நாடாளுமன்றத் தேர்தல் - பாஜகவின் கண்ணில் தெரியும் பயம்...!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா, கிட்டதட்ட இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று தங்களது கடமைகளை நிறைவேற்ற 96 கோடி வாக்காளர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இந்தியாவில் நடைபெறும் இந்த தேர்தலின் முடிவுகளை இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலகமே ஆர்வத்துடன் காண எதிர்நோக்கி காத்திருக்கிறது.
தேர்தல் பத்திரங்களும் பாஜகவும்:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், பாஜகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் இருந்தன என்பது மறக்க முடியாது. இந்த தேர்தல் பத்திரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யும் பணிகளில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இறங்கியுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக இலாபம் பெற்ற கட்சியாக பாஜக இருந்து வருகிறது. பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்கள், அதன்மூலம் தாங்களும் மிகப்பெரிய அளவுக்கு இலாபமும் ஆதாயமும் பெற்றுள்ளனர். குறிப்பாக, பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் முடித்து தரப்பட்டுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதேபோன்று நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அளவுக்கு பாஜக ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பூதகரமாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அடுத்து என்ன செய்வது என யோசனையில் இருந்து வருகிறார்கள்.
பாஜகவின் கண்ணில் பயம்:
நாட்டில் தனக்கு எதிராக ஒரு மக்கள் அலை தற்போது உருவாகியுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, அதனை திசை திருப்ப பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, சி.ஏ.ஏ. விவகாரத்தை மீண்டும் கிளப்பி மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டு காரியங்களை நடத்தி வருகிறது.
இதேபோன்று, தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை திசை திருப்ப, திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என பல்வேறு நாடகங்களை பாஜகவும் ஒன்றிய ஆட்சியாளர்களும் தற்போது அரங்கேற்றி வருகிறார்கள்.
இப்படி, அவர்கள் அரங்கேற்றி வரும் நாடகங்கள் மூலம் பாஜக மற்றும் அதன் தலைவர்களின் கண்களில் தோல்வி பயம் ஏற்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவுக்கு பாஜக ஆட்சியாளர்கள் நாட்டிற்கு எந்தவித நன்மையையும் செய்யவில்லை. மாறாக வெற்று முழக்கங்கள் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். தங்களது ஆட்சியில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதாக ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எந்தவித அக்கறையும் இருந்த பாஜக திடீரென, தற்போது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்மூலம் மக்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறது.
இதன்முலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய அளவுக்கு தோல்வி கிடைக்கும் என்ற பயம் ஏற்பட்டு இருப்பதை உறுதியாக அறிய முடிகிறது. இதன் காரணமாக தான் நம்ப முடியாத அளவுக்கு வேண்டும் என்றே, கருத்துக் கணிப்புகளை தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் பாஜக பரப்பி வருகிறது. இந்த கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் கவத்தை திசை திருப்ப முடியும் என பாஜக நம்புகிறது. ஆனால் போலியான கருத்துக் கணிப்புகளின் நிலை குறித்து நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் தற்போது நன்கு மக்களிடம் விளக்கம் அளித்து வருகிறார்கள். இது பாஜகவின் சூழ்ச்சி என்றும் இனி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அவர்கள் திட்டவட்டமாக கருத்து கூறி வருகிறார்கள்.
இந்தியா கூட்டணி:
தற்போதைய சூழ்நிலையில், பாஜகவின் ஆட்சியில் நாடு செல்லும் நிலையில், நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை இந்தியா கூட்டணி என்று உறுதியாக கூறலாம். நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ விரும்புகிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சி முக்கியம் என்பது மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் தொழில் அதிபர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இன்னும் வாழ்க்கையில் எந்தவித வளர்ச்சியும் எட்டவில்லை. பாஜக ஆட்சியில் வளர்ச்சி குறித்த வெற்று முழக்கங்களை மட்டுமே அவர்கள் கேட்டு வருகிறார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் முன்னேற்றம், விவசாயிகளின் வளர்ச்சி என பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து காங்கிரஸ் கட்சி பல நல்ல வாக்குறுதிகளை அளித்து உள்ளது. இந்த வாக்குறுதிகள் பெண்களின் வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படுத்தும், விவசாயிகளின் கனவை நிறைவேற்றும். இதேபோன்று, இந்தியா கூட்டணயில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள், மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
மதசார்பற்ற இந்தியாவில், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே கொள்கை, ஒரே கலாச்சாரம் என ஒன்றை மட்டுமே, நடைமுறைப்படுத்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். துடித்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை. எனவே, நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், அரசியலமைப்பு சட்டம் காப்பற்றப்பட வேண்டுமானால், ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்பட வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களின் ஒரே தேர்வு இந்தியா கூட்டணியாகவே இருக்கும். எனவே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில் நாட்டு மக்கள் அனைவரும் அவசியம் கலந்துகொண்டு, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி, நாட்டு நலனில் அக்கறை கொண்ட இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அது தங்களது தலையாய கடமை என்பதை நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment