Monday, January 20, 2025

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கான இறுதிக்கட்ட ஆலோசனை....!

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின்  இறுதிக்கட்ட ஆலோசனை வரும் 24 மற்றும் 25 தேதி நடைபெறுகிறது..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டம்.....!!

புதுடெல்லி, ஜன.21- வக்பு திருத்த மசோதா 2024 குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதிச் சுற்று விவாதத்தில் இறங்கியுள்ளது. மேலும், சட்டத்தில் தங்கள் திருத்தங்களைச் சமர்ப்பிக்க உறுப்பினர்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மசோதாவின் 44 பிரிவுகளை ஆய்வு செய்ய வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வக்பு சட்டத் திருத்த மசோதா:

வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, அது தொடர்பான புதிய மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கல் செய்தது. அரசாங்கம் மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, ​​ஜே.டி.(யு) தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங் மக்களவையில் மசோதாவை ஆதரித்தார். வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும் என்றும், மஸ்ஜித்களின் நிர்வாகத்தில் தலையிடும் முயற்சி அல்ல என்றும் அவர் வாதிட்டார். தெலுங்கு தேசம் கட்சி இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், மசோதாவை மேலும் ஆய்வுக்காக ஒரு கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கடுமையாக வாதிட்டது.

மேலும், திமுக. இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதுகுறித்து விவாதிக்க பா.ஜ.க. எம்.பி., ஜக்தம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களை வேண்டும் என்றே கூட்டத்தில் சேர்க்கவில்லை. இந்த குழு பல கட்டங்களாக கூடி, வக்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விவாதித்தது. அப்போது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமயசர்பின்மை கொள்கைக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதேபோன்று, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து, கடிதங்கள் எழுதினர். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினார்கள். 

சென்னையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு வந்தபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இ.யூ.முஸ்லிம் லீக் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ் கனி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து அறிக்கை அளித்ததுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர். 

இறுதிக்கட்ட ஆலோசனை:

இத்தகையை சூழ்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் இறுதிக்கட்ட ஆலோசனை வரும் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக வரும் 22ஆம் தேதிக்குள், குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும், தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் திருத்தங்களைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் திங்கட்கிழமை அனுப்பப்பட்ட அறிக்கையில், வரும் புதன்கிழமைக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வக்பு  திருத்த மசோதாவின் கூட்டு நாடாளுமன்றக் குழு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த  பிரிவு வாரியாக விவாதம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மக்களவை செயலகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான களத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிக்கை தாக்கல்:

தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, சர்ச்சைக்குரிய மசோதா குறித்த இறுதி அறிக்கை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மசோதாவை விரைவில் முன்மொழிய அரசாங்கம் விரும்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ.க. அதன் அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் தொடர்பு கொண்டுள்ளது. 

இதனிடையே, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான ஜக்தம்பிகா பால், மசோதா குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியும் என்று நம்புவதாகக் கூறினார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக ஜே.பி.சி தொடர்ந்து கூடி, நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி ஆலோசித்து வருவதாக கூறிய அவர், உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்து அறிக்கையை வழங்குவோம் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். கடைசியாக குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது நீட்டிக்கப்பட்டது. எனவே இந்த அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜக்தம்பிகா பால் கூறினார். 

கடும் எதிர்ப்பு:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜேபிசிக்கு அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதா, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் நிர்வாகத்தில் டிஜிட்டல் மயமாக்கல், கடுமையான தணிக்கைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் உள்ளிட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஜே.பி.சி., 10 மாநிலங்களில் கூட்டங்களை நடத்தியது. மேலும் திங்கட்கிழமை மேற்கு வங்க மாநில வக்பு வாரிய உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய குழு, இன்று (செவ்வாய்க்கிழமை) லக்னோவில் ஆலோசனை நடத்துகிறது. ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று ஆலோசனை நடத்த வேண்டும் என்ற முடிவு தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை மற்றும் மசோதா சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: