சிறுபான்மை மொழியினை தாய்மொழியாககொண்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு....!
தமிழக அரசு அரசாணை வெளியீடு.....!!
சென்னை, மார்ச்13-தமிழகத்தில் தமிழ்மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய் மொழியாக கொண்ட மாணவ மாணவியர், கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் இருந்து 2023-24-ஆம் ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாணையில் விளக்கம்:
இதுதொடர்பாக பள்ளிக் கல்விதுறை நேற்று (12.03.2024) அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2006-2007ஆம் கல்வி ஆண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2020 முதல் 2022 ஆம் கல்வியாண்டு வரை மூன்றாண்டுகளுக்கு மட்டும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்க அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததாக அந்த ஆணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுவதில் இருந்து விலக்கு அளிப்பது 2023ஆம் ஆண்டிற்கும் கூட பொருந்தும் என தீர்ப்பளித்தாக கூறியுள்ள அரசு, தமிழக மொழி சிறுபான்மை பேரவையினர், மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாட ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கோரிக்கை ஏற்பு:
தமிழக மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையின் அடிப்படையில் 2023-24ஆம் கல்வியாண்டில், தமிழ் மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், அவர்களின் விருப்பப்படி, வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க பரிசீலிக்கலாம் என்றும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, 2023-24ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதில் இருந்து விலக்களித்து அனுமதிக்க அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர், தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதாக ஆணையில் கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழக மொழி சிறுபான்மையினர் பேரவையின் கோரிக்கை மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துகளை கவனத்துடன் ஆய்வு செய்த தமிழக அரசு, அதனை ஏற்று தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 பிரிவு-5இல் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழ்மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவர்களின் சிறுபான்மை தாய்மொழிப் பாடத்தினை தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுவதாகவும், இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment