Sunday, March 17, 2024

சில கேள்விகள்....!

தேர்தல் ஆணையமும் சில கேள்விகளும்....!


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்துள்ளார். 

தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தேர்தல் நடைமுறைகள் வரும் 20-ஆம் தேதி முதல் தொடங்கி, ஜுன் மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையுடன் நிறைவு பெறுகிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 77 நாட்கள்,  இந்தியாவில் தேர்தல் நடைமுறை சட்டவிதிகள் அமலில் இருக்கும். இப்படி சுமார் 3 மாதங்களுக்கு தேர்தல் நடைமுறை சட்டவிதிகள் நடைமுறையில் இருந்தால், வணிகர்கள், நடுத்தர வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையமா?


நாடாளுமன்றத் தேர்தலை 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்து இருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடு முழுவதும் சுமார் 3 மாதங்கள் தேர்தல் நடைமுறை சட்டவிதிகள் அமலில் இருந்தால், மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் எப்படி நடக்கும் என கேள்வி ஏழுப்பியுள்ளார். எனவே, தேர்தல் ஆணையம் தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்து 7 கட்டத் தேர்தல் குறைந்து விரைவில் தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அசாம் மாநிலத்தில் உள்ள கலியாபோர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தொடர் வெற்றி பெற்று வருகிறது. தற்போது அந்த தொகுதியின் உறுப்பினராக மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ள கவுரவ் கோகாய் இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தடுக்கும் வகையில் கலியாபோர் தொகுதியை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மறுசீரமைப்பு என்ற பெயரில் மாற்றி அமைத்து இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கலியாபோர் தொகுதி தற்போது காசிரங்கா தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது ஏன் என்றும் கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார். 

தேர்தல் தோல்வி பயம் காரணமாக இத்தகையை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக செய்து வருவதாக கூறியுள்ள கவுரவ் கோகாய், பிரதமர் நரேந்திர மோடியே போட்டியிட்டாலும் கூட, கலியாபோர் தொகுதியில் வெற்றி பெற முடியாது என்றும், தற்போது தொகுதியின் பெயரை மாற்றினாலும் கூட, தாம் காசிரங்கா தொகுதி என்ற பெயரில் இல்லாமல், கலியாபோர் தொகுதி என்ற பெயரில் தான் போட்டியிட இருப்பதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இப்படி தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது என்பதை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மூலம் தெரியவருகிறது என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

வெறுப்பு பேச்சு - பல கேள்விகள்:


நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் கண்ணியமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், விமர்சனம் செய்யும்போது, வெறுப்பு பேச்சுகளை பேசக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், வெறுப்பு பேச்சுகள் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகவும் உறுதியாகவும் கூறினா. 

பின்னர் நடந்த செய்தியாளர்களின் கேள்வி-பதில் பகுதியில், ஒரு பெண் செய்தியாளர் வெறுப்பு பேச்சுகள் குறித்து தனது சந்தேகங்களை எழுப்பினார். தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது எதிர்க்கட்சிகள் வெறுப்பு பேச்சுகள் பேசினால், அவர்கள் மீது உடனடியாக பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சுகளை பேசினால் ஏன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது என கேள்வி எழுப்பினார். 

பெண் செய்தியாளரின் இந்த துணிச்சலான கேள்விக்கு தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் என்தவித விளக்கமும் அளிப்பதை தவிர்த்துவிட்டார். இதன்மூலம், பாஜகவிற்கு ஆதரவாககே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர். 

தேர்தல் நியாயமாக நடைபெறுமா?


தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், தேர்தல் அட்டவணை வெளியிட்ட முறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நீதியாகவும் நடைபெறுமா என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். 

கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு சீரழிந்துவிட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்வதை சீர்குலைக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச அமைப்புகளின் திட்டங்களை உடைக்க 18வது மக்களவைத் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக மக்கள் கருதி வருகிறார்கள். இத்தகையை சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுமானால், அது நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உச்சநீதிமன்றம் தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது எழுந்துள்ளன. 

இதுஒருபுறம் இருக்க, தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, நாட்டின் நலனில், வளர்ச்சியில், முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்ட மக்கள், வரும் தேர்தலில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, தங்களது வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். நாட்டில், சர்வாதிகாரம் வராமல் இருக்க, ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டுமானால், தேர்தல் என்ற ஆயுதத்தை மக்கள் மிகவும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற தங்களுடைய பங்களிப்பை அளிக்க மக்கள் முன்வர வேண்டும். தோல்வி பயத்தால், பாஜக பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற முடிவு செய்யும். அதை முறியடித்து, நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் உறுதி எடுத்துக் கொண்டு, வரும் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை நிச்சயம் ஆற்ற வேண்டும். அதற்கான தருணம் தான் இந்த மக்களவைத் தேர்தல் என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: