பத்து ஆண்டு கால பாஜக ஆட்சி - ஒரு பார்வை....!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் உருவாகி, தற்போது வரை நீடித்து வருகிறது. அதாவது, கடந்த பத்து ஆண்டு காலமாக பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் தங்களது ஆட்சியே நீடிக்கும் என பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள். நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியை உருவாக்கிவிட்டதாக அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதாக முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். பாஜகவினர் சொல்லும்படி, நாட்டில் உண்மையில் வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதா?, மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பி ஆய்வு செய்தால், பதில் இல்லை என்றே வருகிறது. கடந்த பத்து ஆண்டு கால பாஜக ஆட்சி குறித்து நாம் கொஞ்சம் அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
பொதுத்துறை நிறுவனங்கள்:
நாட்டின் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களின் ஆட்சி காலத்தில் மக்களின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சியில் 33 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 66 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் ஆட்சியில், 23 பொதுத்துறை நிறுவனங்களும், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் 17 பொதுத்துறை நிறுவனங்களும், ராஜீவ் காந்தி ஆட்சியில் 16 பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.
பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் இருந்தபோது 14 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் 5 பொதுத்துறை நிறுவனங்களும், ஐ.கே.குஜ்ரால் ஆட்சியில் 3 பொதுத்துறை நிறுவனங்களும், தேவ கவுடா ஆட்சியில் 3 பொதுத்துறை நிறுவனங்களும், வி.பி.சிங் ஆட்சியில் 2 பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. இப்படி முந்தைய பிரதமர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பணி ஆற்றிய நிலையில், தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஆட்சியில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்பட்டன என்ற கேள்வி எழுகிறது.
இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றே வருகிறது. கடந்த பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பொதுத்துறை நிறுவனத்தையும் கூட ஏற்படுத்தவில்லை. மாறாக முந்தைய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறார். ஒன்றிய அரசுக்கு நிதி திரட்ட வேண்டும் என இலக்கை வைத்து, தொழில் அதிபர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறார். இதுதான், பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியின் சாதனையாக இருந்து வருகிறது.
பாஜகவின் ஆட்சியின் அவலங்கள்:
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் அவலங்கள் ஏராளமாக இருந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றின் பட்டியலை நாம் இங்கே பார்ப்போம். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு காரணமாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தார்கள். எம்.டி.என்.எல். நிறுவனம் 755 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 54 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. அனைத்து வங்கிகளும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. வங்கிகளில் கடன் வாங்கிய மிகப்பெரிய தொழில் அதிபர்களில் 36 பேர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டனர். நாட்டின் வெளிநாட்டு கடன் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துவிட்டது. பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அதிகமான மக்கள் வறுமையில் வாழும் தேசம் இந்தியா என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடக சுதந்திரம் இல்லாத தேசம் இந்தியா என ஆய்வுகள் கூறுகின்றன. ரயில்வே துறைகளும் விற்பனை வர உள்ளன. ஒருசில பெரிய நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட்டுள்ளது. கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் 55 ஆயிரம் கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்படாமல் உள்ளன. கார்களை வாங்கும் அளவுக்கு மக்களின் பொருளாதார நிலை இன்னும் உயரவில்லை. பாரம்பரியங்கள் மிக்க செங்கோட்டை உள்ளிட்ட இடங்கள் வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் வாழத்தகுதி இல்லாத நாடு இந்தியா என்றும் உலக மனித உரிமை கழகம் குற்றம்சாட்டுகிறது. மருத்துவம் திருட்டு தொழிலாக மாறிவிட்டது. நீதித்துறை, ஆளுநர் பதவிக்கு தீர்ப்பு எழுதும் துறையாக மாறிவிட்டது.
முப்பது சதவீத இந்தியர்கள் இரத்த அழுத்தம், இருதய நோயாளிகள் என உலக சுகாதார நிறுவனம் புள்ளிவிவரங்களை தெரிவிக்கிறது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின் மக்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. கட்டிட தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள். கட்டுமான பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டன. வளர்ச்சி என்று பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது வைத்துள்ள கடன் 205 லட்சம் கோடி ரூபாய் என புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இப்படி ஆயிரம் பிரச்சினைகள் நாட்டில் நிலவிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அதுகுறித்து பாஜக ஆட்சியாளர்கள் எந்தவித கவலையும் அடையவில்லை. மாறாக, ராமர் கோவில் திறந்து அனைத்து பிரச்சினைகளையும் மூடி மறைத்து வருகிறார்கள்.
ஒரே நம்பிக்கை இந்தியா கூட்டணி:
கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு நிலைகளிலும் பாஜக ஆட்சியாளர்கள் நாட்டை சீரழித்துவிட்டார்கள். நாட்டை மிகவும் பின்நோக்கி அழைத்துச் சென்ற அவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். அதற்காக பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற தொடங்கி விட்டார்கள். மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தற்போதைய நிலையில், நாட்டின் ஒரே நம்பிக்கை இந்தியா கூட்டணி என உறுதியாக கூறலாம். இந்தியா என்றால், விவசாயிகளின் செழிப்பு, இந்தியா என்றால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, இந்தியா என்றால் பெண்களின் உரிமை., இந்தியா என்றால் தொழிலாளர்களின் சக்தி, இந்தியா என்றால் மக்களின் பங்கேற்பு, இந்தியா என்றால் அன்பின் வார்த்தை, இந்தியா என்பது ஏழைகளின் குரல், இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவை உலக அளவில் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் வலிமை இந்தியா கூட்டணிக்கு மட்டுமே உள்ளது.
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், டி.கே.சிவக்குமார், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, பினராயி விஜயன், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், போன்ற உயர்ந்த இலட்சியம் கொண்ட தலைவர்கள், இந்தியா கூட்டணியில் உள்ள அற்புதமான தலைவர்கள். இவர்களின் பேச்சுகள், எழுத்துக்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள், பணிகள் அனைத்தும், நாட்டின் ஒற்றுமைக் குறித்தும் வளர்ச்சிக் குறித்தும் மட்டுமே இருக்கும். மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச மாட்டார்கள். மாறாக, மக்கள் மத்தியில் அன்பை விதைப்பார்கள். சகோதர பாசத்தை இணைப்பார்கள். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களது பங்களிப்பை அளிப்பார்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியம் உள்ள தலைவர்கள் மூலம் மட்டுமே, நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.
மாறாக வெற்று முழக்கங்களை எழுப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, அரசியல் செய்யும் பாஜக உள்ளிட்ட பாசிச கட்சிகளால், நாடு உண்மையான முன்னேற்றத்தை அடையவே அடையாது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தங்களுக்கு உள்ள வாக்கு உரிமையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தங்களது ஜனநாயகக் கடமையை, நாட்டின் உண்மையான, வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டும், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அமைதியாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை உள்வாங்கிக் கொண்டும், ஆற்ற வேண்டும். நாட்டு மக்கள் தங்களது வாக்குரிமைய மூலம் சரியான முறையில் ஆற்றும் ஜனநாயக கடமை மூலம் மட்டுமே இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும். இதை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment