண்ட காலநிலை இருக்கிறது.  துருக்கி வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயர்வு போன்ற சவால்களை எதிர்கொள்கிறது.

துருக்கியில் முஸ்லிம்கள்:

துருக்கியின் மக்கள் தொகை அளவு, தோராயமாக 9 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகையில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவார்கள். மக்கள்தொகை பரவல் கணக்கின்படி, இஸ்தான்புல் 2 கோடிக்கும்  அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய நகரமாக இருந்து வருகிறது. அங்காரா இரண்டாவது பெரிய நகரமாகும்.  அதைத் தொடர்ந்து இஸ்மிர், பர்சா மற்றும் அந்தல்யா ஆகிய நகரங்கள் உள்ளன. துருக்கியில் இன பன்முகத்தன்மை இருந்து வருகிறது. முக்கியமாக துருக்கியர்கள், குறிப்பிடத்தக்க குர்திஷ் சிறுபான்மையினர் மற்றும் சிறிய ஆர்மீனிய, அரபு மற்றும் கிரேக்க சமூகங்கள் கொண்ட பிரிவுகளைக் கொண்டுள்ளனர். இந்த நாட்டில் ஆண்டுதோறும் மக்கள் தொகை சுமார் 2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. 

துருக்கியின் பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் இருந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2021 இல் தோராயமாக 7 புள்ளி 209 டிரில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது. துருக்கியில் இருந்து விவசாய பொருட்கள், ஆட்டோமொபைல்கள், ஜவுளி மற்றும் மின்னணுவியல் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதன் மதிப்பு 225 பில்லியன். அமெரிக்க டாலர் ஆகும். 

வெளிநாடுகளில் இருந்து துருக்கிக்கு முக்கியமாக எரிசக்தி மற்றும் மூலப்பொருட்கள், இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மொத்தம் மதிப்பு  271 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிறநாடுகளைப் போன்று துருக்கியிலும் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்து வருகிறது. அங்கு வேலையின்மை விகிதம் சுமார் 10 புள்ளி 3 சதவீதமாகும். 

துருக்கியில் கோதுமை, ஹேசல்நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆகியவை முக்கிய விவசாயதொழிலாக இருந்து வருகிறது. அதேபோல் ஆட்டோமொபைல்கள் மற்றும் எஃகு உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. துருக்கியின் அதிகாரப்பூர்வ நாணயம் துருக்கிய லிரா, இது வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக மதிப்பில் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கிறது.

துருக்கியில் சுற்றுலா:

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் விரும்பி செல்லும் நாடாக துருக்கி இருந்து வருகிறது. இதனால், அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகிளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி கடந்த 2021 இல் சுமார் 3 கோடி சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. இதன்மூலம் அந்நாட்டிற்கு தோராயமாக 24 புள்ளி 5 பில்லியன் டாலர் வருவாய் துருக்கிக்கு கிடைத்தது.  துருக்கியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சிறந்த இடங்களாக இஸ்தான்புல், அந்தல்யா, கப்படோசியா ஆகியவை உள்ளன. 

இஸ்தான்புல்லில் ஹாகியா சோபியா, நீல மசூதி மற்றும் டோப்காபி அரண்மனை போன்ற சின்னமான அடையாளங்கள் பரந்துவிரிந்து உள்ளன. அந்தல்யா கடலோர சுற்றுலாவின் மையமாக உள்ளது. கப்படோசியா அதன் தனித்துவமான நிலப்பரப்புகள் மற்றும் சூடான காற்று பலூன்களுக்கு பெயர் பெற்றது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் துருக்கியின் வரலாற்று தளங்களாக எபேசஸ் மற்றும் ட்ராய் ஆகியவை உள்ளன. 

வரலாறு மற்றும் நாகரிகங்கள்:

துருக்கி ஹிட்டியர்கள், பெர்சியர்கள், ரோமானியர்கள் மற்றும் பைசாண்டியர்கள் உட்பட பல்வேறு நாகரிகங்களின் தாயகமாக இருந்து வருகிறது. ஒட்டோமான் சகாப்தம்: 14 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பரவியது. 1923 இல் முஸ்தபா கெமால் அட்டாடர்க்கின் கீழ் நவீன குடியரசு நிறுவப்பட்டது. முஸ்தபா தலைநகரை அங்காராவிற்கு மாற்றி பரவலான சீர்திருத்தங்களைத் தொடங்கினார்.

துருக்கியில் கல்வி முறையை எடுத்துக் கொண்டால், அங்கு 12 ஆண்டுகளுக்கு கல்வி கட்டாயமாகும். அதன்படி, 6 ஆண்டுகள் ஆரம்ப, 3 ஆண்டுகள் நடுத்தர, 3 ஆண்டுகள் உயர்நிலை என்று இருந்து வருகிறது. உயர் கல்வியை எடுத்துகொண்டால், இஸ்தான்புல் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உட்பட ஏராளமான பல்கலைக்கழகங்களின் தாயகமாக உள்ளது. துருக்கியில் எழுத்தறிவு விகிதம் தோராயமாக 96 சதவீதமாகும். இதற்கு முக்கிய காரணம், கல்விக்கு அந்நாட்டு அரசு தந்துவரும் முக்கியத்துவம் என கூறலாம். 

நன்கு வளர்ந்த சுகாதார அமைப்பு:

துருக்கி பொது மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது. துருக்கி ஒரு மருத்துவ சுற்றுலா நாடு என்றும் கூறலாம். மருத்துவ மற்றும் அழகுசாதன சிகிச்சைகளுக்கான பிரபலமான இடமாகும். இதனால், துருக்கி  ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை ஈர்க்கிறது. துருக்கியில் உள்ள மருத்துவமனைகள் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் அதிகாரப்பூர்வ மொழியாக துருக்கியம் உள்ளது. பிரதான மதமாக இஸ்லாம் உள்ளது. கிறிஸ்தவ மற்றும் யூத சிறுபான்மையினர் துருக்கியில் நல்ல சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். துருக்கியின் மரபுகள் கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சார தாக்கங்களின் கலவையாகும்.  துருக்கி அதன் வளமான வரலாறு மற்றும் நவீன வளர்ச்சியுடன்.கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: