Thursday, March 7, 2024

ஸ்டார்ட்அப் புரட்சி....!

ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களின் ஸ்டார்ட்அப் புரட்சி....!

இஸ்லாம் பெண்களுக்கு சரியான அளவுக்கு உரிமைகள் வழங்கவில்லை என ஒரு கூட்டம் புலம்பிக் கொண்டு இருக்கிறது. இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்தும் சரியாக அறிந்துகொள்ளாமல், இத்தகைய குற்றச்சாட்டுகளை வேண்டும் என்றே சிலர் சுமத்தி வருகிறார்கள். கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை என அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் வழங்கி, அவர்களை கண்ணிப்படுத்தி வருகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்ப, செயல்பட பெண்களை இஸ்லாம் அறிவுறுத்தி வருகிறது. இதுபோன்ற உரிமைகள் வேறு எந்த மார்க்கத்திலும் நாம் காண முடியாது.  

ஹிஜாப் தடையில்லை:

இஸ்லாம் வழங்கியுள்ள கொள்கைகளுக்கும் அறிவுறுத்தலுக்கும் ஏற்ப தற்போது இஸ்லாமிய பெண்கள், பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். அறிவியல், தொழில், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் ஹிஜாப் அணிந்த பெண்கள், நிகழ்த்தி வரும் சாதனைகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 

ஹிஜாப் மூலம் இஸ்லாமிய பெண்களின் சுதந்ததிரம் பறிக்கப்பட்டு விடுவதாக ஒரு கூட்டம் குற்றம்சாட்டி வரும் நிலையில், அது தங்களின் பாதுகாப்பிற்கான கவசம் என கூறும் முஸ்லிம் பெண்கள், தங்களது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஹிஜாப் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை என்றும் தங்களது செயல்களின் மூலம் நிரூபித்து வருகிறார்கள். இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள், தொடர்ச்சியாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, பல துறைகளில் முன்னேறி வருவது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்து வருகிறது. 

ஸ்டார்ட்அப் துறையில் சாதனை:


உலகம் தற்போது ஸ்டார்ட்அப்களின் காலமாக மாறிவிட்டு, வேகமாக பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் புதிது புதிதாக ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பல புதிய தொழில்களை தொடங்க, படித்த இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு ஸ்டார்ட்அப்கள் நல்ல தீனி போடுகிறது என்றே கூறலாம். 

அந்த வகையில் இஸ்லாமிய ஆண்களும், பெண்களும், ஸ்டார்ட்அப்கள் ஆரம்பித்து தொழில்முனைவோராக மாறி வருகிறார்கள். இதுதொடர்பாக வரும் தகவல்கள், நம்மை பெருமை அளிக்கச் செய்கிறது. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், தொழில்முனைவோராக மாறி, பலருக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்து வருகிறது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. 

முஸ்லிம் பெண்களின் ஸ்டார்ட்அப் புரட்சி:

இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தற்போது ஸ்டார்ட்அப் புரட்சி நடைபெற்று வரும் நிலையில், தெலங்கானா மாநில தலைநகர், ஹைதராபாத்தில், முஸ்லிம் பெண்கள், பல்வேறு தடைகளை உடைத்து ஸ்டார்ட்அப் புரட்சியை நிகழ்த்தி இருக்கிறார்கள். 20 முதல் 22 வயதுக்கு உட்பட் இந்த இஸ்லாமிய பெண்களின், புதிய முயற்சி மற்ற இளம் முஸ்லிம் பெண்களுக்கும் புதிய உத்வேகம் மற்றும் ஆர்வம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. 

தங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஹிஜாப் ஒரு தடையாக இருக்கவில்லை என இந்த பெண்கள், தங்களுடைய செயல்பாடுகள் மற்றும் பணிகள் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள்.  

அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அர்மா சாஹர் என்ற 20 வயது முஸ்லிம் பெண், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான முறையில், ஆட்டோ ஓட்டுநர் துறையில் புதிய ஸ்டார்ட்அப் ஒன்றை ஆரம்பித்து, 20க்கும் மேற்ப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார். தனது புதிய முயற்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்மா சாஹர், பல்வேறு சாவல்களை எதிர்கொண்டு, அவற்றை முறியடித்து, இந்த ஸ்டார்ட்அப் ஆரம்பித்ததாக கூறியுள்ளார். இதன்முலம் தனது வாழ்க்கை மட்டுமல்லாமல், 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்களின் வாழ்க்கையும் முன்னேறி வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, புஷ்ரா அப்துல் காதர் மற்றும் பிர்தோஸ் உன்னிசா ஆகிய இரண்டு முஸ்லிம் பெண்களும் கணினி துறையில் படிப்பு முடித்து, பின்னர், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் பயன் பெறும் வகையில் திட்டமிட்டு ஒரு புதிய ஸ்டார்ட்அப் ஆரம்பித்தனர். இதன்மூலம், பல அறிய தகவல்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கிடைத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. தங்களது புதிய முயற்சி மூலம் ஒவ்வொரு பெண்களும் நாள்தோறும் 750 ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வருவதாக கூறியுள்ள புஷ்ரா அப்துல் காதர் மற்றும் பிர்தோஸ் உன்னிசா, இந்த வருமானம் மூலம் அந்த ஏழை, நடுத்தர குடும்பங்களில் தற்போது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெருமை தெரிவித்துள்ளனர். 

மற்றொரு சாதனை பெண்ணான சானியா முஹம்மது, "குட்மைண்ட்" என்ற ஸ்டார்ட்அப்பை ஆரம்பித்து, இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், உலக மதங்கள் குறித்தும், சுகாதாரம், ஆரோக்கியம் குறித்தும், பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறார்.  மன ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது நிறுவனம் மூலம் ஆலோசனைகளையும் அளித்து வருகிறார். இதன்மூலம், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் புதிய ஒளி உருவாகி வருகிறது. 

அமைதி புரட்சி:


உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தடைகளையும் உடைத்துக் கொண்டு பெண்கள் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், தங்களுடைய இஸ்லாமிய மார்க்கத்தின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில், அழகிய முறையில் ஹிஜாப் அணிந்துகொண்டு, கல்வி பெற்று, பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள் என்பதை அண்மைக் காலமாக நாம் அறிந்து வருகிறோம். தற்போது ஸ்டார்ட்அப் துறையில் இஸ்லாமிய பெண்கள் நுழைந்து, சாதனை நிகழ்த்தி வருவதுடன் பலருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறார்கள். இதன்மூலம், பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பொய் என்பதை அவர்கள் தங்களது அழகிய பணிகள் மற்றும் செயல்கள் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். ஹைதராபாத் பெண்களின் இந்த அமைதி புரட்சி, பல பெண்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது நிஜம். இதன்மூலம் இளம் முஸ்லிம் பெண்கள், கல்வி, தொழில், அறிவியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். பல சவால்களையும் தடைகளையும் உடைத்து பாதுகாப்பான முறையில், இஸ்லாமிய பெண்கள் சாதித்து வருவதை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: