பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய முறைக்கு கடும் எதிர்ப்பு....!
புதிய கொள்கைத் திட்டத்தை கைவிட கோரி ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான எம்.எஸ்.எஃப். கடிதம்....!!
சென்னை, ஜன,19- பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்து இருப்பதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான எம்.எஸ்.எஃப். கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எம்.எஸ்.எஃப். தேசிய தலைவர் பி.வி.அஹமத் சாஹு மற்றும், தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்மது அர்ஷாத் ஆகியோர் கடந்த 17.01.2025 அன்று கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் புதிய கொள்கைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றிய அமைச்சருக்கு எம்.எஸ்.எஃப். சார்பில் அனுப்பபட்டுள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
பல்கலைக்கழக மானியக் குழு முடிவு:
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. ஆளுநரின் பிரதிநிதி, மானியக் குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என்ற மூவர் மட்டுமே துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், கல்வித்துறை சாராதோரும் துணைவேந்தர்களாகலாம் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. இதேபோன்று, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனம் தொடர்பாகவும் பல்கலைழக்கழக மானியக் குழு கல்வியாளர்கள் அனைவரும் கவலைப்படும் வகையில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உயர்கல்வியில் தற்போது இருக்கும் தன்னாட்சி முறைக்கு எதிரானது. மேலும், ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும், சுதந்திரமான கல்விமுறை, நிர்வாகம், பண்பாடு, திறமையான முறையில் பணி நியமனம் ஆகியவற்றை புதிய கொள்கை விதிகள் சீர்குலைத்துவிடும்.
அரசியல் தலையீடு:
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்ய அறிவிக்கப்பட்டுள்ள கொள்கை விதிகள் அனைத்தும் அரசியல் தலையீட்டு மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரத்தை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டு இருப்பதுடன், பல்கலைக்கழங்களின் சுயாட்சி முறையை அழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும். இந்த முடிவுகள் மூலம் கல்வித்துறையில் அரசியல் தலையீடு ஏற்பட்டு, முறையான கல்வியறிவு இல்லாதவர்கள் கூட, பதவியில் வர வாய்ப்பு உருவாகிவிடும். இதன்மூலம், பல்கலைக்கழகங்கள் இனி, கல்வியாளர்கள் மூலம் நிர்வாகிப்படுவது தடுக்கப்பட்டு, அதிகாரத்துவ அல்லது கருத்தியல் சக்திகள் மூலம் நிர்வாகிக்க வாய்ப்பு உருவாகிவிடும்.
திறமையான கல்வியாளர்கள் புறக்கணிப்பு:
அத்துடன், புதிய கொள்கை விதிகள், பல்கலைக்கழகங்களில் திறமையான கல்வியாளர்களின் நியமனம் தடுக்கப்பட்டுவிடும். கல்வி தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் இதுவரை நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பு, அந்த முறையை சீர்குலைத்துவிட்டு, வரலாற்று ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கல்வி போதிக்கும் முறை மற்றும் ஆராய்ச்சி முறை ஆகியவற்றை அழித்துவிடும். மேலும், புதிய அறிவிப்பு நாட்டின் கல்வியின் தரத்தை மிகவும் பின்னுக்கு தள்ளிவிடும். அத்துடன், குறிப்பிட்ட ஒருசிலர் மட்டுமே, பல்கலைக்கழகங்களில் அதிகாரம் மற்றும் சுயாட்சி செய்து, அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்கக் கூடிய தவறான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
அறிவிப்பை கைவிட வேண்டும்:
எனவே, பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள கொள்கை அறிவிப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான எம்.எஸ்.எஃப். கடுமையாக எதிர்க்கிறது. நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அறிவுசார் சுதந்திரத்துடனும், கல்வியை சிறப்பாக வழங்கும் அமைப்புகளாக செயல்பட வேண்டும். பல்கலைழக்கழகங்களில் அரசியல் தலையீடு ஒருபோதும் இருக்கக் கூடாது. எனவே, ஒன்றிய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள கொள்கை அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன், பல்கலைக்கழகங்களின் பணிகள் மற்றும் நிர்வாகத்தை வலிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், நாட்டில் உள்ள கல்வி அமைப்புகளை சுயாட்சியுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். எனவே, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள கொள்கை அறிவிப்பை, தீவிரமாக பரிசீலனைச் செய்து திரும்பபெற வேண்டும்.
இவ்வாறு எம்.எஸ்.எஃப். தேசிய தலைவர் பி.வி.அஹமத் சாஹு மற்றும், தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்மது அர்ஷாத் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment