Sunday, March 10, 2024

சிறப்பு ரிப்போர்ட்....!

இ.யூ.முஸ்லிம் லீகின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

பிற மதங்களில் இருந்து இஸ்லாத்தை தழுவும் மக்களுக்கு 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான முஸ்லிம் பி.சி.சான்றிதழ் வழங்க ஆணை...!

சென்னை, மார்ச்10- தமிழகத்தில் பிற மதங்களில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் மக்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் சேர்த்து முஸ்லிம் பி.சி.(Muslim B.C.) என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மது அபூபக்கர், மற்றும் மூத்த நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதுடன், நேரிலும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

அரசு ஆணை பிறப்பிப்பு:

இ.யூ.முஸ்லிம் லீகின் இந்த நீண்ட நாள் கோரிக்கை மற்றும் தொடர் முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து உரிய பரிசீலனைக்குப் பிறகு தமிழக அரசு தற்போது உரிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையின் நலத்துறை (BCC) சார்பில்நேற்று (9.3.2024)  ஆணை ஒன்று  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த ஆணையில், பிற மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் மக்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, முஸ்லிம் பி.சி. என்ற சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என முஸ்லிம் சமுதாய மக்களிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வி, வேலைவாயப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் முஸ்லிம் மதத்திற்கு மாறும் அனைவரும் 3 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று பயன் அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கையை தமிழக அரசு மிகவும் கவனத்துடன் பரிசீலனை செய்ததுடன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கருத்துகளை கேட்டறிந்து தற்போது, இஸ்லாம் மதத்திற்கு தழுவும் அனைவருக்கும் முஸ்லிம் பி.சி. என சான்றிதழ் அளிக்கப்படுவார்கள் என்றும் அரசின் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் இஸ்லாம் மதத்திறகு மாறுபவர்கள் 3 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான பலனை பெற முடியும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்த ஆணையின்படி, இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு, இனி அவர்களுக்கு முஸ்லிம் பி.சி.(Muslim B.C.) என சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசு தனது ஆணையில் கூறியுள்ளது. இந்த ஆணையின்படி, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு, உரிய உத்தரவுகளை பிறப்பிடுக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மதத்திற்கு தாழுவும் அனைவருக்கும் முஸ்லிம் பி.சி. என இனி சாதி சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளது.

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: