"வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக நலவாரிய அட்டை வழங்கும் திட்டம்"
- தமிழக அரசின் புதிய முயற்சி குறித்த ஒரு சிறப்பு ரிப்போர்ட் -
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை என்ற துறையை திராட மாடல் அரசின் தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த துறை எதற்காக தொடங்கப்பட்டு இருக்கிறது என்றால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எந்தவித பாதிப்புகளையும் அடையாமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், அங்கு ஏதாவது பாதிப்பு எற்பட்டால், அதற்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பதற்காகும், உருவாக்கப்பட்டது.
நலவாரிய அட்டை:
இத்தகைய சூழ்நிலையில், வெளிநாடுகளில் தற்போது பணிச் செய்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி இருப்பவர்களுக்கும்,புதிய பாஸ்போர்ட் எடுத்துவைத்துக் கொண்டு விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், தமிழக அரசு சார்பில் நலவாரிய அட்டை போடப்படுகிறது. நலவாரிய அட்டை போட்டுக் கொண்டால், அந்த குடும்பத்திற்கு, திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன், விபத்து காப்பீட்டு பலன், பொது சுகாதார காப்பீடு ஆகியவை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், ஓய்வூதியமும் கிடைக்கும். இதை தமிழக அரசு கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது.
போலி முகவர்கள் தடுக்கப்படுவார்கள்:
அத்துடன், இந்த அட்டையில் மற்றும் ஒரு மிகப்பெரிய பலன் கிடைக்கும். போலி முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்வது தடுக்கப்படும். போலி முகவர்களிடம் பணம் செலத்திவிட்டு நிறைய பேர் தற்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். இப்படி பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்களின் பணம், பெற்று தர அரசு சார்பில் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கும். அத்துடன் சட்டம் மற்றும் காவல்துறை உதவிகளும் கிடைக்கும்.
விபத்துகளில் சிக்கிக் கொண்டவர்கள், அல்லது வெளிநாடுகளில் யாராவது இறந்துவிட்டால், இறந்தவரிகன் உடலை தாயகம் கொண்டு வருவது, அதற்கு எந்தவகையான சான்றிதழ்கள், ஆவணங்கள் தயாரிக்க வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அரசே அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கும்.
விழிப்புணர்வு முகாம்:
தற்போது தமிழகம் முழுவதும் மஸ்ஜித்துகளில் (பள்ளிவாசல்களில்) முகாம்கள் நடத்தப்பட்டு, நலவாரிய அட்டை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டம் குறித்து மக்கள் அனைவரும் அறிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தனி அறையில் இந்த துறை செயல்பட்டு வருகிறது. அங்குச் சென்று பாஸ்போர்ட், ஆதார், விசா பர்மிட் கார்டு, புகைப்படம் (போட்டோ) இ.மெயில் , இ.டி., (முகவரி) வீட்டு விலாசம் ஆகியவற்றை கொண்டு சென்று, மக்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். இப்படி பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும்:
அந்த அட்டையின் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களின் பலன்களை பெறலாம். இதுகுறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதன்மூலம், வெளிநாடுகளில் வாழும் நம்முடைய மக்கள், தமிழக அரசின் பலன்களை பெற முடியும். வெளிநாடுகளில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment